உன்னி உனைநேர் உணர்ந்தாயேல் துன்னி யிருந்த துயரெல்லாம் ஒழியும் - ஞானம், தருமதீபிகை 944

நேரிசை வெண்பா

உன்னி உனைநேர் உணர்ந்தாயேல் ஊழியாய்த்
துன்னி யிருந்த துயரெல்லாம் - மன்னும்
ஒளிமுன் இருள்போல் ஒழியும்; ஒழியாத்
தெளிவின் படைவாய் சிறந்து. 944

- ஞானம், தருமதீபிகை,
- கவிராஜ பண்டிதர் ஜெகவீர பாண்டியனார்

பொருளுரை:

உன்னை உண்மையாக நீ உணர்ந்தால் ஊழி காலமாய்த் தொடர்ந்துள்ள துன்பங்கள் எல்லாம் ஒளி முன் இருள் போல் ஒருங்கே ஒழிந்து போகும்; உயர்ந்த பேரின்பமாய்ச் சிறந்து விளங்குவாய்; அந்தச் சிறப்பே பிறப்பின் பயனாகும் என்கிறார் கவிராஜ பண்டிதர்.

அறிவு மனிதனுக்கு உறுதியாய் அமைந்திருக்கிறது; இருந்தும் அது அயலே திரிந்து மயலையே உணர்ந்து மறுகி உழலுகின்றது. எதை அறிய வேண்டுமோ அதை அறிந்த போதுதான் ஞானம் என்னும் மேன்மையான நிலையை அறிவு மருவி மிளிர்கிறது. உரிமையை உணர்வது பெருமையுறுகிறது.

பல பிறவிகளிலும் தொடர்ந்து வந்த துன்பங்கள் அடியோடு தொலைந்து போகும்படி எந்தப் பிறவி விரைந்து முயலுகிறதோ அது ஞானப் பிறவியாய் உயர்ந்து திகழ்கிறது. அல்லல் யாவும் நீக்கி அதிசய ஆனந்தம் அருள வல்ல இந்த ஞானம் எளிதில் அமையாது. அரிய புண்ணியத்தின் பயனாய் அருமையாய் அமையும். தருமத்தின் சோதியே ஞானமாய் மருவியுள்ளது.

நலமான இனிய கருமங்களைப் பலனை எதிர்பாராமல் பிறவுயிர்களுக்கு இதமாய் ஒருவன் செய்துவரின் அவன் உயிரில் ஏறியிருந்த மாசுகள் கழிந்து; தேசுகள் வளர்ந்து உள்ளம் புனிதம் ஆகிறது; அந்தச் சித்த சுத்தியால் ஞானம் தெளிவாய் ஒளிவீசி எவ்வழியும் திவ்விய இன்பம் அருளுகிறது.

கலி விருத்தம்

பலன்விழை வுறாதுகரு மம்பல இயற்றின்
அலகறு பவத்தினுள பாவமறும்; அற்றால்
நிலவிய மனம்புனிதம் ஆவது நிகழ்ந்தால்
மலைவிலுயர் ஞானம்வரும்; வரிலடைவன் வீடே. - கூர்ம புராணம்

புனித கருமத்தின் புண்ணியத்தால் ஞானம் விளைகிறது; அது பேரின்ப வீட்டைத் தருகிறது என இது குறித்துள்ளது.

தரும நீர்மைகள் தழுவி வருமளவு அறிவு தெளிவாய் விழுமிய நிலையில் விளங்கி வருகிறது. சித்த சுத்தியும் தத்தவ ஞானமும் ஒத்த நிலையில் நித்திய சோதிகளாய் நிலவியுள்ளன. எந்த உள்ளம் புனிதமாய் இனிமை தோய்ந்து வருகிறதோ அந்த மனிதனிடம் அதிசய மகிமைகள் வெள்ளமாய் வந்து குவிகின்றன. சித்த சுத்தி முத்தியின் நிலையமாகிறது.

உயர்ந்த மனிதனுடைய சிறந்த அறிவுக்குப் பயன் தன்னை அறிந்து இன்னல் நீங்குவதே. உடல், உயிர் என மருவியுள்ள இருவகை நிலைகளிலும் தனது உண்மை நிலையை உரிமையோடு ஊன்றி உணர்ந்தவன் உயர்ந்த ஞானியாய் உய்தி பெறுகிறான். அவ்வாறு உணராதவன் அஞ்ஞானியாய் இழிந்து அவலம் அடைகிறான். மடமை இருள் ஒழியின் மகிமை ஒளி வெளியாம்.

தனது உண்மையான ஆன்ம நிலையை உணராமல் வேறு எவ்வளவு மேன்மைகளை வெளியே பெற்றிருந்தாலும் அவ்வளவும் மாய மருள்களேயாம். மடமையால் நேர்ந்த பிறவியில் எவ்வழியும் வெவ்விய மையல் இருள்களே மண்டியுள்ளன. இருள் நிறைந்த இடம் யாண்டும் பயங்கரமாய் நீண்ட துயரங்களே நிறைந்திருக்கும்; அதுபோல் மருள் மலிந்த பிறப்பு எவ்வழியும் குருடுபட்டுத் துன்பங்களே .தொடர்ந்து அடர்ந்திருக்குமாதலால் அது ஒழிந்த போதுதான் பேரின்பம் சேரும். நீண்ட காலமாய் இருள் மூண்டு இருந்தாலும் ஒளி வந்தவுடனே அந்தக் கொடிய இருட்டு அடியோடு நீங்கிப் போகும்; அதுபோல் ஊழியும் நீங்காமல் தொடர்ந்து வந்த மாய மருள் ஞான ஒளி வீசியபோது ஒருங்கே நாசமாய் ஒழிந்து போய்விடும்.

பிறவித் துயர்கள் பெருகி அறியாமையில் மறுகி அவலமாய் அலைந்து திரிந்து கவலைகளோடு தொடர்ந்து வந்த சீவன் ஞானம் அடைந்தவுடனே அல்லல்கள் யாவும் நீங்கி எல்லையில்லாத பேரின்ப நிலையை எய்தி நெடிது மகிழ்கின்றது.

தன்னை அறிந்தவன் சாமியாய் வாழ்கின்றான்:
பின்னை அறிந்தவன் பேயாய் அலைகின்றான்.

என்பது பழமொழியாய் வந்துள்ளது. ஞானயோகிகளின் நிலைகளையும் ஈன மோகிகளின் புலைகளையும் இம் முதுமொழி அதி விநயமாய் விளக்கி மதிநலம் அருளியுளது. அறியவுரியதை அறிக என அறிவு கூறியதில் கூரிய அறிவு நலம் குலவி மிளிர்கிறது.

பொறி புலன்கள் மருவியுள்ள உடல் பிணமாய் விழுந்து விடும்; புலையான இந்தப் பிணத்தை நிலையென்று நம்பிப் பேதையாயிழிந்து போகாதே, என்றும் அழியாத உயிரையே நீ என்று உணர்ந்து மேதையாய் உயர்ந்து மேலான கதியைக் காணுக என இது காட்டியிருக்கிறது. இந்த ஞானக் காட்சியை நாடிக் கண்டு ஆன்ம ஆட்சியை அடைந்து கொள்ளவேண்டும்.

சீவனை உண்மையாய் அறிந்தபோது அங்கே சிவனையும் எண்மையாய்த் தெரிந்து கொண்டு, பேரின்ப வெள்ளம் பெருகக் காணுகிறான். தன்னை அறியவே தலைவனும் தெரிதலால் நிலையான ஆனந்த வாரி பெருகி வருகிறது.

வெண்டளை பயிலும் கலி விருத்தம்

தன்னை யறிந்து சிவனுடன் தானாக
மன்னும் மலக்குணம் மாளும் பிறப்பறும்
பின்அது நன்முத்தி சன்மார்க்கப் பேரொளி
நன்னர்த்து ஞானத்தின் முத்திரை நண்ணுமே. 28 - 13. நின்மலாவத்தை, எட்டாம் தந்திரம்

தன்னை அறியத் தனக்கொரு கேடில்லை
தன்னை அறியாமல் தானே கெடுகின்றான்
தன்னை அறியும் அறிவை அறிந்தபின்
தன்னையே அற்சிக்கத் தானிருந் தானே. 1

- 14. அறிவுதயம், எட்டாம் தந்திரம், பத்தாம் திருமுறை, திருமூலர் திருமந்திரம்

ஞான ஒளியால் தன்னை அறிந்த பொழுது மனிதன் அடையும் மகிமைகளைத் திருமூலர் இவ்வாறு தெளிவாய் விளக்கியிருக்கிறார், வெய்ய துயர்களை நீக்கி மெய்யுணர்வு மேன்மை தருகிறது.

அறிவுடைய அரிய மனிதப் பிறவியை அடைந்த மனிதன் உரிமையோடு விரைந்து அறிய வுரியதை அறிந்து அடையத் தகுந்ததை அடைந்து கொள்ள வேண்டும். அங்ஙனம் கொண்ட போதுதான் தான் கண்ட பிறவியைக் கண்ணியப் படுத்தி எவ்வழியும் திவ்விய நிலையில் உயர்ந்த புண்ணியவான் ஆகிறான்.

யாண்டும் விடாமல் நீண்டு தொடர்ந்து அடர்ந்து தன்னைப் பற்றி வந்த அல்லல்களை முற்றும் ஒழித்தவனே வெற்றி வீரனாய் விளங்கி நிற்கிறான். தனது சீவன் சிவம் ஆக நேர்ந்தவனைத் தேவர் யாவரும் வியந்து நோக்கி உவந்து புகழ்கின்றார்.

துன்ப இருளை நீக்கியருளும் இன்ப ஒளியாய் ஞானம் எழில் மிகுந்துள்ளது. விழுமிய அதனால் வியன் நிலையுறுக என்கிறார் கவிராஜ பண்டிதர்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (16-Jan-22, 11:21 am)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 17

சிறந்த கட்டுரைகள்

மேலே