பாசத் தொடர்பு நீசம் புரியும் நிலைதெரியின் தன்னைக் காத்து நிற்பர் துறந்து - துறவு, தருமதீபிகை 954
நேரிசை வெண்பா
பாசத் தொடர்பு படுதுயர மாய்வளர்ந்து
நீசம் புரியும் நிலைதெரியின் - நாசம்
படியாமல் தன்னைப் பரிந்தினிது காத்துத்
துடியாமல் நிற்பர் துறந்து. 954
- துறவு, தருமதீபிகை,
- கவிராஜ பண்டிதர் ஜெகவீர பாண்டியனார்
பொருளுரை:
பந்த பாசங்களின் தொடர்பு எந்த வழியும் துயரமாய் நீண்டு யாண்டும் அவல இழிவுகளே புரியுமாதலால் அந்த நிலைகளை உணர்ந்து விரைந்து விலகிய துறவிகள் உயர்ந்த ஆனந்த நிலையில் ஒளி மிகுந்து தெளிவமைந்து உள்ளனர் என்கிறார் கவிராஜ பண்டிதர். துயர் நீங்கி உயிருயரும் வழியை இது விழி தெரிய விளக்கியுளது. மருவிய பற்று விடின் பிறவி அற்று விடும்.
பாசம் என்னும் சொல் கட்டு, கயிறு, அழுக்கு முதலிய பொருள்களை உணர்த்தி வரும். உயிர் வாசனையாய் ஒட்டி நிற்கும் பற்றினை இங்கே பாசம் என்றது. நீசமான துயரங்களெல்லாம் இந்தப் பாசத்தாலேயே படர்ந்து தொடர்ந்து வருகின்றன. ஆசையே அல்லல்களுக்கு ஆதி மூலமாயுள்ளது.
பாச நாசன் என்பது ஈசனுக்கு ஒரு பெயர். தன்னை நேசித்துப் பூசித்து வருவாரது பாசத்தை ஒழிப்பவன், தனக்கு யாதொரு பாசமும் எவ்வழியும் இல்லாதவன் என்னும் பொருளை அப்பெயர் மருவியுளது. அநாதி, மலமுத்தன், பற்றற்றான், பரிசுத்தன், நித்திய நிருமலன் எனப் பரமன் நிலவியுள்ளமையால் அவனது தலைமையும் தகைமையும் அறியலாகும்.
பாசம் படிந்துள்ளமையால் சீவனுக்குப் பசு என்று ஒரு பெயரும் வந்தது. ஈசனை நேரே அடைய ஒட்டாமல் உயிரைப் பிணித்து நீசப்படுத்தியிருத்தலால் பாசம் மோசமான நீசம் என நேர்ந்தது. பாசம் பற்றியிருக்கும் வரையும் பிறவித் துயரங்களில் அழுந்தி உயிர் ஊனமாய் உழந்து சுழல்கிறது; அது அற்று விடின் அப்பொழுதே ஈசனை அடைந்து இன்புற்றிருக்கின்றது.
பொல்லாத தீயரைச் சேரின் மனிதன் தீயனாய் அல்லலே அடைகிறான். நல்ல தூயரைக் கூடின் நல்லவனாய் நலம் பல பெறுகிறான். சேர்ந்தபடியே யாவும் நேர்ந்து வருகின்றன.
பாசம் நீங்காத வரையும் நீசமும் நாசமும் சீவனை நிலை குலைத்து வருகின்றன; அது நீங்கி ஒழிந்தால் ஈசனாய்ப் பேரானந்தத்தில் திளைக்கிறது.ஆன்மா என்னும் சொல் பரமான்மாவின் தொடர்பினை யுடையது. கடவுளை எவனும் கண்டதில்லை; ஆயினும் தன்னைக் கொண்டு மனிதன் அதனை உண்டென்று உறுதி செய்து உரிமை பூண்டு உழுவலன்போடு கருதி வருகிறான்.
உடலோடு கூடி வாழுகின்ற தன்னை மனிதன் முதலில் அறிகின்றான்; அதன்பின் தன்னைத் தாங்கியுள்ள நிலத்தைத் தெரிகிறான்; முடிவில் தன்னையும் உலகத்தையும் இயக்கி அருள்கின்ற இறைவன் ஒருவன் இருக்க வேண்டும் என்று அனுமானமாய்த் துணிந்து கொண்டான். மனிதன் இவ்வாறு துணிந்ததை மதிநலமுடைய முனிவர்கள் விதி முறையாய் வகுத்து மூன்று பொருள்களுக்கும் ஏன்ற பேரை இசைத்து ஆன்ற நூல்களாய் அருளியுள்ளனர். மூவகை நிலைகள் முதன்மையாய் வந்தன.
உலகம், உயிர், பரம் என வேதாந்திகள் கூறுகின்றனர்.
பாசம், பசு, பதி எனச் சித்தாந்திகள் மொழிகின்றனர்.
Matter soul God என்று மேல்நாட்டார் சொல்கின்றனர்.
நடுவில் உள்ள உயிர் எதைத் தோய்ந்ததோ அதன் வண்ணமாய் வாய்ந்து வருகிறது. சத்தைச் சார்ந்தால் சத்து ஆகிறது; அசத்தைச் சேர்ந்தால் அசத்து ஆகிறது; ஆகவே சதசத்து எனவொரு பெயர் சீவனுக்கு நேர்ந்தது. பாசம் முற்றும் அற்றபோதுதான் உயிர் ஈசனைச் சேர்ந்து உயர் இன்பம் நுகர்கிறது.
நேரிசை வெண்பா
பாசம் கழன்றால் பசுவுக்(கு) இடம்பதியாம்;
ஊசல் வடம்கழன்ற(து) ஒவ்வாதோ - நேசித்த
பற்றற்ற கண்ணே பிறப்பறுக்கும் பாட்டுமக்கோ
மற்றைச் சமயமெங்கும் ஆம்.
- ஒழிவிலொடுக்கம்
ஊசல் கயிற்றில் சிக்குண்டு அலைந்தவன் அந்தக் கயிறு அறுந்துவிடின் நிலத்தைச் சேர்கின்றான்; அதுபோல் பாசம் அற்றவுடனே சீவன் பதியை அடைந்து கொள்ளுகிறான் என ஓர் உவமையை இணைத்துக் காட்டி இது நயமாய் விளக்கியுள்ளது. நிலையற்ற ஊஞ்சலில் அகப்பட்டு நிலைகுலைந்து சுழன்று உழன்று வந்தவன் அதை விட்டதும் நிலையான இடத்தை அடைந்து சுகமாயிருப்பது போல் பாசத்தில் சிக்கிப் பிறவிச் சுழலில் உழந்து பெருந்துயரங்களை அடைந்து வந்த உயிர் அது ஒழிந்தவுடனே நித்தியமான நிமலனைச் சேர்ந்து பேரானந்தம் நுகர்ந்துள்ளமையை இந்த உவமையால் நுணுகி உணர்ந்து கொள்ளுகிறோம்.
சீவன் ஈசனை அடையமுடியாதபடி இடையே தடையாய்ப் பாசம் மிடைந்து நிற்றலால் அது உயிர்ப்பிணி, துயர்ப்பகை என நேர்ந்தது. தீராத நோய் தீரின் சேராத சுகம் சேர வரும்.
நேரிசை வெண்பா
தாயோடு பிள்ளை தலைக்கூட ஒட்டாமல்
பேயோடிச் செய்கின்ற பீழைபோல் - நோயோடு
பாசம் உயிரைப் பரமனிடம் சேராமல்
நீசமே செய்யும் நிலைத்து.
பேய் வாயில் அகப்பட்ட பிள்ளை போல் பாசத்தின் வாயில் அகப்பட்டு சீவன் பரிதவிக்கும் நிலையை இது நயமாய்க் காட்டியுள்ளது. ஈசன் தாய், பாசம் பேய், சீவன் சேய். முன்னும் பின்னும் உள்ள உறவுரிமைகளையும் இடையே தடையாய் நிற்கும் இழிபகையையும் தெளிவாயுணர்பவர் வழி காண நேர்வர்; உறவு தெரிந்து துறவு தோய்ந்து உய்வு கொள்ளுக.
வெண்டளை பயிலும் கலிவிருத்தம்
ஆய பதிதான் அருட்சிவ லிங்கமாம்
ஆய பசுவும் அடல்ஏ றெனநிற்கும்
ஆய பலிபீடம் ஆகும்நற் பாசம்ஆம்
ஆய அரன்நிலை ஆய்ந்துகொள் வார்கட்கே. 7
- எட்டாம் தந்திரம் - 16. பதி பசு பாசம் வேறின்மை, பத்தாம் திருமுறை, திருமந்திரம்
உன் பாசப் பற்று அடியோடு ஒழிய வேண்டுமானால் யாதொரு பற்றும் இல்லாத ஈசனை நன்கு பற்றிக் கொள்ள வேண்டும்.
பற்றுக பற்றற்றான் பற்றினை; அப்பற்றைப்
பற்றுக பற்று விடற்கு. 350 துறவு
விடாது பற்றி வந்த பாசம் விட்டு நீங்க விரும்பினால் ஈசனை விடாமல் பற்றிக் கொள்ளுக என வள்ளுவர் இங்ஙனம் சீவர்களுக்குப் புத்தி போதித்திருக்கிறார். பற்றுஅற்றான் என ஈசனுக்கு ஒரு பேரிட்டது அதனை அறாதவரது நீசம் தெரிய வந்தது.
ஊருண் கேணி உண்துறை தொக்க
பாசி அற்றே பசலை, காதலர்
தொடுவுழித் தொடுவுழி நீங்கி
விடுவுழி விடுவுழிப் பரத்த லானே. 399 குறுந்தொகை
தன் தலைவன் தன்னைத் தழுவிய பொழுது பசலை நீங்கி விடுகிறது; தழுவியவுடன் அது உடலில் பரந்து கொள்கிறது என ஒரு தலைவி இங்ஙனம் மறுகி மொழிந்துள்ளாள். பதியைக் கூடியுள்ள பொழுது பாசம் ஓடி விடுகிறது; விலகியவுடனே அது ஒட்டிக் கொள்கிறது எனப் பசு ஆகிய தலைவி பரிந்து வருந்தியபடியாய் இது ஈண்டு அறிந்து கொள்ள வந்தது.
எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
(காய் 3 மா அரையடிக்கு)
பாசிபடு குட்டத்திற் கல்லினைவிட் டெறியப்
..படும்பொழுது நீங்கியது விடும்பொழுதிற் பரக்கும்;
மாசுபடு மலமாயை அருங்கன்மம் அனைத்தும்
..அரனடியை உணரும்போ தகலும்பின் அணுகும்;
நேசமொடுந் திருவடிக்கீழ் நீங்காதே தூங்கும்;
..நினைவுடையோர் நின்றிடுவர் நிலையதுவே யாகி
ஆசையொடும் அங்குமிங்கு மாகியல மருவோர்
..அரும்பாச மறுக்கும்வகை அருளின்வழி யுரைப்பாம். 39
- 024 சாதனவியல் - எட்டாஞ் சூத்திரம், சிவஞானசித்தியார்
ஈசனை நினைந்து உருகி வரும் அறவோரே பாசம் நீங்கிப் பரமானந்த நிலையை அடைவர் என இது உணர்த்தியுள்ளது.
பாசவேர் அறுக்கும் பழம்பொருள். – திருவாசகம், ஈசனை மாணிக்கவாசகர் இவ்வாறு குறித்திருக்கிறார்.
பாசங்கள் நீக்கி என்னை உனக்கே அறக்கொண்டு. - திருவாய்மொழி
தன் பாசத்தை நீக்கித் தன்னைத் தனக்கே உரிமையாக்கிக் கொள்ளும்படி திருமாலை நோக்கி நம்மாழ்வார் இங்ஙனம் வேண்டியிருக்கிறார். பாசம் ஒருவி ஈசனை மருவுக.
திருத்தாண்டகம்
எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
(காய் காய் மா தேமா அரையடிக்கு)
பாசத்தைப் பற்றறுக்க லாகு நெஞ்சே
..பரஞ்சோதி பண்டரங்கா பாவ நாசா
தேசத் தொளிவிளக்கே தேவ தேவே
..திருவாரூர்த் திருமூலட் டானா வென்றும்
நேசத்தை நீபெருக்கி நேர்நின் றுள்கி
..நித்தலுஞ் சென்றடிமேல் வீழ்ந்து நின்று
ஏசற்று நின்றிமையோ ரேறே யென்றும்
..எம்பெருமா னென்றென்றே யேத்தா நில்லே. 9
- 031 திருவாரூர், ஆறாம் திருமுறை, திருநாவுக்கரசர் தேவாரம்
பாசப்பற்று அறும் வகையை அப்பர் இப்படி அறிவித்துள்ளார். ஈசனைக் கருதி உருகின் பாசங்கள் நாசமாகின்றன.
அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
பாச மான களைவார் பரிவார்க் கமுத மனையார்
ஆசை தீரக் கொடுப்பா ரலங்கல் விடைமேல் வருவார்
காசை மலர்போன் மிடற்றார் கடவூர் மயான மமர்ந்தார்
பேச வருவா ரொருவர் அவரெம் பெருமா னடிகளே. 7
- 080 திருக்கடவூர் மயானம், இரண்டாம் திருமுறை, திருஞானசம்பந்தர் தேவாரம்
குறள் வெண்செந்துறை
பாசம் அறுப்பீர்காள், ஈசன் அணியாரூர்
வாச மலர்தூவ நேச மாகுமே. 6 - 091 திருவாரூர், முதல் திருமுறை, திருஞானசம்பந்தர் தேவாரம்
பாசம் நீங்க நேர்ந்தவர் ஈசன்பால் நேசம் ஓங்கி நிற்பர் என ஞானசம்பந்தர் இவ்வண்ணம் நயமாய் அருளியுள்ளார்.
குறள் வெண்செந்துறை
பாராசை அற்றிறையைப் பற்றறநான் பற்றிநின்ற
பூராய மெல்லாம் புகன்றுவா பைங்கிளியே. 39 - 44. பைங்கிளிக்கண்ணி, தாயுமானவர்
எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
(காய் காய் மா தேமா அரையடிக்கு)
விரும்புற்ற தவம்விரதம் சீலம் எல்லாம்
..மேல்விளைவென்(று) அறிந்தெவையும் விமலன் கூத்தென்(று)
இரும்புற்ற மனமழலின் மெழுகாய் என்றும்
..யான்செய்தேன் பிறர்செய்தார் எனும்கோள் நீக்கி
அரும்புற்றங்(கு) எண்ணுதியான் என்னும் பாசத்(து)
..அவாமருவும் புறப்பற்றோ(டு) அகப்பற் றான
பெரும்பற்றை அகன்றருளைப் பெறுவோர் ஞானப்
..பெரும்பற்றப் புலியூரைப் பிரியார் தாமே.
– சிவஞான தீபம்
நேரிசை வெண்பா
பாசத் தளையறுத்துப் பாவக் கடல்கலக்கி
நேசத் தளைப்பட்டு நிற்குமே - மாசற்ற
காரார் வரையீன்ற கன்னிப் பிடிஅளித்த
ஓரானை வந்தென் உளத்து. – காசிக் கலம்பகம்
பாச இருள்துறந்து பல்கதிரில் சோதிவிடும்
வாச மலர்வதன மண்டலமும் - கந்தர்கலி
உயிர்களை நீசப்படுத்தித் துயருறுத்துகிற பாச இருள் ஈசன் அருளையடையவே அடியோடு உடைந்து அயலே ஒழிந்து போகுமென்பதை இவற்றால் உணர்ந்து கொள்கிறோம்.
புலையாய் நேர்ந்துள்ள உலக பாசங்கள் யாண்டும் உனக்குத் தொலையாத துன்பங்களே தரும்; எவ்வழியும் நாசப்படுத்துகின்ற அந்த வெவ்விய நீசத் தொடர்புகளை நீங்கி ஈசனைத் தொடர்ந்து நின்று என்.றும் நிலையான பேரின்ப நிலையைப் பெறுக என்கிறார் கவிராஜ பண்டிதர்.