படாஅ பெருஞ்செல்வம் எய்தியக் கண்ணும் பிறர்க்கு – நாலடியார் 142
நேரிசை வெண்பா
’மை’ - ’ம’ குறிலாக மோனையும், ‘ய்’ இடையின ஆசு, ‘த’ ‘தி’ எதுகை)
சான்றாண்மை சாயல் ஒழுக்கம் இவைமூன்றும்
வான்றோய் குடிப்பிறந்தார்க் கல்லது - வான்றோயும்
மைதவழ் வெற்ப! படாஅ பெருஞ்செல்வம்
எய்தியக் கண்ணும் பிறர்க்கு. 142
- நாலடியார்
பொருளுரை:
வானளாவிய மேகங்கள் தவழ்கின்ற மலைகளையுடைய நாடனே!
பெருந்தன்மை, மென்மை, தொடர்ந்து நற்செயல்களைச் செய்தல் என்னும் இவை மூன்றும் உயர்வு பொருந்திய குடியிற் பிறந்தவர்க்கல்லது மிக்க செல்வம் உண்டான காலத்தும் பிறர்க்கு உண்டாகாது.
கருத்து:
நல்லொழுக்கங்கள் உயர்குடிப்பிறந்தோர்க்கு இயல்பாகவே மலரும்.
விளக்கம்:
ஒழுகுதலாவது ஒன்றைத் தொடர்புறச் செய்தல், அது கடைப்பிடியென்றறிய வேண்டியது,
பெருஞ் செல்வம் எய்தியக்கண்ணும் பிறர்க்குப் படா வெனவே, அஃதெய்தியக்கண் உயர்குடிப் பிறந்தார்க்கு இன்னும் அவ்வியல்புகள் சிறந்து தோன்றுமென்பது பெறப்பட்டது..