குடிப்பிறந்தார் குன்றா வொழுக்கமாக் கொண்டார் – நாலடியார் 143

இன்னிசை வெண்பா

இருக்கை யெழலும் எதிர்செலவும் ஏனை
விடுப்ப ஒழிதலோ டின்ன குடிப்பிறந்தார்
குன்றா வொழுக்கமாக் கொண்டார் கயவரோ(டு)
ஒன்றா வுணரற்பாற் றன்று. 143

– நாலடியார்

பொருளுரை:

பெரியோரைக் கண்டால் தன் இருக்கையிலிருந்து எழுதலும், சற்று எதிர் சென்று வரவேற்றலும்,

அவர் பிரியும்போது சற்றுப் பின்சென்று அவர்க்கு விடை தந்ததன் பின் பிரிந்து வருதலுமாகிய இத்தகைய பணிவுக் குணங்களை உயர்குடிப் பிறந்தார் குறைவுபடாத நல்லொழுக்கமாக மேற்கொண்டொழுகுவர்;

இத்தகுதி, கீழ்மைக்குணம் கொண்டோரிடம் மக்களாற் சிறந்ததொன்றாக உணர்ந்து கொள்ளுதற்கு உரியதன்று.

கருத்து:

உயர்குடிப் பிறந்தாரே பணிவின் உயர்வை அறிந்து கொள்ளுந் தகுதியுடையர்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (16-Jan-22, 6:00 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 21

சிறந்த கட்டுரைகள்

மேலே