மன்னற் கிளையான் தொழில் மூன்று - திரிகடுகம் 58
நேரிசை வெண்பா
(’ழ’ ‘ளி’ இடையின எதுகை)
பழமையை நோக்கி அளித்தல் கிழமையால்
கேளிர் உவப்பத் தழுவுதல் - கேளிராய்த்
துன்னிய சொல்லால் இனம்திரட்டல் இம்மூன்றும்
மன்னற் கிளையான் தொழில். 58
- திரிகடுகம்
பொருளுரை:
நண்பரின் பழையராகுந் தன்மையைப் பாராட்டி அவருக்கு வேண்டுவன கொடுத்துக் காப்பாற்றுதலும், சுற்றத்தார் மகிழும்படி உரிமையால் அணைத்தலும், உறவினராய் நெருங்கிய அன்பு மிகுந்த இன்சொற்களால் நல்லினத்தைக் கூட்டலும் ஆகிய இந்த மூன்றும் இளவரசனுடைய தொழில்களாம்.
துன்னிய - நெருங்கிய அன்பு மிகுந்த
கருத்துரை:
இளவரசனாய் இருப்பவன் முன்னோரோடு பழகிவந்த அமைச்சர் முதலியோரைப் பேணுதலும், இனத்தாரை உரிமையுடன் காப்பாற்றுதலும், நல்லவரைத் தனக்கு நட்பாக்குதலும் செய்ய வேண்டும் எனப்பட்டது.
பழமையாவது பழமையோர் உரிமையால் செய்வனவற்றைச் சிறிதும் சிதையாது அவர்க்கு உடன்படும் நட்பு.
அமைச்சன் அரசனுக்குக் கிளையாயிருத்தல் பற்றி மன்னற்கிளையான் அமைச்சன் எனலுமாம்.