இளையனாய்க் கள்ளுண்டு வாழ்வான் குடிமை உள்ளன போலக் கெடும் – திரிகடுகம் 59

நேரிசை வெண்பா

கிளைஞர்க் குதவாதான் செல்வமும் பைங்கூழ்
விளைவின்கண் போற்றான் உழவும் - இளையனாய்க்
கள்ளுண்டு வாழ்வான் குடிமையும் இம்மூன்றும்
உள்ளன போலக் கெடும். 59

- திரிகடுகம்

பொருளுரை:

சுற்றத்தார்க்கு உதவாதவனுடைய பொருளும்,

பசிய பயிர் தனக்குப் பயன் கொடுக்குங் காலத்தில் அதனைக் காக்கும் இயல்பில்லாதவனுடைய உழவுத் தொழிலும்,

இளையனாயிருந்து கள்ளைக் குடித்து வாழ்கின்றவனுடைய குடிப்பிறப்பும் ஆகிய இம்மூன்றும் நிலை நிற்பன போலத் தோன்றி அழியும்.

கருத்துரை:

செழுங்கிளை தாங்காதான் செல்வமும், விளையுங் காலத்திற் காவாதான் பயிரும், இளமையிலேயே கள்ளுண்கின்றவன் நற்குடி வாழ்க்கையும் கெட்டுப்போம்.

கிளைஞர் - சுற்றத்தார், இளையன் - அறிவில் சிறியவன். பசுமை - இளமை.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (20-Jan-22, 5:31 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 26

சிறந்த கட்டுரைகள்

மேலே