திங்கள்போல் செல்லாமை செவ்வனேர் நிற்பினும் ஒப்புரவிற்கு ஒல்கார் குடிப்பிறந் தார் – நாலடியார் 148

இன்னிசை வெண்பா

ஒருபுடை பாம்பு கொளினும் ஒருபுடை
அங்கண்மா ஞாலம் விளக்குறூஉந் - திங்கள்போல்
செல்லாமை செவ்வனேர் நிற்பினும் ஒப்புரவிற்(கு)
ஒல்கார் குடிப்பிறந் தார் 148

- குடிப்பிறப்பு, நாலடியார்

பொருளுரை:

ஒரு பக்கம் இராகுவென்னும் பாம்பு பற்றிக் கொண்டாலும் தனது மற்றொரு பக்கத்தால் அழகிய இடமகன்ற பெரிய உலகத்தை ஒளிவிளங்கச் செய்யுந் திங்களைப் போல, வறுமையினால் மாட்டாமை நிலை நன்றாக முன் நிற்பினும் உயர்குடிப் பிறந்தார் பிறர்க்கு உதவி செய்யும் வகைக்குத் தளரமாட்டார்.

கருத்து:

பிறர்க்கு உதவும் வகையில் வறுமையிலும் குடிப்பிறந்தார் தளரார்.

விளக்கம்:

பாம்பு கொளல் என்பது, திங்களைக் கோள்பிடித்து அதனொரு பகுதியை மறைத்தல். வறுமையுடையார் சொல்லுஞ் செயலும் உலகில் செல்லாமை நினைந்து, அவ் வறுமை நிலையை ஆசிரியர் ‘செல்லாமை' யென்றே விதந்தார்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (27-Jan-22, 10:16 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 35

மேலே