அடக்கம் உடையவன் மீளிமை யின்னா - இன்னா நாற்பது 40

இன்னிசை வெண்பா

அடக்கம் உடையவன் மீளிமை யின்னா
துடக்கம் இலாதவன் தற்செருக் கின்னா
அடைக்கலம் வவ்வுதல் இன்னாஆங் கின்னா
அடக்க அடங்காதார் சொல். 40

- இன்னா நாற்பது

பொருளுரை:

ஐம்பொறிகளை அடக்கியவனது வலிமையுடன் கூடிய பொறுமையும் தவறு செய்வோர்க்குத் துன்பமாம்.

முயற்சியில்லாதவன் தன்னையே மதிக்கும் தற்பெருமை துன்பமாம்;

பிறர் அடைக்கலமாக வைத்த பொருளை கவர்ந்து கொள்ளுதல் துன்பமாம்;

அவ்வாறே, அறிவுடையோர் அடக்கவும், அடங்குதல் இல்லாதவர்க்குக் கூறும் சொல்லானாது துன்பமாம். .
மீளமை - பெருமிதமுமாம். துடக்கம் - வளைவு; உடல் வளைந்து வினைசெய்தற் கேற்ற முயற்சியை உணர்த்திற்று; தொடக்கம் என்று கொண்டு யாதானும் நற்கருமஞ் செய்யத் தொடங்குதல் என்றுரைப்பினுமாம்.

அடங்காதார் சொல் - அடங்காதார் அவையிற் கூறுஞ் சொல் எனினும் ஆம்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (28-Jan-22, 7:54 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 84

சிறந்த கட்டுரைகள்

மேலே