கொடுக்கும் பொருளில்லான் வள்ளன்மை இன்னா – இன்னா நாற்பது 39
இன்னிசை வெண்பா
கொடுக்கும் பொருளில்லான் வள்ளன்மை யின்னா
கடித்தமைந்த பாக்கினுட் கற்படுத லின்னா
கொடுத்து விடாமை கவிக்கின்னா வின்னா
மடுத்துழிப் பாடா விடல். 39
- இன்னா நாற்பது
பொருளுரை:
கொடுத்தற்குரிய பொருளில்லாதவனுடைய ஈகைத் தன்மை துன்பமாகும்;
கடித்தற்கு அமைந்த பாக்கில் கல் இருத்தல் துன்பமாகும்;
புலவனுக்கு பரிசில் கொடுத்துனுப்பாமை துன்பமாகும்;
பொருள் பெற்ற விடத்தில் புகழ்ந்து சொல்லாமல் விடுதல் பாடும் புலவனுக்குத் துன்பமாம்.
பிளந்து எனினுமாம். கல் என்றது பாக்கிற் படுவதொரு குற்றம்.
மடுத்துழி - பொருள் பெற்ற விடத்தில் எனினுமாம்.