பாங்குடைய கற்றலிற் காழினிய தில் - இனியவை நாற்பது 40

இன்னிசை வெண்பா

பத்துக் கொடுத்தும் பதியிருந்து வாழ்வினிதே
வித்துக்குற் றுண்ணா விழுப்பம் மிகஇனிதே
பற்பல நாளும் பழுதின்றிப் பாங்குடைய
கற்றலிற் காழினிய தில். 40

- இனியவை நாற்பது

பொருளுரை:

தன்பாற் குற்றங் கண்டு இனத்தார் கூடிப் பத்துப்பொருள் தண்டம் விதிப்பின், அப்பொருட்களைக் கொடுத்தாயினும், உள்ளூரில் இருந்து வாழ்வது இனியது.

விதைக்கு என வைத்த தானியத்தை குற்றி உண்ணாத சிறந்த குணம் மிக இனியது.

பற்பல நாட்களும் குறையேதும் இன்றி நன்மையுடைய நூல்களைக் கற்பதைப் போல மிக இனியது வேறொன்றும் இல்லை.

‘பத்து' என்பதற்குப் ‘பத்துப் பொருள்'
என்று உரை வகுத்தார் நச்சினார்க்கினியர்.

தன்பாற் குற்றங் கண்டு இனத்தார் கூடிப் பத்துப்பொருள் தண்டம் விதிப்பின் அது கொடாது ஊரைவிட்டுச் செல்வதை விட அது கொடுத்து தன் சொந்த ஊரில் வாழ்வதே நன்மையாம் என்பார்.

சாதி தருமம் தவறினார்க்கு அச் சாதியார் கூடித் தண்டம் விதித்தலும்,
அத் தண்டஞ் செலுத்தாராயின் நெருப்பு முதலியன கொடுத்து உதவாததும்,
வண்ணான் நாவிதன் முதலிய ஊர் வேலையாட்களைக் கட்டுப்படுத்தியும்
அவர் அவ்வூரில் இராதபடி செய்தல் முற்கால வழக்கமாகும்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (28-Jan-22, 6:57 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 77

மேலே