மேலான சிந்தனையே மேவுக முத்தியுன் பாலான தாகும் பதிந்து - ஞானம், தருமதீபிகை 949

நேரிசை வெண்பா

மதியாய் வருவதே மாறி உனது
கதியாய் வருதல் கருதி - விதியாக
மேலான சிந்தனையே மேவுக முத்தியுன்
பாலான தாகும் பதிந்து. 949

- ஞானம், தருமதீபிகை,
- கவிராஜ பண்டிதர் ஜெகவீர பாண்டியனார்

பொருளுரை:

மதிநலம் கனிந்த தெளிந்த ஞானமே கதிநலமாய் விளைந்து வருகிறது; மேலான அந்த இன்ப விளைவை விதி முறையே சிந்தனை செய்துவரின் பேரின்ப முத்தி உன்பால் அன்பாய் வரும்; அத்தகைய நித்திய நிலையில் நிலைத்து வாழுக என்கிறார் கவிராஜ பண்டிதர்.

பொருள்களைப் பகுத்து நோக்கித் தகுதிகளை மதித்து உணரும் திறம் மதி என வந்தது. இந்த மதி நுட்பம் அதிசய மகிமைகளை ஆக்கி உயர்ந்த கதி நலங்களைக் காட்டி அருளுகிறது.

பிறப்பையும் இருப்பையும், வாழ்வையும் சாவையும் நேரே அறிந்துவரினும் அவற்றின் புலைகளையும் நிலைகளையும் பலர் உணர்ந்து உறுதி காணாமல் ஊனமாயுழலுகின்றனர். தம்முடைய இனிய உயிர்க்கு இதத்தை நாடாதவர் மதிகேடராகின்றனர். ஈன இடர்களுக்கெல்லாம் ஞான சூனியமே மூலகாரணமாய் முடிகிறது. மெய்யறிவு குறைய வெய்ய துயர் விரிகிறது.

உண்மை நிலையை ஊன்றி உணராமல் புன்மையான வழிகளில் மனம் போனபடியெல்லாம் மருண்டு திரிவது மதிகெட்ட படியாம். மதிகெட்டான் கதிகெட்டான் என்பது முதுமொழி. தூயமதி இழிந்த அளவு தீய விதி விளைந்து விரிந்து வருகிறது.

மதி உயர்ந்ததானால் மனத்தை நல்ல நெறிகளில் நடத்தி நலம் பல காணுகிறது; அது இழிந்ததானால் ஒளி இழந்த கண் போல் குருடுபட்டு யாண்டும் அல்லல்களையே அடைகிறது.

மெய்தேர்ந்த விவேகம் கைதேர்ந்த பாகன்போல் வாழ்க்கைத் தேரை வசமாய் நடத்துகிறது; பாகன் சரியாய் இல்லையானால் தேர் நேரே செல்லாது சிதைந்து வீழும்; விவேகம் தெளிவாயில்லையானால் வாழ்வு ஒழுங்காய் நடவாது, ஊனமடைந்து தாழ்ந்து போகும். விழியின் ஒளி போல் அறிவு வழி தெரிகிறது.

தேகம் தேர்; பொறிகள் குதிரைகள்; மனம் கடிவாளம்; மதி பாகன்; சீவன் அரசன். சீவியத்தை இவ்வாறு ஒவியமாய் உபநிடதம் உருவகம் செய்து ஒழுங்கு காட்டியுள்ளது.

அறிவாகிய பாகன் சரியாயில்லையாயின் மனம் மதம் மீறி அலையும்; பொறிகள் வெறிகொண்டு திரியும்; வாழ்வு பாழாம்; சீவன் நாசமாம். மதிநலம் குன்றிய அளவு மனிதன் குன்றிக் கதிகலம் யாதும் காணாமல் கழிந்து இழிந்து ஒழிந்து போகிறான். மனமும் மதியும் இதமாய் இனிது அமையின் அந்த மனிதன் புனிதனாய் உயர்ந்து அதிசய நலங்களை அடைகிறான்.

அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
(விளம் மா தேமா அரையடிக்கு)

மனமெனுந் தோணி பற்றி மதியெனுங் கோலை யூன்றிச்
சினமெனுஞ் சரக்கை யேற்றிச் செறிகட லோடும் போது
மனனெனும் பாறை தாக்கி மறியும்போ தறிய வொண்ணா
துனையுனு முணர்வை நல்கா யொற்றியூ ருடைய கோவே. 2

- 046 திருவொற்றியூர், நான்காம் திருமுறை, திருநாவுக்கரசர் தேவாரம்

பிறவிக் கடலைக் கடத்தற்கு மனமும் மதியும் முறையே தோணியும் கோலுமாய்த் துணை புரிகின்றன என்பதை இதனால் அறிந்து கொள்கிறோம். அல்லல்கள் யாவும் நீங்கி நல்ல பேரின்ப நிலையை அடைய வேண்டுமானால் மனம் புனிதமாக வேண்டும். மதி தெளிவாக வேண்டும். தூய சிந்தையும் தெளிந்த விவேகமும் திவ்விய நீர்மைகளாதலால் அவை சிறந்த கதிகளை விரைந்து அருளுகின்றன. மனநலம் மன்னிய பாக்கியமாய் மருவி வருகிறது.

கீழான இழிவுகளை அறவே விட்டு மேலான பரநிலையை நிலையாக அறிய நேர்ந்தபோதுதான் மதி ஞானமாய் வருகின்றது. சித்தம் தெளிந்த இந்த ஞானம் முத்திக்கு வழியை எத்திக்கிலும் எளிதே காட்டியருளுகிறது. ஞான விழி வான ஒளியாய் மோன சோதியை வீசி வருதலால் அதனையுடையவர் பரஞ்சோதியாய்த் தேசு மிகுந்து சிறந்து திகழ்கின்றார்.

வெண்டளை பயிலும் கலிவிருத்தம்

ஞானம் விழைந்தெழு கின்றதோர் சிந்தையுள்
யானம் விழைந்தெதி ரேகாண் வழிதொறும்
கூனல் மதிமண் டலத்தெதிர் நீர்கண்(டு)
ஊனம் அறுத்துநின் றொண்சுட ராகுமே. 6

நண்ணிய ஞானத்தில் ஞானாதி நண்ணுவோன்
புண்ணிய பாவம் கடந்த பிணக்கற்றோன்
கண்ணிய நேயம் கரைஞானம் கண்டுளோன்
திண்ணிய சுத்தன் சிவமுத்தன் சித்தனே. 9

- ஐந்தாம் தந்திரம் - 8. ஞானம், பத்தாம் திருமுறை, திருமூலர் திருமந்திரம்

தன் உள்ளத்தில் ஞானம் விளைந்தபோது உலகத்தில் அந்த மனிதன் அடைந்துவரும் நிலைமைகளைக் திருமூலர் இவ்வாறு செவ்வையாய் விளக்கியிருக்கிறார். சித்தன், முத்தன், சுத்தன், சிவன் என ஞானியைக் குறித்திருக்கும் குறிப்புகள் கூர்ந்து சிந்திக்கத்தக்கன. ஞான ஒளி தோய்ந்த பொழுது சீவன் சிவனாய்ச் சிறந்த திகழ்கிறான்.

ஒளியால் அன்றி இருள் வேறு வழியால் ஒழியாது; அது போல் ஞானத்தால் அன்றி மருள் நீங்காது; ஆகவே பிறவி நீங்கிப் பேரின்ப நிலையை அடைய நேர்ந்தவர் ஞானம் ஆகிய திவ்விய இரதத்தில் ஏறியே மேலே போகின்றனர்.

கலிவிருத்தம்
(மா 3 விளம்)

ஞானம் கொண்டு நணுகும் சிவபதம்
ஊனம் கொண்ட கருமத்(து) உறுவது
வானம் கொண்டு வளர்த்தல் புகையது
மானம் கொண்டு வளர்த்தலை ஒக்குமால்.

- பிரபுலிங்க லீலை

மேகம் பொழியும் மழையால் அன்றிப் புகைப்படலத்தால் பயிர் வளராது; அதுபோல் சீவப்பயிர் ஞான ஒளியாலேயே செழித்து வளர்ந்து சிவ கதியை அடையும் என இது உணர்த்தியுள்ளது. வான நீரும் ஞான நீர்மையும் நேராய் நின்றன.

சரியை, கிரியை, யோகம், ஞானம் என்னும் இந்நான்கும் முத்தித்தலத்தை அடையவுரிய நெறிகளாம். முதலிலுள்ள மூன்றும் கீழ்ப் படிகள்; ஞானம் மேலான நிலையில் மேவியுள்ளது.

கன்மநெறி தப்பிற் கடுநரகென் றெந்நாளும்
நன்மைதரு ஞானநெறி நானணைவ தெந்நாளோ. 1

ஞானநெறி தானே நழுவிடினும் முப்பதத்துள்
ஆனமுத்தி நல்குமென அன்புறுவ தெந்நாளோ. 2

- 15. நிலைபிரிந்தோர் கூடுதற்கு உபாயம், தாயுமானவர்

முக்திக்கு இனிய வழி ஞானமே எனத் தாயுமானவர் கருதியுள்ளதை இது உறுதியாய்க் காட்டியுள்ளது. உள்ளதை உள்ளபடி தெளிவாயறிவதே ஞானமாதலால் அந்த ஒளி விழியின் எதிரே திவ்விய நிலை எவ்வழியும் செவ்வையாய் விளங்குகிறது. அறிவுக் காட்சி ஆனந்த நீட்சியாய் விரிகிறது.

சரம் அசரமாய்ப் பரந்து விரிந்துள்ள உலகங்கள் எங்கணும் பாலுள் நெய்போல் இறைவன் பரவியிருக்கிறான் என ஞானிகள் உணர்ந்து கொள்வதால் யாண்டும் ஈசனையே கண்டு எவ்வழியும் திவ்விய நிலையில் அவர் இன்புற்று வருகின்றனர்.

கலி விருத்தம்

நிலம்நீர் நெருப்புயிர் நீள்விசும்பு நிலாப்பகலோன்
புலனாய மைந்தனோ(டு) எண்வகையாய்ப் புணர்ந்துநின்றான்
உலகே ழெனத்திசை பத்தெனத்தான் ஒருவனுமே
பலவாகி நின்றவா தோணோக்கம் ஆடாமோ. 5

- 15 திருத்தோணோக்கம், எட்டாம் திருமுறை, திருவாசகம்

கலி விருத்தம்

திடவிசும்(பு) எரிவளி நீர்நிலம் இவைமிசைப்
படர்பொருள் முழுவதும் ஆயவை அவைதொறும்
உடல்மிசை உயிரெனக் கரந்தெங்கும் பரந்துளன்
சுடர்மிகு சுருதியுள் இவைஉண்ட சுரனே. 7

ஆத்ம உபதேசம், நம்மாழ்வார் திருவாய்மொழி, நான்காம் ஆயிரம்

எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
(காய் காய் / மா தேமா அரையடிக்கு)
(காய் வருமிடத்தில் விளம் வரலாம்)

மண்ணாகி விண்ணாகி மலையு மாகி
வயிரமுமாய் மாணிக்கந் தானே யாகிக்
கண்ணாகிக் கண்ணுக்கோர் மணியு மாகிக்
கலையாகிக் கலைஞானந் தானே யாகிப்
பெண்ணாகிப் பெண்ணுக்கோ ராணு மாகிப்
பிரளயத்துக் கப்பாலோ ரண்ட மாகி
எண்ணாகி யெண்ணுக்கோ ரெழுத்து மாகி
யெழுஞ்சுடரா யெம்மடிகள் நின்ற வாறே. 2

- 094 பொது, ஆறாம் திருமுறை, திருநாவுக்கரசர் தேவாரம்

பார்த்தவிடம் எல்லாம் பரமன்காண் அம்மானை
பாராமல் இந்நாளும் பாழ்பட்டேன் அம்மானை. - திருவம்மானை

நேரிசை வெண்பா

எங்குஞ் சிவமொழிய வில்லையவன் றன்னாணை
அங்கந் திரள்கருவி ஆணவமாம் - பொங்குமிருண்
மைசெய்த மாமாயை மாயைவினை மற்றனைத்தும்
பொய்பொய்பொய் பொய்பொய்பொய் பொய். 373

- ஞானபூசை, சிவானந்த மாலை

ஞானக் காட்சியுடையவர் கடவுளைக் கண்டு களிக்கும் மாட்சிகளை முன்னதாக இவை காட்டியுள்ளன. இவ்வாறு தன்னைக் காணும் ஞானிகளை இறைவன் முறையே கண்டு களிக்கிறான்.

எவன் என்னை எங்கும் காண்கிறானோ, எல்லாப் பொருள்களையும் என்னிடத்தே எவன் பார்க்கிறானோ அவனுக்கு நான் இனியவனாகிறேன்; எனக்கு அவன் உரியவனாகிறான் எனக் கண்ணன் கூறியுள்ளது இங்கே எண்ணி யுணரவுரியது.

இவ்வாறு தெளிவான ஞானக் காட்சியுடையவர் எவ்வழியும் சீவன் முத்தராய்த் திவ்விய நிலையில் சிறந்து திகழ்கின்றார்,

எல்லாச் சீவ கோடிகளும் பரமாத்துமாவிலிருந்தே தோன்றியுள்ளன என்று ஒருவன் அறிந்த பொழுது ஏகமான ஒரே உண்மை நிலையையே தெரிகிறான்; தெரியவே சோக மோகங்கள் ஒளி முன் இருள் போல் அவனெதிரே ஒழிந்து போகின்றன என ஈசாவாசிய உபநிடதம் ஏழாவது மந்திரம் இவ்வாறு குறித்துள்ளது.

கலி விருத்தம்
(காய் காய் காய் மா)

ஏகவுரு வாயுயிர்கள் எங்கணும் நிறைந்தே
ஓகையொழி யாதுறையும் ஞானவொளி ஓதும்
சோகமொடு மோகமேறி தொன்முனிவர் ஆகும்
யோகியர் உளத்தினிடை அன்றியுறை யாதால்.

- கூர்ம புராணம், மாயா 11

உண்மை தெளியும் ஞான ஒளி தூய முனிவரிடமே இனிது தோன்றும் என்னும் இது ஈண்டு துணுகி உணரவுரியது.

உள்ளத்தைத் தூய்மை செய்; எல்லா உயிர்களும் இறை்வன் உருவங்கள் என்று கருதுக; அவ்வாறு கருதிவரின் பிறவித் துயரங்கள் நீங்கிவிடும்; பேரின்ப முத்தி நேரே ஓங்கி வரும் என்கிறார் கவிராஜ பண்டிதர்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (30-Jan-22, 12:41 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 25

சிறந்த கட்டுரைகள்

மேலே