மனத்தைத் திருத்தினோ மாறாத இன்பம் உனக்கினி தாகி உறும் - துறவு, தருமதீபிகை 959

நேரிசை வெண்பா

மண்ணைத் திருத்தி வருபயிரைப் பேணிவரின்
உண்ணற்(கு) இனிய உணவூட்டும் - எண்ணும்
மனத்தைத் திருத்தினோ மாறாத இன்பம்
உனக்கினி தாகி உறும். 959

- துறவு, தருமதீபிகை,
- கவிராஜ பண்டிதர் ஜெகவீர பாண்டியனார்

பொருளுரை:

நிலத்தை உழுது திருத்திப் பண்படுத்திப் பயிரை வளர்த்து வரின் உணவுகளை வளமாய் அது உதவி வரும்; மனத்தைப் புனிதமாய்ப் பண்படுத்தினால், நிலையான பேரின்பங்கள் விளைந்து வரும்; இனிய வரவை எய்துவது அரிய பிறவிப் பேறாகும் என்கிறார் கவிராஜ பண்டிதர்.

மண்ணும் மனமும் இங்கே இனமாய் எண்ண வந்தன. ஞால வாழ்வையும் ஞான வாழ்வையும் முறையே கருதியுணர இவை உறுதியாய் நேர்ந்தன. சுவரை வைத்துச் சித்திரம் எழுது என்பது முதுமொழியாய் வந்துள்ளது. உடலைப் பேணி உயிரை அழகாய் உயர்த்தியருள் என்பதை இந்தப் பழமொழி கிழமையோடு உணர்த்தி விழுமிய உண்மையை விளக்கியது.

விலங்கு, பறவைகளினும் மேலான மனித தேகம் பெற்றது வியனான பயனை நயனாயடையவேயாம். உரிய பயனை உணராமல் ஒழிவது பெரிய பிழையாம். பார் அளவாய் வாழ்ந்து போவது பேரிழவாய் நேர்ந்து பெருந்துயரங்களை விளைத்து வருகிறது.

எவ்வழியும் உலக நாட்டமாய் ஓடிப் பொருளை நாடி ஈட்டிச் சுகபோகங்களையே அவாவி உழல்வதே மானிட வாழ்வாய் மருவியுளது. ஊனமான வழிகளில் உள்ளம் களித்து ஞானசூனியமாய் வாழ்ந்து ஈனமாயழிந்து போவதே இகலோக நிலையாய் யாண்டும் புலையோடு மூண்டு நீண்டு நிலவுகின்றது.

செல்வ வளங்கள் நிறைந்து பல்வகை இன்பங்களும் சுரந்து எல்லா நிலைகளிலும் உயர்ந்த பெரிய அரச வாழ்வே எனினும் உயிர்க்கு ஊதியமான உய்தியைச் செய்யாமல் ஒழியுமானால் அது கொடிய பழியான நெடிய இழிவுடையதே. ஆன்மா மேன்மையுறச் செய்வது ஞானவாழ்வு; அங்ஙனம் செய்யாதது ஈன வாழ்வே. புனித நிலையில் வாழ்வதே புண்ணிய வாழ்வாம்.

வாழ்ந்தனம் என்று தாழ்ந்தவர்க் குதவாது
தன்னுயிர்க் கிரங்கி மன்னுயிர்க் கிரங்கா
துண்டிப் பொருட்டாற் கண்டன வெஃகி
அவியடு நர்க்குச் சுவைபலபகர்ந்தேவி
ஆரா உண்டி அயின்றன ராகித்

தூராக் குழியைத் தூர்த்துப் பாரா
விழுப்பமும் குலனும் ஒழுக்கமும் கல்வியும்
தன்னிற் சிறந்த நன்மூ தாளரைக்
கூஉய்முன் நின்றுதன் ஏவல் கேட்குஞ்
சிறாஅர்த் தொகுதியின் உறாஅப் பேசியும்

பொய்யொடு புன்மைதன் புல்லர்க்குப் புகன்றும்
மெய்யும் மானமும் மேன்மையும் ஒரீஇத்
தன்னைத் தேறி முன்னையோர் கொடுத்த
நன்மனைக் கிழத்தி யாகிய அந்நிலைச்
சாவுழிச் சாஅந் தகைமையள் ஆயினும்

மேவுழி மேவல் செய்யாது காவலொடு
கொண்டோள் ஒருத்தி உண்டிவேட் டிருப்ப
எள்ளுக் கெண்ணெய் போலத் தள்ளாது
பொருளின் அளவைக்குப் போகம்விற் றுண்ணும்
அருளில் மடந்தையர் ஆகம் தோய்ந்தும்

ஆற்றல்செல் லாது வேற்றோர் மனைவயின்
கற்புடை மடந்தையர் பொற்புநனி வேட்டுப்
பிழைவழி பாராது நுழைவழி நோக்கியும்
நச்சி வந்த நல்கூர் மாந்தர்தம்
விச்சையிற் படைத்த வெவ்வேறு காட்சியின்

அகமலர்ந் தீவார் போல முகமலர்ந்
தினிது மொழிந்தாங் குதவுதல் இன்றி
நாளும் நாளும் நாள்பல குறித்தவர்
தாளின் ஆற்றலும் தவிர்த்துக் கேளிகழ்ந்து
இகமும் பரமும் இல்லை என்று

பயமின் றொழுகிப் பட்டிமை பயிற்றி
மின்னின் அனையதன் செல்வத்தை விரும்பித்
தன்னையும் ஒருவ ராக உன்னும்
ஏனையோர் வாழும் வாழ்க்கையும் நனைமலர்ந்து
யோசனை கமழும் உற்பல வாவியில்

பாசடைப் பரப்பில் பால்நிற அன்னம்
பார்ப்புடன் வெருவப் பகுவாய் வாளைகள்
போர்த்தொழில் புரியும் பொருகா விரியும்
மருதமும் சூழ்ந்த மருத வாண
சுருதியும் தொடராச் சுருதி நாயக

பத்தருக் கெய்ப்பினில் வைப்பென உதவும்
முத்தித் தாள மூவா முதல்வநின்
திருவடி பிடித்து வெருவரல் விட்டு
மக்களும் மனைவியும் ஒக்கலும் திருவும்
பொருளென நினையாதுன் னருளினை நினைந்து

இந்திரச் செல்வமும் எட்டுச் சித்தியும்
வந்துழி வந்துழி மறுத்தனர் ஒதுங்கிச்
சின்னச் சீரை துன்னல் கோவணம்
அறுதற் கீளொடு பெறுவது புனைந்து
சிதவல் ஓடொன் றுதவுழி எடுத்தாங்

கிடுவோர் உளரெனின் நிலையில்நின் றயின்று
படுதரைப் பாயலிற் பள்ளி மேவி ஒவாத்
தகவெனும் அரிவையைத் தழீஇ மகவெனப்
பல்லுயிர் அனைத்தையும் ஒக்கப் பார்க்கும்நின்
செல்வக் கடவுள் தொண்டர் வாழ்வும்

பற்றிப் பார்க்கின் உற்றநா யேற்குக்
குளப்படி நீரும் அளப்பருந் தன்மைப்
பிரளய சலதியும் இருவகைப் பொருளும்
ஒப்பினும் ஒவ்வாத் துப்பிற் றாதலின்
நின்சீர் அடியார் தஞ்சீர் அடியார்க்

கடிமை பூண்டு நெடுநாட் பழகி
முடலை யாக்கையொடு புடைபட் டொழுகியவர்
காற்றலை ஏவலென் நாய்த்தலை ஏற்றுக்
கண்டது காணின் அல்லதொன்
றுண்டோ மற்றெனக் குள்ளது பிறிதே. 7

- 028 திருவிடைமருதூர் மும்மணிக் கோவை, பதினொன்றாம் திருமுறை

இந்தப் பாடலை ஊன்றிப் படித்துப்.பொருள்களை ஓர்ந்து பாருங்கள்; செல்வக் களிப்பில் எல்லை மீறி இறுமாந்து பொறிவெறிகளில் ஆழ்ந்து நெறிகேடராய் நீண்டு வாழ்கிற புலைவாழ்வையும், எல்லாவற்றையும் துறந்து எவ்வுயிர்க்கும் இரங்கி யாண்டும் இறைவனையே எண்ணியுருகி வருகிற துறவிகளுடைய புனித வாழ்வையும் இரு துலையில் வைத்து நிறுத்து நோக்கி நிலைமை தலைமைகளைப் பட்டினத்தார். இதில் விளக்கியிருப்பது கூர்ந்து சிந்திக்கவுரியன.

முன்னது ஈன வாழ்வு; பின்னது ஞான வாழ்வு.
அது துன்பத் திடல்; இது இன்பக் கடல்.

புனிதமான இந்த ஞானவாழ்வில் மோனமாய் வாழ்கிற துறவிகளின் திருவடிகளை எனது தலைமேல் தாங்கி முழு முதல் தலைவனான உன்னை உழுவலன்போடு என் உள்ளத்தில் கண்டு வாழும் வாழ்வையே அடியேன் பேரின்பப் பேறாய்க் கொண்டிருக்கிறேன் என்று குறித்திருப்பது இப்பெரியாரது அரிய துறவு நிலையையும் பெரிய தவ ஞானங்களையும் விளக்கி நிற்கிறது. மருதவாண! சுருதி நாயக! முத்தித் தாளா! மூவா முதல்வl என்று ஆரா ஆவலோடு ஈசனை விளித்து நேரே பேசியிருக்கிறார். துறவும் ஞானமும் வைராக்கியமும் தோய்ந்த இவருடைய அனுபவ மொழிகள் மனித சமுதாயத்துக்கு இனிய அமுத தாரைகளாய் என்றும் சுவை சுரந்து உணர்வு நலங்களை அருளி ஒளி புரிகின்றன.

கட்டளைக் கலித்துறை

வினைப்போக மேஒரு தேகங்கண் டாய்!வினை தான்ஒழிந்தால்
தினைப்போ தளவும்நில் லாதுகண் டாய்!சிவன் பாத(ம்)நினை!
நினைப்போரை மேவு; நினையாரை நீங்கிந் நெறியி(ல்)நின்றால்
உனைப்போல் ஒருவருண் டோமன மேஎனக்(கு) உற்றவரே? 1

நாட்டமென் றேயிரு சற்குரு பாதத்தை நம்புபொம்மல்
ஆட்டமென் றேயிரு பொல்லா வுடலை அடர்ந்தசந்தைக்
கூட்டமென் றேயிரு சுற்றத்தை வாழ்வைக் குடங்கவிழ்நீர்
ஓட்டமென் றேயிரு நெஞ்சே உனக்குப தேசமிதே. 2

பேய்போல் திரிந்து பிணம்போல் கிடந்திட்ட பிச்சையெல்லாம்
நாய்போல் அருந்தி நரிபோல் உழன்றுநன் மங்கையரைத்
தாய்போல் கருதித் தமர்போல் அனைவர்க்கும் தாழ்மைசொல்லிச்
சேய்போல் இருப்பர்கண் டீர்உண்மை ஞானம் தெளிந்தவரே! 3

என்பெற்ற தாயாரும் என்னைப் ‘பிண’மென்(று) இகழ்ந்துவிட்டார்;
பொன்பெற்ற மாதரும் போ’மென்று சொல்லிப் புலம்பிவிட்டார்
கொன்பெற்ற மைந்தரும் பின்வலம் வந்து குடம்உடைத்தார்;
உன்பற்(று) ஒழிய ஒருபற்றும் இல்லை உடையவனே! 4 பட்டினத்தார்

உலக நிலைகளையும் உண்மை முடிவுகளையும் எளிய மொழிகளில் இவ்வாறு இவர் வெளியிட்டிருக்கிறார். பாசபந்தங்கள் யாவுமற்று ஈசனையே பற்றித் தேசு மிகுந்திருந்த இவரது செயல் இயல்களைக் கண்டு வியந்தே பத்திரகிரி என்னும் அரசனும் ஒல்லையில் எல்லாம் துறந்து உறுதி மீதூர்ந்து துறவியானான்.

புல்லாய் விலங்காய்ப் புழுவாய் நரவடிவாய்
எல்லாப் பிறப்பின் இருளகல்வ(து) எக்காலம்? 1

சோற்றுத் துருத்திதனைச் சுமந்தலைந்து வாடாமல்
ஊத்தைச் சடம்போட்(டு) உனையடைவ(து) எக்காலம்? 2

பேய்போல் திரிந்து பிணம்போல் கிடந்து பெண்ணைத்
தாய்போல் நினைந்து தவம்முடிப்ப(து) எக்காலம்? 3 பத்திரகிரியார்

துறவியான பத்திரகிரியார் பிறவி நீக்கம் கருதி இறைவனை நோக்கி இங்ஙனம் ஏங்கி முறையிட்டிருக்கிறார். துறவு நிலைக்கு இந்த இருவரும் எவ்வழியும்.உறுதியாய்த் தலைமை தாங்கி நிற்கிறார்,

நேரிசை வெண்பா

பாரனைத்தும் பொய்யெனவே பட்டினத்துப் பிள்ளையைப்போல்
ஆருந் துறக்கை அரிதரிது - நேரே
மனத்துறவும் அப்படியே மாணா இவற்றில்
உனக்கிசைந்த வாறொன்றே ஓர். - தாயுமானவர்

நேரிசை வெண்பா

பட்டினத்துப் பிள்ளையினைப் பத்ரகிரி யைப்பரவி
விட்டுவிட மாட்டார் வெறுவீடர் - வெட்ட
வெறுஎலும்பை நாய்சுறண்ட வேந்த(ர்)வர நாய்பார்த்(து)
உறுமுவதைக் காட்டுவோ மோ.

- கண்ணுடைய வள்ளல்

துறவு நெறிக்கு உலகம் அறிந்த தலைமையாய் இவர் ஒளி பெற்றிருப்பதை இவற்றால் உணர்ந்து கொள்கிறோம். பற்று அற நேர்ந்தவர் எவரும் இவரை உரிமையாய் நினைந்து உயர்ந்துள்ளனர்.

உள்ளம் தெளிந்து துறந்தவர் பேரின்ப வெள்ளம் படிந்து விளங்குகின்றார். உண்மையை உணர்ந்து உறுதி நலம் பெறுக என்கிறார் கவிராஜ பண்டிதர்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (30-Jan-22, 12:56 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 43

சிறந்த கட்டுரைகள்

மேலே