அதுவன்றோ முள்ளினால் முட்களையும் ஆறு - பழமொழி நானூறு 54
இன்னிசை வெண்பா
தெள்ளி யுணரும் திறனுடையார் தம்பகைக்(கு)
உள்வாழ் பகையைப் பெறுதல் உறுதியே
கள்ளினால் கள்ளறுத்தல் காண்டும் அதுவன்றோ
முள்ளினால் முட்களையும் ஆறு. 54
- பழமொழி நானூறு
பொருளுரை:
ஆராய்ந்து அறியும் ஆற்றலுடையார் தம் பகைவரிடத்து வாழும் உட்பகையாயினாரைத் துணையாகப் பெறுதல் வலிமையைப் பெறுதலேயாம்;
மற்றொரு வேறுபட்ட கள்ளினால் முன் குடித்த கள்ளின் வெறியை நீக்குதலைக் கண்கூடாகக் காண்கின்றோம்;
அதுபோல, உட்பகையாயினாரைத் துணையாகப் பெறுதல் முள்ளினால் முள்ளைக் களைதலை ஒக்குமன்றோ?
கருத்து:
பகைவரிடத்து உட்பகையாய் வாழ்வாரைத் துணையாகப் பெறின் வெற்றி எளிதில் எய்தலாம்.
விளக்கம்:
'தம் பகைக்கு உள்வாழ் பகையை' என்றது ஆற்றலின்மையால் மேற்படாது உட்பகை கொண்டு அவர்க்குத் தீங்கு வருங்காலத்தை எதிர்நோக்கி அடங்கி வாழ்வாரை. இதனால் இவர் உதவியைப் பெறுதலும் உறுதியாம்.
தம் பகைவருடைய நிலையை இவர் நன்கு அறிந்தவராதலான், இவர் உதவி பெற்று ஒருதலையாக எளிதின் வெற்றி பெறலாம் என்பார்,
அவர் நட்பைப் பெறுதலே 'உறுதி' யாமென்றார். முள்ளினை முள்ளாற் களைதல்போல, பகைவரை அவரைச் சார்ந்தோர் சார்பு பெற்றுக் களைக என்பது. இது இராமன் வீடணன் சார்பால் இலங்கையர்கோன் நிலையறிந்து வென்றது போலும்.
'முள்ளினால் முட்களையும் ஆறு' என்பது பழமொழி.