இரைசுடும் இன்புறா யாக்கையுட் பட்டால் – நான்மணிக்கடிகை 50

நேரிசை வெண்பா

இரைசுடும் இன்புறா யாக்கையுட் பட்டால்
உரைசுடும் ஒண்மை யிலாரை - வரைகொள்ளா
முன்னை ஒருவன் வினைசுடும் வேந்தனையுந்
தன்னடைந்த சேனை சுடும் 50

- நான்மணிக்கடிகை

பொருளுரை:

உணவு பிணியினால் துன்பமுறும் வயிற்றிற் சேர்ந்தால் வருத்தும்;

அறிவு விளக்கம் இல்லாதவர்களை அவர் வாய்மொழியே அவரைத் துன்புறுத்தும்;

ஒருவனது அறத்தின் எல்லையிற்படாத முன் செய்த தீவினை இப்பிறப்பில் வந்து வருத்தும்;

அறத்தின் எல்லையுட் படாத அரசனையும் தன்னைச் சேர்ந்த படைகளே கொல்லும்.

கருத்து:

பிணியுள்ள உடம்பிற் சேரும் உணவு செரியாமையாற் றுன்புறுத்தும்;

அறிவிலாரை அவர் வாய்ச்சொல்லே வருத்தும்;

முன்செய்த தீவினைகள் இம்மையில் வந்து துன்புறுத்தும்;

அறத்தின் வரையறையில் நில்லாத அரசனைக் சேனைகளே கொல்லும்.

விளக்கவுரை:

அறிவென்பது விளக்கமுடைமையின் ‘ஒண்மை' யெனப்பட்டது.

வரைகொள்ளாவென்னுங் குறிப்பால் வினை தீவினைக்காயிற்று.

வரைகொள்ளாவென்பதை அரசனுக்குங் கூட்டுக. நீதிவழியில் நடத்தப்படாத சேனை அரசர்க்குத் தீங்கிழைக்குமென்பது.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (31-Jan-22, 1:23 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 41

மேலே