எந்நலங் காண்டுமென் றெள்ளற்க - நீதிநெறி விளக்கம் 48
நேரிசை வெண்பா
(’ன்’ ’ந்’ மெல்லின எதுகை)
மன்னர் புறங்கடை காத்து வறிதேயாம்
எந்நலங் காண்டுமென் றெள்ளற்க - பன்னெடுநாட்
காத்தவை எல்லாங் கடைமுறைபோய்க் கைகொடுத்து
வேத்தவையின் மிக்குச் செயும். 48
- நீதிநெறி விளக்கம்
பொருளுரை:
நாம் அரசர் தலைவாயிலை வீணாகக் காத்து வந்தும் என்ன பயனடைந்தோம் என்று அக்காவலையும், காத்திருத்தலையும் ஏளனம் செய்து விட்டு விடாதிர்கள்.
பல நீண்ட நாட்கள், சமயத்தில் மாதங்கள், வருடங்கள் கூட ஆகலாம்; பொறுமையுடன் காத்திருந்ததெல்லாம் முடிவில் சென்று உதவியாகி, அரசசபையில் மிகுந்த நன்மையைச் செய்யும்;
தகுந்த அமைச்சர், ஆலோசகர் பதவியைக் கூட அடையலாம்.
கருத்து:
அயர்வின்றி அரசன் பணியாற்றுவார், முன் இல்லாவிடினும் முடிவில் அவன் அன்பு பெறுவர்.
விளக்கம்:
அரச (தலைவன்) சேவை வீண்போகாது. அரண்மனை வாயில் காக்கும் காவலாளனை அரசன் வாயிற் புறத்து வந்து போகும் பல தடவைகளில் ஒரு தடவையாவது கவனிக்காமலிருக்க மாட்டான். பல தடவை கவனித்தும் அக்காவலாளிக்கு அன்பு காட்டாதிருக்கலாம். அவனுக்கு வாயிற் காவலினும் உயர்ந்த தொழில் அளியாதிருக்கலாம். அப்போது அரசன்பால் வெறுப்பும் தன் தொழிலில் அருவருப்புங் கொள்ளலாகாது.
ஏனெனில் அரசன் பல தடவையாக அக்காவலாளின் பொறுமை எப்படியென்று வெளிக்குக் காட்டாமலே கவனித்து வந்தாலும் வரலாம். அப்படிப் பல தடவை கவனித்ததில் காவலாளன் தன் வேலையைப் பொறுமையோடு பார்க்கிறான் என அவன் உறுதி கொண்டு விட்டால், பின் அக் காவலாளனை அரசன் கட்டாயம் பெரிதான மேற்பட்ட தொழில் ஒன்றில் அமர்த்துவான்;
ஆகையால் "மன்னர் புறங்கடை காத்து வறிதே யாம் எந்நலங் காண்டும் என்று வருந்தவும், குறை காணவும் வேண்டாம்.