அல்லனபோல் ஆவனவும் உண்டு சில - நீதிநெறி விளக்கம் 49

நேரிசை வெண்பா
('யு' 'வ' இடையின எதுகை)

உறுதி பயப்பக் கடைபோகா வேனும்
இறுவரை காறும் முயல்ப - இறுமுயிர்க்கும்
ஆயுள் மருந்தொழுக்கல் தீதன்றால் அல்லனபோல்
ஆவனவும் உண்டு சில. 49

- நீதிநெறி விளக்கம்

பொருளுரை:

இறக்கும் நிலைமையில் இருக்கும் உயிர்களுக்கும் வாழ்நாளைப் பெருகச் செய்யும் மருந்துகளை வாயில் விடுதல் தீதாகாது;

சில காரியங்கள் முடியாதவை போல் தோன்றி விடாமுயற்சியின் பயனாய்ப் பின்பு முடிவனவும் உண்டு;

ஆதலால், நன்மை பயங்குங் காரியங்கள் முற்றுப் பெறாவிடினும் அவை முடிவு பெறும் வரைக்கும் அறிஞர் முயற்சி செய்து வருவர்.

கருத்து: எத்தகைய செயலானாலும் பயனளிக்காதென்று இடையில் விட்டுவிடாமல் அயர்வின்றி முடிவுவரை முயல வேண்டும்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (31-Jan-22, 3:24 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 40

மேலே