பாலை வளர்த்துக் கணங்குழை மாலையுறல் சால்பென்ப – இன்னிலை 23
இன்னிசை வெண்பா
பாலை வளர்த்துக் கணங்குழை மாலையுறல்
சால்பென்ப கண்கூடாக் காணாய் - தழைகாதல்
வாலறிவ னாக்க வகையறிக காலத்தால்
தோலொடு நாலைந் தணந்து 23
– இன்னிலை
பொருளுரை:
பாலகனை வளர்த்து பெருகிய ஆசையுடன் அழகுடன் நான்கு அல்லது ஐந்து ஆண்டு கூடிய அக்காலத்தில் (பள்ளியில் வைத்து) தூய அறிவுடையவனாக்குவதற்கு வேண்டும் வழியினை அறிந்து செய்க,
(அவ்வாறு செய்யின்) திரண்ட காதணிகளையுடைய மங்கையின் இன்பத்தையுறுவது பெருமை என்று சொல்வார் (பெரியோர்), அவ்வின்பத்தினை நீ கண்ணுக்குத் தோன்றும்படி காண்பாய்.
கருத்து:
நல்ல மைந்தனைப் பெற்றெடுத்து வளர்த்துக் கல்வியறிவுடையனாகச் செய்தால் இல்லறத்தில் மனையாளுடன் கூடியவின்பம் பெருமையுடையதாம்.
விளக்கம்:
பால் என்பது பால் உண்ணும் மகனை யுணர்த்தியது.
தழை காதல் - பெருகிய ஆசை; தோல் - அழகு,
நால் ஐந்து என்றது நான்காம் ஆண்டின் முடிவிலாவது ஐந்தாம் ஆண்டின் தொடக்கத்திலாவது பள்ளியின் வைத்தலைக் கருதிக் கூறியதாம். நால் ஐந்து கூட அக்காலத்தில் வாலறிவனாக்க எனக் கூட்டுக.
காலத்தால் - காலத்தில் எனப் பொருள் கொள்க. இளமையிற்கல் என்ற சொற்படி பருவத்திற் கல்வி பயிற்றல் வேண்டும் என்பதைக் குறித்து "நாலைந்து அணந்து காலத்தால்" என்றார்.
வாலறிவனாக்க வகையறிந்தாலல்லது பெருமையில்லை.
இல்லற வாழ்வின் பயன் நன்மகப்பேறே என்பது தோன்ற "கணங்குழை மாலை யுறல் சால் பென்ப" என்றார்.
பெருமை என்பது பெரியோர் கூற்றாயினும் இஃது கண்கூடாக நீ பார்க்கக் கூடியதுதான் என்பார்,
"காணாய்" என்றார்.
பாலகனை வளர்த்துக் கல்வி பயிற்றி அறிவனாக்கிப் பின் கணங்குழை மாலையுறுதல் சால்பு என்று கூறிய பெரியோர் கூற்றைக் கண் கூடாக் காண்பாய் என்பது கூறப்பட்டது.