என்னவளே
என்னவளே!
கண்ணில் என்னைச் சிறைபிடித்தாய்
விண்ணில் நிலவாய் நீசிரித்தாய்
பெண்ணில் நீயே அழகானாய்
மண்ணில் உலவும் நிலவானாய்
கொடியென வளையும் இடையாளே!
நொடியினில் மனதில் நுழைந்தாயே
கடிமலர் உன்னை எண்ணித்தான்
விடியலில் இமைகள் விரிக்கின்றேன்
அதரம் சுருங்கும் அழகினிலே
உதிரம் சுண்டிப் போகுதடி-உன்
மதுரம் பொங்கும் பேச்சினிலே-என்
மதியும் மயங்கி வீழுதடி
உன்னைப் பார்த்த நாள்முதலே
என்னை மறந்தேன் நீள்குழலே
கன்னம் சிவந்த கனிமொழியே
சொன்னேன் கவிதை தமிழ்வழியே