எச்சம் இழந்து வாழ்வார் மூவர் – திரிகடுகம் 62

நேரிசை வெண்பா

நன்றிப் பயன்தூக்கா நாணிலியும் சான்றோர்முன்
மன்றில் கொடும்பா டுரைப்பானும் - நன்றின்றி
வைத்த அடைக்கலங் கொள்வானும் இம்மூவர்
எச்சம் இழந்துவாழ் வார் 62

- திரிகடுகம்

பொருளுரை:

ஒருவன் தனக்குச் செய்த நன்றியின் பயனை அளந்தறியாத நாணமில்லாதவனும்,

பெரியவர் முன்னே அறநிலையத்தில் பொய்ச் சொல்லைச் சொல்லுகின்றவனும்,

நற்செய்கை இல்லாதவனாய் ஒருவன் வைத்த அடைக்கலப் பொருளைக் கைப்பற்றிக் கொள்பவனும் ஆகிய இந்த மூவரும் தம் மக்களை இழந்து வருந்தி உயிர் வாழ்வார்.

கருத்துரை:

நன்றி மறந்த நாணிலியும், மன்றிற் பொய்ச் சாட்சி புகன்றவனும், அடைக்கலப் பொருளை வௌவியவனும் மக்கட்பேறற்று வருந்துவர்.

கொடுமை - வளைவு. எச்சம் - எஞ்சுவது: ஒருவன் இறந்தபின் மிகுந்து நிற்பது மக்களும் புகழும் ஆதலால் இரண்டும் கூறலாம்.

நாணிலி என்பதில் இகரம் ஆண்பாலை யுணர்த்தியது

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (5-Feb-22, 4:25 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 30

மேலே