புரியும்போது யார் இருப்பார்

உயிர்க்குருவி உடற்கூட்டை விட்டதினால்
வந்ததுதான் மரணமா? - இல்லை
ஊர் திரண்டு பாடையேற்றி தீவைத்துச்
சென்றதுதான் காரணமா?
சிறை வயிற்றுத் தடையுடைத்து பூமியிலே
வந்ததுதான் பிறப்பா? - இல்லை
சீர்பெற்று வாழ்வடைந்து வாழ்த்தும்படி
வாழ்வதுதான் சிறப்பா?
உணர்ச்சிகளின் புணர்ச்சியிலே உயிரணுவைச்
சேர்த்ததுதான் யார்? - அதை
உணர்த்துவது இறைவனா? இயற்கையா?
சோதிப்பதுதான் யார்?
பத்துமாதம் அன்னைமடி பிறப்பிடம். இதை
பகலுவது விஞ்ஞானம் - நாள் அதை
வித்துதினம் விதிமுடிந்து போகுமிடம்
விளங்காத மெய்ஞானம்.
படிக்கின்ற புத்தகங்கள் தருவதுதான்
அறிவுச்சுடரா? - இல்லை
படிப்படியாய் அடிவாங்கும் அனுபவங்கள்
ஆத்ம ஒளியா?
தெரியும்வரை காண்பதுதான் உலகமெனில்
தெரியாமல் இருக்கும் இவ்விந்தைதனை
புரியும்படி யாருரைப்பார்? - இவ்வுலகிலது
புரியும்போது யாரிருப்பார்?

எழுதியவர் : ஜீவன் (மகேந்திரன்) (9-Feb-22, 4:22 pm)
சேர்த்தது : ஜீவன்
பார்வை : 301

மேலே