சக்தி என்னுள் இருக்கிறது

எரிமலையாய் குமுறும் என் எண்ணங்களை
எழுதிட ஏடுகள் பத்தாது.
குழப்பங்களும் குதர்க்கங்களும் நிறைந்த
பாழும் இவ்வுலகில் பிறப்பெடுத்தேன்.
சுழிப்புகளும் சூழ்ச்சிகளும் மானிடரிடை
சூழ இங்கே ஒரு கோட்டையினை கண்டேன்.
விழிப்புகளும் வேதங்களும் சல்லிக்காசுக்காய்
விலைபோகும் வேதனைகள் கண்டேன்.
கழிப்புகளும் கலகங்களும் மனத்திடை
கண்டு நாளும் கவலையுற்றேன்...கண்ணீர்விட்டேன்.
நிரந்தரமற்ற வாழ்க்கையிது. புரியும். புரிந்தும்
ஏற்றத்தாழ்வு காணும் மானிடமே...சிரிக்கின்றேன்.
இன்று நான்...நாளை நீ...தெரியாதா உனக்கு.
நிலையாய் நீமட்டும் சுகப்பட்டிடவா போகிறாய்?
நெஞ்சுக்குள் ஈரம் இருந்தாலும் அதைக் கொதிக்கவைத்து
பார்ப்பதில்தான் ஓர் அலாதி இன்பம்.
சரி..சரியென்று போனால்,சரியாய் புரிந்து கொள்ளாமல்
சரித்துவிட்டுச் சிரிக்கும் சீர்கெட்டச் சமுதாயமே
கரியொன்று உன் முதுகில் கவனி. - பின்
காரியம் செய்வது நலமே!
புரிந்து கொள். புலியுடன் விளையாடுகின்றாய்.
பதுங்குவது இப்போது பின் பாய்வதற்குத்தான்.
பரிந்து பேசவில்லை.
பார்க்கப்போவதைத்தான் சொல்கிறேன்.
பாரினை வென்றிடும் சக்தி என்னுள் இருக்கிறது.
ஜாக்கிரதை...!
என் பார்வை ஒன்றே போதும்.
வேறொன்றும் சொல்வதற்கில்லை.

எழுதியவர் : ஜீவன் (மகேந்திரன்) (10-Feb-22, 7:15 pm)
சேர்த்தது : ஜீவன்
பார்வை : 480

மேலே