நன்றறியும் மாந்தர்க்கு உளமூன்று - திரிகடுகம் 68
நேரிசை வெண்பா
(’ல்’ ‘வ்’ இடையின எதுகை)
இல்லார்க்கொன் றீயும் உடைமையும் இவ்வுலகில்
நில்லாமை யுள்ளும் நெறிப்பாடும் - எவ்வுயிர்க்கும்
துன்புறுவ செய்யாத தூய்மையும் இம்மூன்றும்
நன்றறியும் மாந்தர்க்(கு) உள. 68
- திரிகடுகம்
பொருளுரை:
வறியவர்க்கு ஒருபொருளை கொடுக்கும் செல்வமும், இவ்வுலகத்தின் பொருள்களின் நிலையாமையை ஆராய்ந்து அறியும் வழியில் பொருந்துதலும், எல்லா வுயிர்க்கும் துன்பம் அடைவதற்கு ஏதுவாகிய செய்கைகளைச் செய்யாத தூய தன்மையும் ஆகிய இம்மூன்றும் அறத்தை அறியக்கூடிய மக்கட்கு உண்டு.
கருத்துரை:
வறியோரைக் காக்கும் செல்வமும், பொருள்களின் நிலையாமையை யறிந்து நடக்குந் தன்மையும் எவ்வுயிர்க்கும் இன்பம் அளிக்கும் செம்மையும் அறமுணர்ந்தவர்களிடத்திலேயே உண்டு.
நில்லாமை . நிலையாமை, நில்லாதவற்றை நிலையின வென்றுணர்வது புல்லறிவாண்மை எனப்படும்.