அவளொரு எரிமலை

ஊமை எரிமலை
=================
சம்பிரதாயப் பூர்வமாக
நீ என்னை பார்க்கவரும் நாளில்
உன் குடும்பத்தாருக்கே இடவேண்டும்
வந்தனம்
*
வந்தவங்க தின்று ஏப்பமிட
பரிமாற வேண்டும் பட்சணம்
அதன் பிறகு எல்லோரும்
அனுமதித்தால் நான் குந்தணும்
*
பார்த்ததும் வசீகரிக்க
முகவெழிலில் பொங்கி வழியணும்
சந்தனம்
*
நான் ஊமையா திக்குவாயா
என்பதை நீங்கள்
பரிசோதித்துக் கொள்ளப்
பாடவேண்டும் ஒரு கீர்த்தனம்
*
நொடியா நுடமா என்பதைக்
நூதனமாய்க் கண்டறிய
ஆடவேண்டும் சிறு நர்த்தனம்
*
காது செவிடா எனக் கண்டறிய
ரகசியமாய் என்னிடம் ஏதாவது
கேட்பதில் மறைந்திருக்கும் நரித்தனம்
*
கண் பார்வைக் கூர்மை
அறிந்துகொள்ள
“நல்லா பார்த்துக்கோ இதுதான்
மாப்பிள்ளை“ என்று நீங்கள்
காண்பிக்கும் எவரையோ காண்பித்து
முகஞ்சுழிக்கச் செய்யும் கள்ளத்தனம்
*
இடையில் இருந்தாக வேண்டும்
கஞ்சத்தனம்
பேரழகில் இருக்கவேண்டும்
வள்ளல்த்தனம்
*
வருமானத்திற்காய்
தொழில் என்னும் மூலதனம்
*
மூலதனத்தால் கிடைக்கக் வேண்டும்
நல்ல வேதனம்
*
எல்லாம் சரியா இருந்தாலும்
ஏதோ குறைஎன்று
முணுமுணுக்கும் உங்கள் நூதனம்
*
எல்லாம் கடந்து
மணமேடை ஏறும் கூலியாக
பொன்னும் பொருளுமாகக்
கொடுக்கவும் வேண்டும் சீதனம்
**
உன் ஊதாரித்தனத்துக்கும்
நாதாரித்தனத்துக்கும்
ஆணும் பெண்ணும்
சரிசமமாய் ஏற்றவேண்டிய
இல்லற சோதிக்கு
பெண்ணே எண்ணெய்யும்
திரியுமாயிருக்க வேண்டி
இயற்றப்படா சட்டமாய்
நடைமுறை வாழ்வில்
சுதந்திரமாய்த் திரியும் மூடத்தனம்.
*
இது மனத்தளவில்
ஒவ்வொரு ஆணும் கொண்ட
ஊனத்தனமே!
இது மாறும்வரை
மாறாதிருக்கும் ஒவ்வொரு
பெண்மனத்திலும் கனன்றுகொண்டிருக்கும்
எரிமலை என்னும் ஊமைத்தனம்
*
*மெய்யன் நடராஜ்

எழுதியவர் : மெய்யன் நடராஜ் (20-Feb-22, 2:02 am)
சேர்த்தது : மெய்யன் நடராஜ்
பார்வை : 40

மேலே