கவி தவறா

பெண்ணே !
இலக்கணம்
சரியல்ல... என்று
ஏன் என் கவியை
நிராகரித்தாய்...

நான்
வேண்டுமென்றே
"சீர் "...ஒழுங்காக
இடவில்லை....
உனக்குத்தான்
"சீர் "என்பதே
பிடிக்காது
என்பதால் ...

வேண்டுமென்றே
அசைகளை இடவில்லை...
உன் கண் அசைவே
எனக்குப்
போதுமென்றதால்...

வேண்டுமென்றே
எதுகை இடவில்லை...
உனக்குத்தான்...
என் கையைத் தவிர
வேறு கை பிடிக்காதே
என்பதனால் ...

ஒழுங்கற்ற
அடிகளை இட்டுவைத்தேன்...
ஏனெனில் ...
நானே
உன் அடியைப்
பற்றியே கிடந்ததாலே ...

முற்றுப்புள்ளி
வைக்க மறந்தேன்...
ஏனெனில் ...
விரைவில்...
நெற்றிப்புள்ளி
வைக்க வேண்டும்
என்பதற்காக...

இப்போது சொல் ...
நான் எழுதிய
கவி...சரிதானே.

எழுதியவர் : மரு.ப. ஆதம் சேக் அலி (20-Feb-22, 7:56 pm)
சேர்த்தது : PASALI
Tanglish : kavi thavaraa
பார்வை : 125

மேலே