உலகம் எங்கும் போகவில்லை, அதன் மானம்தான் போய்விட்டது

உலகம் தோன்றியது இயற்கையே அதன் வடிவானது
பின் காற்று உருவாகியது அரூபமே அதன் வடிவானது
அதன் பிறகு கடல் பெருகியது நீலம் அதன் வடிவானது
பின்னர் தாவரம் முளைத்தது சேவை அதன் உருவானது

விலங்குகள் உதித்தது சேமித்தல் அவை இயல்பு அல்ல
பறவைகள் பறந்தது திட்டமிடுதல் அவை இயல்பு அல்ல
மலைகள் எழுந்தன கோபப்படுவது அதன் இயல்பு அல்ல
ஆறுகள் பாய்ந்தன தன்னலம் அவைகளின் இயல்பு அல்ல

ஆறறிவு படைத்து மானிடர்கள் உலகில் பிறப்பெடுத்தனர்
உடலில் அழகும் உள்ளத்தில் கோரமும் அவர் வடிவானது
தலையில் முடியுடன், கைகளில் நகங்களுடன் பிறந்தனர்
தலை கனமும் கறைபடிந்த கைகளும் அவர் குணமானது
வாயில் வார்த்தை வயிற்றில் பசியும் கொண்டு பிறந்தனர்
கடுஞ்சொல் மிருக உயிர் வதை மனிதரின் வேள்வியானது

இயற்கையை கண்டு ரசிக்கிறான், அவற்றை நசுக்குகிறான்
ஆற்றின் நீரை குடிக்கிறான், அவற்றை அசுத்தம் செய்கிறான்
காடுகளை காட்டுகிறான், வனவிலங்குகளை வதைக்கிறான்
ஆடு மாடுகளை மேய்க்கிறான்,பின் அவற்றை மாய்க்கிறான்

அறிவு திறமையால் பெரும் விஞ்ஞான வளர்ச்சிகள் கண்டான்
அழிப்பதில் திறமை கொண்டு இயற்கையையும் அழிக்கிறான்
படைத்தலின் சில நுணுக்கங்கள் அறிந்து விளையாடுகிறான்
ஆனாலும் நூறு ஆண்டிற்குள் செய்வதறியாமல் அழிகிறான்

ஒழுக்கம் நேர்மை அன்பு இரக்கம் என்று, தினமும் ஓதுகிறான்
பணம் பொருள் எங்கு கண்டாலும் அதன் பக்கம் ஒதுங்குகிறான்
சிறுவர்கள் தெய்வத்திற்கு சமமானவர்கள் என வாதாடுகிறான்
பட்டாசு செய்ய, எடுபிடி வேலை செய்ய அவர்களை நாடுகிறான்

பெண்கள் சமுதாய கண்கள் என்று அளிப்பான் பல மதிப்பெண்கள்
தனியே இருக்கும் பெண்ணை காமத்தோடு நோக்கும் சில கண்கள்
பெண்களுக்கு சம உரிமை என்று பேசி பேசி அவன் ஓய்வதில்லை
மனைவி புருஷனின் அடிமை என்பதில் ஆணுக்கு சந்தேகமில்லை

இதே மானிட சமுதாயத்தில் புத்தர் போன்ற மகான்கள் வாழ்ந்தனர்
ரமண மஹரிஷி போன்ற தவசீலர்கள் மாதவம் செய்து சென்றனர்
ராமகிருஷ்ண பரமஹம்சர் போன்ற பக்திமான்கள் ஆனந்தித்தனர்
சைதன்யர் போன்ற முனிகள் இசையால் இறைவனை துதித்தனர்

இன்று காலம் மாறி,கோலமும் மாறி அலங்கோலம் ஆகிவிட்டது
நல்லவர்கள் பலர் இருப்பினும் தீமைகள் மிகவும் பெருகிவிட்டது
தர்மம் நியாயம் என்பவை பள்ளியோடு முடித்துவைக்கப்படுகிறது
பணம் எவ்விதத்தில் கிடைப்பினும் அது பதுக்கி வைக்கப்படுகிறது

எது நல்லது எது தீயது என்பதே எல்லோரும் மறந்துவிட்ட நிலை
இன்பக்கேளிக்கைகள் எங்கிருப்பினும் அதற்கு போடுகிறார் வலை
தெய்வம் பரமாத்மா இவற்றிற்கு ஒரே நிலை, அது கோவில் சிலை
சொற்கலை, செயற்கலை , உயிர்க்கொலை, இது இன்றைய நிலை

எழுதியவர் : ராமசுப்பிரமணியன் (28-Feb-22, 1:29 pm)
சேர்த்தது : Ramasubramanian
பார்வை : 41

மேலே