விழிமின் எழுமின் உழைமின்

விழியினை மூடிக் கிடந்தது போதும்
வெற்றியை த் தழுவிட உயர்த்திடு தோளும் !
விழித்து எழுந்து வீரத்தைக் காட்டு
வீழினும் எழுவோம் என்பதை நாட்டு !
பழிப்பவர் தம்மை விழித்துநீ பாரு
பார்தவன் தாழ்த்துவான் விழியினை கீழு!
இழிசெயல் செய்வான் செயலினைத் தூற்று
எழுந்து ஓடுவான் எதிரியும் தோற்று !

அன்பை விதைத்து அறுவடை பண்ணு
அறமதும் உன்னை அணைத்திடும் கண்ணு !
பண்புடன் நின்றால் பாரே போற்றும்
பாதகம் செய்யின் புல்லும் தூற்றும் !
கண்ணாய் பாரதம் காத்து நில்லு
காலமும் அதற்கென உழைத்து வெல்லு !
எண்ணம் தன்னை உயர்வாய் கொள்ளு
என்றும் ஏற்றம் பெறுவதால் துள்ளு !

மூடத் தனத்தை மூலையில் கொட்டு
மூளையில் சிந்தனைப் பூக்களைத் தட்டு !
கூடவே இருந்து குழியினைத் தோண்டும்
கயவரைக் கண்டால் கருக்கியே போடு !
ஊடகம் புகுந்து ஊறுகள் செய்வார்
உண்மை மறைத்து பொய்மை கூறுவார்
தாடை உடைத்திட திண்மை கொள்வாய்
தரணியை உந்தன் தன்மையால் வெல்வாய்.

மழைபோல் வாழ்ந்து மானுடம் காப்பாய்
மண்ணைக் கிளரி மகசூல் காண்பாய்
உழைப்பே உயர்வு என்பதை எண்ணி
ஊரைப் பேணி உலகைக் காப்பாய் !
உழைத்தால் மட்டுமே பிழைப்பென எண்ணு
உறுதியில் நின்று உயிரைப் பேணு !
பழையென கழித்து புதியென கொள்ளு
புதியதோர் புவியினைப் படைத்தே வெல்லு !

வள்ளுவன் குறள்வழி வாழ்ந்து காட்டு
வல்லமை தந்திடும் வழியினைத் தீட்டு !
உள்ளம் தன்னில் உண்மையை ஏற்று
உலகமும் அவ்வழி உயர்ந்திட மாற்று !
பள்ளம் பார்த்து பயணம் செல்லு
பகைவனும் பதுங்குவான் பார்த்துநீ வெல்லு !
எல்லா உயிரும் ஒன்றென கொள்ளு
பொல்லா பகையை வேருடன் கிள்ளு !

எழுதியவர் : பொதிகை மு.செல்வராசன் (27-Feb-22, 12:16 pm)
பார்வை : 79

மேலே