கனவு

எத்தனையோ கனவுகளை இளமையிலே கண்டு
ஏமாந்த நிலையதுவும் பலவகையாய் உண்டு !
வித்தகனாய் நான்மாறி வெற்றிபெற எண்ணி
விழுந்துவிழுந்து நான்படித்த காலமதும் உண்டு !
புத்தகங்கள் வாங்கிடவும் பொருளற்ற போதும்
பொறுமையுடன் நான்படித்த காலமதும் உண்டு !
சொத்தாக எனைஎண்ணி வளர்த்துவிட்ட பெற்றோர்
சுகப்படவே நானுழைக்கும் சுதந்திரமும் பெற்றேன் !

தூங்காமல் நான்கண்ட கனவுகளைத் நாடி
தொடர்தன்று சென்றிடவோ வழியேதும் இல்லை !
ஏங்கிஅன்று கிடந்தாலும் அணைத்திடுவார் இல்லை !
ஏமாற்றம் பலவந்து அணைத்ததுதான் மிச்சம் !
வாங்கிவந்த வரமென்று காலமதைத் தள்ளி
வாழ்ந்திருந்தேன் வறுமையெனும் நோயதனைக் கிள்ளி !
தாங்கிதாங்கி வளர்த்திட்டார் பெற்றோரும் என்னை
தளர்வின்றி நான்வளரும் நேரமதை எண்ணி !

கனவுகண்டு ஏங்குவதால் பயனெதுவும் இல்லை
கரையின்றி உழைப்பதுவே பிறந்தபயன் ஆகும் !
எனவெண்ணி நானிருந்தேன் ! ஏற்றமதும் கண்டேன்
இல்லாதும் என்னிடத்தில் நில்லாமல் ஓட !
மனதாலே வஞ்சகத்தை மதிக்காமல் வாழும்
மனிதனாக நானிருக்க கனவுபல கண்டேன் !
பிணந்தின்னும் கழுகாகி பறக்காமல் இன்று
பக்குவத்தின் மனம்பெற்று வாழ்கின்றேன் நன்று !

வாழ்ந்திருந்தேன் என்பதனை வருங்காலம் கூற
வாழ்வினிலே சாதனைகள் வரைந்துவைக்க எண்ணி
சூழ்நிலையை சரியாக பயன்படுத்திக் கொண்டேன் !
சுதந்திரமாய் கவியெழுதிப் பாடியதை எல்லாம்
ஆழ்கடலின் முத்தாக்கி நூலாக்கி வைத்தேன் !
அன்னைதமிழ் உள்ளவரை அழியாமல் காக்க !
ஊழ்வினைகள் வந்தாலும் ஊறின்றி நிற்க
இணையத்தில் ஏற்றியதை நலைபெறவே செய்தேன் !

என்எழுத்தால் சமுதாயம் விழித்திவிடும் என்று
என்கனவில் கண்டதில்லை இதுவரையில் உண்மை !
புண்பட்டுப் போகாமல் பண்பட்டு வாழும்
புதியதோர் மானுடமாய் இருந்திடலே நன்மை !
எண்ணத்தில் என்றென்றும் இனியெனவே தோன்றி
எல்லோரும் மகிழுவுற்றே ஏற்றமுடன் வாழும்
பொன்னான காலமதும் பிறந்திடவே எண்ணி
பெருங்கனவு காண்கின்றேன் ! பலித்திடுமா சொல்வீர்.

எழுதியவர் : பொதிகை மு.செல்வராசன் (27-Feb-22, 12:07 pm)
பார்வை : 1480

மேலே