பாருக்குள்ளே நல்லநாடு அது பாரதத் திருநாடு

உழவாலே உயர்ந்திங்கு நிற்கின்ற நாடு –இவ்
உலகத்துக்கும் உணவுதனைத் தந்துதவும் நாடு.
பழமையினால் பெருமைபல பெற்றிருக்கும் நாடு-தினம்
பல்லோரும் பாராட்டும் கலைவளர்த்த நாடு !

காந்திமகான் பிறந்திங்கு வாழ்ந்திருந்த நாடு-ஒரு
கத்தியின்றி அந்நியனை விரட்டிவிட்ட நாடு
வேந்தர்பலர் ஆண்டிருந்த எல்லைகொண்ட நாடு.
வேற்றுமையில் ஒன்றிணைந்து வாழுகின்ற நாடு.

மதம்பலவும் தோன்றியிங்கு வளர்ந்திருந்த நாடு-நல்
மாந்தரினை படைத்ததனால் புகழ்பெற்ற நாடு.
உதவிஎனில் ஒடிவந்து முன்நிற்கும் நாடு –உயர்
உண்மைக்கு உயிர்கொடுப்பார் வாழுமிந்த நாடு.

அகிம்சையெனும் தத்துவுத்தை எடுத்துரைத்த நாடு-அது
அகிலமெல்லாம் பரவியதால் புகழ்பெற்ற நாடு
மகிமைபல கொண்டதனால் மகிழ்வுதரும் நாடு –தினம்
மாற்றாரை மதிக்கின்ற மாண்புகொண்ட நாடு.

நேருமாமா ஆண்டதனால் பேருபெற்ற நாடு-உயர்
நேர்மையிலே நடைபயின்று வளர்ந்திருக்கும் நாடு.
தேருபோல அழகுடனே ஏற்றம்பெற்ற நாடு –நல்
தன்மையினால் அனைவரையும் சேர்த்தணைக்கும் நாடு.

பகைவரையும் பந்தாடும் வீரம்பொங்கும் நாடு –இநு
பனிபடர்ந்த இமயம்வரை பரந்திருக்கும் நாடு
அகந்தனிலே அன்புதனை நிரைத்திருக்கும் நாடு –பல
அயலாரும் நாடிவந்து அகம்மகிழும் நாடு !

வேண்டுமட்டும் படைபலத்தை பெருக்கிருக்கும் நாடு –உயர்
வீரத்தினால் உலகெங்கும் பெருமைபெற்ற நாடு
வீணபகையை வளர்ப்பாரை பந்தாடும் நாடு –இது
விண்ணுலகை ஆள்வதிலும் வெற்றிகொண்ட நாடு !

ஏவுகணை ஆயுதங்கள் வைத்திருக்கும் நாடு –அதில்
ஏவுகின்ற விண்கலத்தால் ஆய்வுசெய்யும் நாடு
தாவிவரும் அலைதன்னால் சூழ்ந்திருக்கும் நாடு –வரும்
தொற்றினையும் அழித்திடவே முனைந்துநிற்கும் நாடு.

பாருக்குள்ளே நல்லநாடு அது பாரதத் திருநாடு

எழுதியவர் : பொதிகை மு.செல்வராசன் (27-Feb-22, 12:03 pm)
பார்வை : 164

மேலே