யாணர் விழைகாமம் பொன்னின் அணிமலரின் செவ்விதாம் – இன்னிலை 25

நேரிசை வெண்பா
(’த்’ ‘ற்’ வல்லின எதுகை)

இன்ப வியலோரார் யாணர் விழைகாமம்
பொன்னின் அணிமலரின் செவ்விதாம் - தன்மேனி
முத்த முறுவன் முயக்கொக்கின் அன்னத்தின்
பெற்றியரின் என்பெறும் பேறு 25

– இன்னிலை

பொருளுரை:

காமவின்பத்தின் இலக்கணங்களை யறியார் (சிலர்), புதுமையாக விரும்பும் காமவின்பம் பொன்னைப் போலவும், அழகிய மலரைப் போலவும் சிறப்புடையதாகும்,

ஒருவன் தனது உடம்புக்கு முத்துப் போன்ற பற்களையுடையார் புணர்ச்சி இன்பம் கிடைத்தால் அன்னப்பறவையின் இயல்பு வாய்ந்த அம்மங்கையராற் பெறும் இன்பத்தினும் வேறு சிறந்த பேறு யாது? (இல்லை)

கருத்து:

காமவின்பத்தின் இயல்பறியார் சிலர் இகழ்ந்து பேசுவர். காமம் பொன்மலர் போல அழகும், இன்பமும் தருவது. காமத்தைப் போலச் சிறந்த பேறு வேறு ஒன்றும் இல்லை;

விளக்கம்:

யாணர் - புதுமை. ஆயுந்தோறும் அறிவுபெருகுவது போலத் தோயும் தோறும் இன்பம் பெருகுவதால் (புதுமையாய்த் தோன்றுவதால்) "யாணர் விழை காமம்" என்றார்;

"அறிதோறறியாமை கண்டற்றாற் காமம்" என்பதும் ஆய்க. பொன்னைப் போலக் காமம் எப்போதும் ஒரு தன்மையாய் நிற்கும் என்ற கருத்தினால் "பொன்னின்" என்றார்;

புனையும் பூ மணந்தந்து மனத்திற்கு இன்பந்தருவது போலக் காமமும் இன்பந்தரும் என்ற கருத்தினால் "அணிமலரின்" என்றார்;

முத்தமுறுவல் என்பது முத்துப்போன்ற பற்களையுடையார் எனப் பெண்களை யுணர்த்தியது.

ஒருவன் தன் மேனி மகளிர் புணர்ச்சியின்பத்திற் பொருந்தினால் அதனினும் பெறும் பயன் வேறு ஒன்றும் இன்று என்பார் "முயக்கு ஒக்கின்" என்றார்!

ஒக்கின் – பொருந்தினால்;.

அன்னத்தின் பெற்றியர் - அன்னம் போன்ற நடையழகுடையவர். (மகளிர்);

மகளிரினும் சிறந்த பேறில்லை.
மகளிரைக் கொண்டு வாழ்வதே சிறந்த வாழ்வு என்பதாம்.

குறிப்பு: இன்பம் + இயல் – இன்பவியல்

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (1-Mar-22, 8:56 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 20

சிறந்த கட்டுரைகள்

மேலே