பிறப்பின்னாது என்றுணரும் பேரறிவி னாரை உறப்புணர்க அம்மாஎன் நெஞ்சு – நாலடியார் 173

நேரிசை வெண்பா

அடைந்தார்ப் பிரிவும் அரும்பிணியும் கேடும்
உடங்குடம்பு கொண்டார்க்(கு) உறலால் - தொடங்கிப்
பிறப்பின்னா தென்றுணரும் பேரறிவி னாரை
உறப்புணர்க அம்மாஎன் நெஞ்சு 173

- நல்லினம் சேர்தல், நாலடியார்

பொருளுரை:

இயற்கையாகவும் செயற்கையாகவுஞ் சார்ந்தவரான உறவினர், நண்பர் முதலியோரைப் பிரிந்து நிற்றலும், தீர்தற்கரிய நோயும், இறப்பும், பிறவியெடுத்தவர்க்கு ஒருங்கே பொருந்துதலால்,

ஆராயத் தொடங்கி, பிறப்புத் துன்பந் தருவது என்றுணர்ந்து பற்றற்றொழுகும் பெரிய அறிவினரான ஞானியரை மிகக் கூடுக என் உள்ளம்.

கருத்து:

துன்பந் தரும் பிறப்பை அதன் இயல்பறிந்து பற்று நீங்கியொழுகும் ஞானியரான நல்லாரினத்தைச் சார்ந்தொழுகுதல் வேண்டும்.

விளக்கம்:

‘உற்றோர் முதலியோரைப் பிரிந்து நிற்க நேர்ந்தால், அப்போது இவ்வுடம்புக்குப் பற்பல வசதிகள் குறைந்து துன்பங் கிளைத்தலால் அவையெலாம் ‘அடைந்தார்ப் பிரிவும்' என்பதில் அடங்கும்.

உடங்கு உறலால் என்க. உடம்பு இலக்கணையாற் பிறவியை உணர்த்திற்று.

இத்துன்பப் பிறவியை மகிழ்தல் அறிவுடைமை ஆகாமையின், இன்னாதென்றுணர்தல் பேரறிவுடைமையாயிற்று.

நல்லினம் என்பது சிறப்பாக ஞானியரினம் என்பது இச்செய்யுட் கருத்து.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (4-Mar-22, 10:37 am)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 36

சிறந்த கட்டுரைகள்

மேலே