எள்ளும் பழிநிலைகள் யாதும் படியாமல் காக்கும் வழியே தவம்கை வரும் - தவம், தருமதீபிகை 968
நேரிசை வெண்பா
உள்ளம் பரத்தோ(டு) உறைய உயிருறைந்து
கள்ளப் புலன்கள் கடிந்துமே - எள்ளும்
பழிநிலைகள் யாதும் படியாமல் காக்கும்
வழியே தவம்கை வரும். 968
- தவம், தருமதீபிகை,
- கவிராஜ பண்டிதர் ஜெகவீர பாண்டியனார்
பொருளுரை:
கள்ளமான பொறி புலன்களைக் கடிந்து நீக்கி, எள்ளலான இழிபழிகள் ஏறாமல் காத்துத் தன் உள்ளமும் உயிரும் பரம்பொருளோடு உறைந்து மகிழும்படி புரிந்துவரின் அது சிறந்த தவமாய் நிறைந்து உயர்ந்த பேரின்பம் சுரந்து வரும் என்கிறார் கவிராஜ பண்டிதர்.
உயிர் இனங்களுள் மனிதன் உயர்ந்தவன் எனச் சிறந்து வந்துள்ளான். இந்தச் சிறப்பு எதனால் அமைந்தது? மன உணர்வினால். தன் மனத்தை நல்ல வழிகளில் பழக்கிப் புனிதமாய்ப் பண்படுத்தி வருபவன் தனி நிலையில் உயர்ந்து திகழ்கிறான். இனிய மனம் அரிய பல மகிமைகளை அருளி வருகிறது.
எந்த மனிதனுடைய அந்தக் கரணம் தூய்மை தோய்ந்துள்ளதோ அந்த மனிதன் அதிசய நிலையில் எவராலும் துதி செய்யப் பெறுகிறான், மனம் புனிதமாய் வர அவன் மாதவனாய் வருகிறான். அதனால் அளவிடலரிய மகிமைகள் விளைகின்றன.
எண்ணங்களும் மொழிகளும் செயல்களும் புண்ணிய நிலைகளில் பொருந்திவரின் அது தவமாய்ப் பொலிந்து வருகிறது. தவம் பெருகிவர அவம் அருகி ஒழிகிறது; சுகம் மருவியெழுகிறது.
உள்ளம் தவத்தில் தோய்ந்துவரின் உயிர் பரத்தில் தோய்ந்து பேரின்ப வெள்ளம் பாய்ந்து வருகிறது. அரிய பேறுகளை எல்லாம் தவம் எளிதே அருளுகிறது.
வேண்டிய வேண்டியாங்(கு) எய்தலால் செய்தவம்
ஈண்டு முயலப் படும். 265 தவம்
தான் விரும்பிய இன்ப நலங்களை எல்லாம் விரும்பியபடியே ஒருவன் அடைய வேண்டுமானால் அவன் தவத்தைச் செய்ய வேண்டும் என வள்ளுவர் இங்ஙனம் தெளிவாய்க் குறித்திருக்கிறார்.
கருதிய யாவும் தரும் அற்புதக் கற்பகமாய்த் தவம் அமைந்துள்ளமையை இதனால் நன்கு அறிந்து கொள்ளுகிறோம்.
தனக்கு வேண்டும் என்று மனிதன் யாண்டும் வேண்டி நிற்பது இன்பத்தை; வேண்டாம் என்று வெறுத்து விலகுவது துன்பத்தை. அல்லலான துன்பங்கள் யாவும் நீங்கி நல்ல இன்பங்களை அடையவுரிய வழி இங்கே விழி தெரிய வந்தது.
தவத்தால் மாசுகள் ஒழிகின்றன; தேசுகள் விளைந்து ஈசன் அருளைத் தவசி எளிதே பெறுகின்றான். அல்லல்களை ஒழித்து நல்ல சுகங்களை நல்கி எல்லா நிலைகளிலும் உயர்த்தி வருதலால் தவம் ஆன்ம அமுதமாய் அமைந்து நின்றது.
அடங்கருங் தோற்றத்(து) அருந்தவம் முயன்றோர்தம்
உடம்பொழித்(து) உயருலகம் இனிது பெற்றாங்கே. (கலி, 188)
அரிய தவத்தை முயன்றவர் உயர்ந்த கதியை அடைவர் என நல்லந்துவனார் என்னும் சங்கப் புலவர் இங்ஙனம் குறித்திருக்கிறார். தன்னைத் தழுவி நின்ற மனிதனைத் தெய்வம் ஆக்கி மேலான விண்ணுலக போகத்தைத் தவம் சால்போடு அருளும் என்பதையிதனால் அறிந்து கொள்ளுகிறோம்.
நேரிசை வெண்பா
இல்லியலார் நல்லறமும் ஏனைத் துறவறமும்
நல்லியலின் நாடி யுரைக்குங்கால் - நல்லியல்
தானத்தால் போகம்; தவத்தாற் சுவர்க்கமாம்
ஞானத்தால் வீடாக நாட்டு! 35 சிறுபஞ்சமூலம்
இல்லறம், துறவறம், தானம், தவம், ஞானம் ஆகிய ஐவகை நிலைகளை இது காட்டியுள்ளது. தவத்தால் சுவர்க்க போகம் கிடைக்கும் எனக் காரியாசான் இவ்வாறு கூறியிருக்கிறார்.
கலிவிருத்தம்
(விளம் விளம் மா கூவிளம்)
ஒருமைகொள் மாதவம் உழந்து பின்முறை
அருமைகொள் வீடுபே(று) அடைந்து ளோர்சிலர்
திருமைகொள் இன்பினில் சேர்கின் றோர்சிலர்
இருமையும் ஒருவரே எய்தி னோர்சிலர். 18
ஆற்றலில் தம்உடல் அலசப் பற்பகல்
நோற்றவர் அல்லரோ நுவலல் வேண்டுமோ
தேற்றுகி லீர்கொலோ தேவர் ஆகியே
மேல்திகழ் பதம்தொறும் மேஉற் றோர்எலாம். 19
- காசிபனுபதேசப் படலம், அசுர காண்டம், கந்தபுராணம்
கலிவிருத்தம்
(விளம் விளம் மா கூவிளம்)
எவ்வகைப் பொருள்களும் ஈய வல்லது
செவ்விய தவமதே தெரியின் வேறிலை;
இவ்வுல கத்திலஃ(து) இயற்று கின்றதே
உவ்வுடல் எடுத்தபேர் உறுதி என்பவே. – திருக்கூவப் புராணம்
தவத்தின் மகிமை மாண்புகளை இவை சுவையாய் விளக்கியிருக்கின்றன. இம்மையில் இனிய அரச போகங்களையும், மறுமையில் அரிய பெரிய சுவர்க்க போகங்களையும் தவம் ஒருங்கே கொடுக்கும் என மேலோர் பலரும் இங்ஙனம் உணர்த்தியுள்ளனர். உயிரின் உயர்வான உறுதி நிலை உணர வந்தது.
அறிவு நலம் பெருகி வந்துள்ள மனிதன் தனது உயிர்க்கு உயர்ந்த உறுதிநலனை அருளுகிற தவத்தை உரிமையோடு விரைந்து செய்து கொள்ள வேண்டும். அவ்வாறு செய்தவன் தெய்வீக நிலையை எய்தித் திவ்விய போகங்களை நுகர்கின்றான் என்கிறார் கவிராஜ பண்டிதர்.