பற்றின்றி உள்ளம் படிந்து பரனருளைப் பற்றி யிருந்து பழகிவரின் ஆனந்தம் - தனிமை, தருமதீபிகை 978
நேரிசை வெண்பா
பற்றின்றி உள்ளம் படிந்து பரனருளைப்
பற்றி யிருந்து பழகிவரின் - முற்றியபேர்
ஆனந்தம் அங்கே அமைந்துவரும் எவ்வழியும்
மோனந் ததும்பும் முதிர்ந்து. 978
- தனிமை, தருமதீபிகை,
- கவிராஜ பண்டிதர் ஜெகவீர பாண்டியனார்
பொருளுரை:
உலகப் பொருள்களை வெறுத்து விலகிப் பரம்பொருளைத் தோய்ந்து கிழமையாய்ப் பழகிவரின் நிறைந்த பேரின்பம் விரைந்து வரும்; எவ்வழியும் மோனம் ததும்பி முதிர்ந்து விளங்கும்; அந்த ஆனந்த நிலையை அடைதல் அதிசய நலமாகும் என்கிறார் கவிராஜ பண்டிதர்.
தாம் செய்த வினைகளின் விளைவுகளைச் சீவர்கள் எவ்வழியும் தவறாமல் அனுபவித்து வருகின்றனர். அவ்வரவில் அளவிடலரிய பிறவிகள் தொடர்ந்து வந்துள்ளன. துன்பங்களையும் இன்பங்களையும் நுகர்ந்து கொண்டு மாறிமாறி உயிரினங்கள் உடல்களை மருவியும் ஒருவியும் ஓயாமல் சுழன்று வருவது மாயாத மாயச் சுழலாய் விரிந்துள்ளது. பிறவிநிலை பெருஞ்சூறையாய் நின்றது.
விறகுகளைப் பற்றிக்கொண்டு தீ மூண்டு எரிகிறது; வினைகளைப் பற்றிக் கொண்டு பிறவி நீண்டு வருகிறது. பிறந்த பிறவிகள் தோறும் யான், எனது என்னும் பாச பந்தங்கள் படிந்து வருதலால் மேலும் மேலும் பிறவிகள் படர்ந்து அடர்ந்து பரவி நிற்கின்றன. பாசப்பற்றால் நீசப்பிறவிகள் நெடிது நீண்டு ஈசனை விலகி இடர்க்கடலுள் வீழ்ந்து உயிர்கள் என்றும் தீராத துயர்களாய் யாண்டும் உழன்று வர நேர்ந்தன.
பற்றி விடாஅ இடும்பைகள் பற்றினைப்
பற்றி விடாஅ தவர்க்கு. 547 தவம்
நீங்காத நெடிய கொடிய துயரங்களை அனுபவிக்கின்றவர்கள் யாவர்? என்பதை வள்ளுவர் இவ்வாறு தெளிவாய் வரைந்து காட்டியுள்ளார். உன் உள்ளத்தில் பற்றியுள்ள உலகப் பற்றை நீ விட்டால் ஒழிய உன் உயிரைப் பிறவித் துயரம் விடாது என மனித மரபுக்கு உரிய நலனை இது இனிது போதித்துள்ளது.
இந்தக் கொடிய மாயப் பிணக்கை உயிர் தாய் வயிற்றுள் இருக்கும் போது சிறிது உணர்கிறது; உலகில் பிறந்தால் பாசம் யாதும் தோயாமல் ஈசனைத் தோய்ந்து உய்யவேண்டும் என்று உறுதி பூண்டு வருகிறது; மண்ணில் பிறந்ததும் அதனை மறந்து போகிறது. அந்த மறப்போடு பிறப்பும் பெருகி வருகின்றது.
எழுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
(விளம் மா விளம் மா / விளம் விளம் மா)
(விளம் வருமிடத்தில் மாங்காய்ச்சீர் வரலாம்)
இறப்பொடு பிறப்பிற் பன்முறை யிதுகா
..றிடருழந் தனமினிப் பிறந்தாங்
கறப்பெருங் கடவுள் பூசனைப் பேற்றா
..லவற்றினை யறுத்துமென் றெண்ணிச்
சிறப்புற விருக்கு முயிர்கருப் பையுஞ்
..செறிவழுக் குதகமு மற்றும்
உறப்பெரி தழிந்து மோகக்கான் மிளிர்ப்ப
..வுணர்விழந் தரிதின்மண் சாரும். 306
சூக்கும வுடலைப் பற்றியே யெழுந்த
..தூலதே கத்தினுண் முன்னர்
ஆக்கிய வறம்பா வங்களின் பயனை
..யவ்வினை யெனப்பின்பு பயக்கும்
நீக்கரும் வினைகள் வளாவியா னென்னுஞ்
..செருக்கினா னித்தலு மருந்திப்
போக்கொடு வரவிற் படுமுயி ரிறைவன்
..பொருவில்பா தம்புகு காறும். 307
- தணிகைப் புராணம்
கருப்பையில் இருக்குங்கால் உயிர் கருதியிருந்ததைப் பிறந்தபின் மறந்து வைய மையல்களில் அழுந்தி வெய்ய துயரங்களை அடைந்து உழல்வதை இவை வரைந்து காட்டியுள்ளன.
பாசப் பற்றுகள் ஆகிய மாசுகள் நீங்கிய பொழுதுதான் உயிர் ஈசனை அடைய நேர்கிறது. தனக்கும் இறைவனுக்கும் உள்ள உறவுரிமைகளைத் தெளிவாக அறிந்தவர்கள் ஞானிகள் ஆகின்றனர்; நீச ஆசைகளை எல்லாம் அறவே நீங்கி ஈசனையே கருதி உருகி பிறவி நீங்கிப் பேரின்பம் பெறுகின்றனர்; அவ்வாறு பெறுபவர் நித்திய முத்தர்களாய் நிலவி நிலையான ஆனந்த நிலையில் நிலைத்து நிற்கின்றனர்.
துறவும் தவமும் பிறவித் துயரங்களை அறவே ஒழித்துப் பேரானந்தம் தருவனவாதலால் அவற்றைத் தழுவியுள்ளவர் உலகப் புலைகளை அருவருத்து வெறுத்துத் தனியே ஒதுங்கியிருந்து இறைவனை நினைந்து இன்பம் மீதூர்ந்துள்ளனர்.
நிலைநீர் மொக்குளின் வினையாய்த் தோன்றி,
வான்தவழ் உடற்கறை மதிஎனச் சுருங்கி,
புல்லர்வாய்ச் சூள்எனப் பொருளுடன் அழியும்
சீறுணவு இன்பத் திருந்தா வாழ்க்கை,
கான்றிடு சொன்றியின் கண்டரு வருத்து, 5
புலனறத் துடைத்த நலன்உறு கேள்வியர்,
ஆரா இன்பப் பேரமு(து) அருந்தி,
துறவெனும் திருவுடன் உறவுசெய் வாழ்க்கையர்,
வாயினும், கண்ணினும், மனத்தினும், அகலாப்
பேர்ஒளி நாயகன்; கார்ஒளி மிடற்றோன்; 80 கல்லாடம்
உலக வாழ்வு நீர் மேல் குமிழி போல் நிலையில்லாதது; புலை படிந்தது; அவலத் துயரங்கள் நிறைந்ததென்றறிந்து பாச பந்தங்கள் யாவும் துறந்த துறவிகள் இறைவனையே கருதி உரிமையோடு உறைந்திருக்கும் நிலைமையை இது உணர்த்தியுளது
’கான்றிடு சொன்றி’ என்றது வெளியே கக்கி வாந்தி எடுத்த சோற்றை. வேண்டாம் என்று வெறுத்துவிட்ட உலக போகங்களை மீண்டு யாண்டும் விரும்பார் என அவரது வைராக்கிய உறுதி நிலைகளை விளக்குதற்கு ஈண்டு இது உவமையாய் வந்தது.
சிற்றின்பப் புலைகளை நீங்கினவரே பேரின்ப நிலையினை அடைகின்றார். பரமானந்தப் பொருளைப் பற்ற நேர்ந்தவர் பழி படிந்த பற்றுக்கள் முற்றும் அற்றவராய் வரமான நெறியில் இருக்கின்றார்.
நீத்தார், துறந்தார் என்னும் பெயர்கள் துறவிகளுடைய நிலைமை தலைமை நீர்மைகளைத் தெளிவாய் விளக்கி நிற்கின்றன.
அகப்பற்றும் புறப்பற்றும் அற்றவரே பிறப்புகள் முற்றும் அற்றுப் பேரானந்த நிலையை இனிது பெறுகின்றார்.
எழுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
(விளம் மா விளம் மா விளம் விளம் ளிமா)
(விளம் வருமிடத்தில் மாங்காய்ச்சீர் வரலாம்)
இருவகைப் பற்றில் ஒருவனே ஞானி
..எனப்படின் புறப்பற்ற தேனும்
ஒருவுதல் இலரும் எவணமப் பெயருக்
..குரியர்?வேர் ஒன்றுமில் கொடியும்
தரும்இலை மலர்காய் எனினகப் பற்றில்
..தவர்புறப் பற்றையும் தணவார்
மருவினும் அஃதோ ரொருவர்வே ரன்றீர்
..மலர்க்கொடி வாடுறா வகையே. 40
- வைராக்கிய தீபம்
பாசப்பற்றுகள் முற்றும் அற்றவரே துறவி, ஞானி என்னும் மகிமையான பெயர்களுக்கு உரியர் ஆகின்றார்.
இருளிலிருந்து நீங்கினவன் ஒளியைக் காண்கிறான்.
துன்பப் புலையைக் கடந்தவன் இன்பநிலையை எய்துகிறான்.
பாசபந்தம் ஒழிந்தவன் ஈசனை அடைகிறான்.
கண்ணில் காசம் படர்ந்தால் அது எதையும் சரியாய்க் காணாது; மனத்தில் பாசம் படிந்தால் உண்மையான நிலையை அது உணர முடியாது. மாசு தீர்ந்த போதுதான் மனிதன் புனிதனாய் உயர்ந்து பரம புனிதனான ஈசனை இனிது தெரிந்து இன்பமுறுகிறான்.
ஒருவன் உள்ளம் தூய்மை தோயின் பொல்லாச் சூழல்களை ஒல்லையில் ஒதுங்கித் தனியே தங்கி உரிமையைச் சிந்திக்கின்றவன் உயர்ந்த கதியை விரைந்து பெறுகிறான். பொறிபுலன்கள் ஒடுங்கி அறிவு ஒளி வீசி எழுவதே ஆன்ம சோதியாய் மேன்மை மிகுந்து பான்மை சுரந்து திகழ்கிறது.
எழுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
(விளம் மா விளம் மா / விளம் விளம் மா)
(விளம் வருமிடத்தில் மாங்காய்ச்சீர் வரலாம்)
கண்முதல் புலன்கள் யாவையும் ஒடுக்கிக்
..காணவா குலமறக் கடிந்தங்(கு)
உண்மைகாண் விருப்போ(டு) உயிர்க்கெலாம் பரிவுற்(று)
..உற்றசிற் றின்பத்தை உவர்த்து
வண்மையாம் உணவு வந்தவா கண்டு
..வாட்டமும் மகிழ்ச்சியும் இன்றித்
தண்மையாம் உடம்புதான்.தனாது யென்னாத்
..தன்மையோன் தத்துவம் உணர்வான்.- குறுந்திரட்டு
தத்துவ ஞானியின் உத்தம நிலைகளை இது உணர்த்தியுள்ளளது. குறித்துள்ள நீர்மைகளைக் கூர்மையாய் உணர்ந்து கொள்ள வேண்டும். உலக ஆசைகள் ஒழியவே உயிர் ஒளி வீசி எழுகிறது.
தூய தன்மைகள் உள்ளே தோய்ந்து வருந்தோறும் தீய புன்மைகள் வெளியே தேய்ந்து விரைந்து மாய்ந்து போகின்றன.
உள்ளத்தில் அழுக்கு ஏறின் உயிர் இழுக்காய் அல்லல்களே அடையும்; அந்த மாசு ஒழியின் தேசு மிகுந்து தெய்வீக இன்பங்களை எய்தி மகிழ்கிறது புல்லிய புலை நீங்க நல்ல நிலை ஓங்குகிறது.
உன்னைப் படுதுயர்களில் ஆழ்த்துகின்ற பற்றை ஒழித்து விடு; உனக்கு என்றும் நிலையான பேரின்பங்களை அருளுகின்ற பரம்பொருளைப் பற்றிக் கொள். அதிசயமான ஆனந்த நிலை உன்னிடமே உள்ளது; உன்னை உரிமையாய்க் கருதிவரின் உயர்கதி பெருகி வரும்; இந்த உண்மையை உணர்ந்து உய்தி பெறுக என்கிறார் கவிராஜ பண்டிதர்.