தத்தம் வரிசையான் இன்புறூஉம் மேல் – நான்மணிக்கடிகை 66
இன்னிசை வெண்பா
ஊனுண்(டு) உழுவை நிறம்பெறூஉம் நீர்நிலத்துப்
புல்லினான் இன்புறூஉங் காலேயம் - நெல்லின்
அரசியான் இன்புறூஉங் கீழெல்லாம்; தத்தம்
வரிசையான் இன்புறூஉம் மேல் 66
- நான்மணிக்கடிகை
பொருளுரை:
ஊனுணவை உட்கொண்டு புலி மேனியமையும்; ஈரம் பொருந்திய நிலத்திலுள்ள புல்லினை மேய்ந்து ஆனிரைகள் இன்புறும்;
நெல்லரிசிச் சோற்றினால் கீழ்மக்களெல்லாரும் இன்புறுவர்; மேன்மக்கள் தங்கள் தங்கள் தகுதிக் கேற்ற மதிப்புச் செயல்களால் இன்புறுவர்.
கருத்து:
புலி ஊன் உண்டு இன்புறும்; ஆனிரைகள் புல்லுண்டு இன்புறும்; கீழோர் சோறுண்டு இன்புறுவர்; மேலோர் தங்கள் தகுதிக் கேற்ற மதிப்புச் செயல்களால் இன்புறுவர்.
விளக்கவுரை:
‘நிறம்பெறூஉ' மென்னுங் குறிப்புக் கீழோர் விலங்கோடொத்து உடம்பையே வளர்ப்ப ரென்ப துணர்த்தும்; ‘வாயுணர்வின் மாக்கள்' என்றார் வள்ளுவரும்.