பெண்களுக்கு சம உரிமை இன்று , மனித தர்மத்திற்கு வாழ்வு நாளை
மார்ச் 8 ஆம் தேதி வந்தால் நினைவுக்கு வருவது பெண்கள் தினம், பிறகு வரும் நேரங்கள், வழக்கம் போல அனுதினம்!
இவ்வுலகில் பெண்களின் உரிமை பிரச்சினைகள் ஒரு சில அல்ல , மாறாக அதிக அளவில் பலப் பல!
ஒரு புறம் தாயை தெய்வமாக பார்க்கும் மனித சமுதாயம் இன்னொரு புறம் பெண்ணை பேய் போல நடத்தி வருவது உண்மையான மனிதப் பண்பு அல்ல !
குறைந்த பட்ச கல்வி அறிவு படைத்த பெண்கள் நூற்றில் 54% மட்டுமே, ஆண்கள் 75%, இந்நிலை மாற வேண்டும்!
உலக அளவில் வேலைவாய்ப்பு என்று எடுத்துக் கொண்டால் அதிக அளவில் வேலை கிடைப்பது ஆண்களுக்கே!
ஊதிய விகிதத்தை கவனிக்கையில், பெண்களை விட சராசரி 20% அதிக சம்பளம் ஆண்களுக்கே!
இன்னமும் கருக்கலைப்பு, குடும்ப கட்டுப்பாடு, கருத்தடை போன்ற விவகாரத்தில் பெண்ணின் தீர்மானத்தை காட்டிலும் மற்றவர் முடிவே செயல் படுத்தப்படுகிறது!
கருத்தரிப்பு, கருக்கலைப்பு நாட்கள், பிரசவத்திற்கு பின்னர் வரும் நாட்கள் போன்ற நேரத்தில் பெண்களுக்கு தகுந்த மருத்துவ கண்காணிப்பு மிகவும் அவசியம்!
இக் கவனிப்பு சரியில்லாமல் போவதால் பல பெண்கள் கருச்சிதைவு, அதிக ரத்த வெளியேற்றம் மற்றும் தொற்று நோய் இவற்றால் பாதிக்கப்படுகின்றனர், ஏன், இறக்கின்றனர் கூட!
வீடு என்றபோதும் அலுவலகம் என்றபோதும் ஆண்களின் வார்த்தையே அதிக அளவில் ஏற்கப்பட்டு செயல் படுத்தப்படுகிறது! இதை இல்லை என்று சொல்ல இல்லை!
பெண்கள் பலாத்காரம், பாலியல் பலாத்காரம், அவர் மீது உடல் தாக்குதல் இன்றும் பல இடங்களில் குடும்பங்களில் நடந்த வண்ணமே இருக்கிறது!
பெண்கள் திருமணம் சட்டரீதியாக 18 வயது என்றபோதும் 12-15 வயதில் இன்னும் குழந்தை திருமணங்கள் ஆங்காங்கே நிகழ்ந்து கொண்டிருக்கிறது என்பதும் கசப்பான உண்மையே!
சட்டத்திற்கு புறம்பான, சமுதாயக் கேடான இத்தகைய நிகழ்வுகள் ஒரு மனிதனின் குறைந்த பட்ச உரிமையை அபகரித்து அவமதிக்கிறது!
ஏதேனும் ஒரு போர்வையின் கீழ் "பிறப்புறுப்பு சிதைவால்" பெண்கள் இந்நாளிலும் சித்திரவதை செய்யப்பட்டு கொடுமை படுத்தப்படுகிறனர்! மாற வேண்டும் இந்த அவலம்!
மேற்கூறிய விஷயங்களில் பெண்களின் விருப்பத்திற்கு முரண்பாடாக நடப்பவர்களை மக்களும் அரசாங்கமும் தடுத்து நிறுத்த வேண்டும், தேவை பட்டால் தகுந்த தண்டனையும் அளிக்கப்பட வேண்டும்!
இன்று எவ்வளவோ ஆண்கள் பெண்களை தமக்கு சரிசமமாக பார்ப்பது, நடத்துவது மிகவும் மகிழ்ச்சி தரும் செய்தி!
ஒவ்வொரு நாட்டிலும் உள்ள ஒவ்வொரு ஆணும் சமுதாயங்களும் பெண்கள் சம உரிமையை மனமுவந்து அன்றாட வாழ்வில் நிறைவேற்ற வேண்டும்!
ஐக்கிய நாடுகள் சபையில் வருடந்தோறும் தீர்மானங்கள் நிறைவேற்றப்படுவது முதல் அடி எடுத்து வைப்பது போல்! அடுத்த அடியை ஒவ்வொரு ஆணும் எடுக்க வேண்டும்!
எதிராக செயல்படுவோரைக் கண்டால் தடியை எடுக்க வேண்டும்!
என்று, உலகில் உள்ள ஒவ்வொரு ஆணும் பெண்ணை தனக்கு சமமான வளே என்று மனதார உணர்ந்து அவளை அவ்வாறு மதிக்கிறானோ அன்று தான் "பெண்கள் உலகின் கண்கள்" என்ற வாசகத்தை ஊர்ஜிதம் செய்யும் இனிய நாள்!
உலகில் உள்ள அனைத்து பெண்டிருக்கும் பெண்கள் தின நல்வாழ்த்துக்கள்
வாழ்த்தினர்:ஜாய்ராம்
08.03.2022