குடிமாசு இலார்க்கே யுள மூன்று - திரிகடுகம் 77

நேரிசை வெண்பா
(’ய் + அ’. ’ள்’ இடையின எதுகை)

கயவரைக் கையிகந்து வாழ்தல், நயவரை
நள்ளிருளுங் கைவிடா நட்டொழுகல் - தெள்ளி
வடுவான வாராமல் காத்தலிம் மூன்றும்
குடிமா(சு) இலார்க்கே யுள. 77

- திரிகடுகம்

பொருளுரை:

கீழ்மக்களைச் சேராமல் அவர்களைக் கைவிட்டு வாழ்தலும்; நீதியுடைய நல்லவரை நட்புச் செய்து நடு இரவிலும் கைவிடாமல் அவருக்கு இணங்க நடத்தலும், ஆராய்ந்து தனக்குப் பழிப்பான காரியங்கள் வரவொட்டாமல் காத்துக் கொள்ளுதலும் ஆகிய இம் மூன்றும் குடிப்பிறப்பிலே குற்றம் இல்லாதவர்க்கே உண்டாகும்!

கருத்துரை:

கீழ்மக்கள் உடனான கூட்டுறவை விட்டிருப்பதும், மேன் மக்களை எப்பொழுதும் பிரியாமல் இருப்பதும், தமக்குப் பழி வராமற் காப்பதும் நல்லோர்க்கு உரியன எனப்பட்டது.

கயவர்: கய என்னும் பண்படியாகப் பிறந்த பெயர். நயம்: நீதி. நள் - நடுக்கம்; இப் பொருளில் நள்ளிரா அச்சத்தைத் தரும் நடு இரா எனக் கொள்க!

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (7-Mar-22, 10:02 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 29

மேலே