தம் இன்புதல்வர்க் கன்றே பலகாலும் சொல்வார் பயன் - நீதிநெறி விளக்கம் 74
நேரிசை வெண்பா
தெய்வ முளதென்பார் தீய செயப்புகின்
தெய்வமே கண்ணின்று நின்றொறுக்கும் - தெய்வம்
இலதென்பார்க் கில்லைத்தம் இன்புதல்வர்க் கன்றே
பலகாலும் சொல்வார் பயன். 74
- நீதிநெறி விளக்கம்
பொருளுரை:
தெய்வம் உண்டு என்று சொல்வோர் தீய காரியங்களைச் செய்யத் தலைப்பட்டால் அவர்கள் நம்பும் அத்தெய்வமே கண்ணோட்டமின்றி அவர்முன் நின்று அத்தீய காரியங்களுக்காக அவர்களைத் தண்டிக்கும்;
தெய்வம் இல்லை என்று சொல்வோர்க்கு அத்தெய்வம் அவ்வாறு தோன்றுவதுமில்லை, அவர்களைத் தண்டித்தலுமில்லை;
இஃது எதுபோலெனில், பெற்றோர் தம் அன்பார்ந்த புதல்வர்க்கன்றோ அவர்கள் நன்னெறி தப்பிச் செல்லுந்தோறும், பயன் தருஞ் சொற்களை நீதிகளைச் சொல்வார்கள்? அதுபோல.
விளக்கம்:
பெற்றோர் தம் அன்பான புதல்வர்க்கு மட்டும் அடுத்தடுத்து அறநெறி கற்பிப்பாரன்றி அன்பிலாப் புதல்வர்க்கு அவ்வாறு கற்பியாரானமை போல் இறைவனும் தன்னை நம்பினவர்க்கு அவரை ஒறுத்தேனும் நன்னெறி காட்டுவனன்றி நம்பாதார்க்கு அவ்வாறு செய்வதில்லை.
விளக்கம்:
'தம் இன்புதல்வர்க்கன்றே பலகாலும் சொல்வார் பயன்' என்னும் ஈற்றடியால் முன்னடிகளில் தொடங்கிய கருத்தை முடித்தலால், இது வேற்றுப் பொருள் வைப்பணி.
கருத்து:
இறைவனுண்டென்று நம்பினவர்களை அவ்விறைவன் ஒறுத்தேனுந் தீ நெறியினின்றுந் தடுப்பான்.