தீயன நல்லன ஆகாவாம் நாவின் புறநக்கிக் கொல்லுங் கவயமாப் போல் - நீதிநெறி விளக்கம் 75
நேரிசை வெண்பா
தீய செயற்செய்வார் ஆக்கம் பெருகினும்
தீயன தீயனவே வேறல்ல - தீயன
நல்லன ஆகாவாம் நாவின் புறநக்கிக்
கொல்லுங் கவயமாப் போல் 75
- நீதிநெறி விளக்கம்
பொருளுரை:
தீய காரியங்களைச் செய்வோரின் பொருள் ஒருகால் பெருகி வளர்ந்தாலும் தீய காரியங்களால் திரட்டிய அப்பொருள் எல்லாம் நாவினால் இன்பமுற நக்கிப் பின்னால் கொல்லுகின்ற காட்டுப் பசுவைப் போல் தீமை பயப்பனவேயன்றி வேறாகா. ஏனெனில், தீயகாரியங்களால் என்றும் நற்காரியங்களாக மாட்டாது.
விளக்கம்:
காட்டுப்பசு தான் கொல்ல விரும்பும் ஓர் உயிரை நாவினால் இன்பந் தோன்ற நக்கிக் கொண்டேயிருந்து, அவ்வின்பத்தில் ஈடுபட்டு அவ்வுயிர் தன்னிலையில் அசையாமல் நிற்கையில் அது திடீரெனப் பாய்ந்து அதன்உயிரை வாங்கும்.
அதுபோல் தீநெறியில் திரட்டிய பொருள் முதலில் இன்பந் தருவதாய்த் தோன்றினும், இறுதியில் தீமையைப் பயக்கும் என்றார்.
இது கருதியே "தீயன தீயனவே வேறல்ல" என்றும், "தீயன நல்லன வாகா" என்றுங் கூறினார்.
கவயமா - காட்டுப்பசு. தீ தான் பற்றிய பொருளை முற்றும் எரித்தல் போலத் தீய வழியால் ஈட்டப்பட்ட பொருளும் தற்சேர்ந்தாரை முற்றும் அழித்தலால் தீயன எனப்படும்.
கருத்து:
தீயகாரியங்களில் திரட்டிய பொருள் தீமையையே செய்யும்.