மனங்கொத்திப் பறவை மதிப்புரை கவிஞர் இராஇரவி நூலாசிரியர் கவிதாயினி முனைவர் சுநாகவள்ளி

மனங்கொத்திப் பறவை.

மதிப்புரை கவிஞர் இரா.இரவி.

நூலாசிரியர் கவிதாயினி முனைவர் சு.நாகவள்ளி


நூலாசிரியர் கவிதாயினி முனைவர் சு.நாகவள்ளி அவர்களை சகலகலாவல்லவி என்றே சொல்ல வேண்டும். நல்லாசிரியர், ஆய்வாளர், கவிஞர், திருக்குறள் சாதனையாளர் என பன்முக ஆற்றல்மிக்கவர். அறப்பணி ஆசிரியப் பணியே என்று நின்றுவிடாமல் அதையும் தாண்டி சிந்தித்து கவிதைகள் எழுதி வரும் படைப்பாளி. இன்று பெண்கவிஞர்கள் குறைவாகவே உள்ளனர் அந்த வரிசையில் நல்லிடம் பிடித்துள்ள நூலாசிரியருக்கு பாராட்டுகள்.
மனதில்பட்டதை உடன் கவிதையாக்கும் ஆற்றல் இருப்பதால் வடித்த கவிதைகள் இவை. நூலிலிருந்து பதச்சோறாக சில கவிதைகள் மட்டும் உங்கள் பார்வைக்கு,
மரங்கள் வளர்ப்போம்
மழை பெறுவோம்
பதாகைகளுடன் மரங்கள்
காட்டழிப்பில் தீவிரமாய்
மனிதம்
உண்மைதான் ஒரு பக்கம் காடுகளை அழித்துக் கொண்டே மறுபக்கம் மரம் வளர்ப்போம் என்று முழங்கும் இரட்டை வேடத்தை சாடும் விதமாக வடித்த கவிதை நன்று. காடுகளில் விலங்குகள் வாழும் இடத்தை அழித்து கட்டிடங்கள் கட்டி வரும் நிலை இனி தொடரக் கூடாது என்ற விழிப்புணர்வினை விதைக்கும் விதமாக உள்ளது பாராட்டுகள்.
நான்
களையிழந்த போதும்
சோர்ந்த போதும்
இளைப்பாற
நாடி வந்து ஓடி வந்து
என் வாட்டம் நீக்கும்
அகன்ற
ஆலமரநிழல்
நீதானே அம்மா
அம்மாவை ஆலமர நிழல் என்கிறார். நல்ல ஒப்பீடு உவமை ஆலமர நிழல் சுகமானது நலம்பயக்கும் அம்மாவும் அப்படித்தான் உலகிலுள்ள உறவுகளில் ஒப்பற்ற உறவு அம்மா.
தன்னம்பிக்கை
உங்களால் முடியும்
உங்களால் எதையும்
சாதிக்க முடியும்
சிந்தியுங்கள்
மாறுப்பட்டு சிந்தியுங்கள்
திட்டமிடுங்கள்
வேறுபட்டு திட்டமிடுங்கள்
தன்னம்பிக்கை என்பது ஒரு மனிதனுக்கு மூன்றாவது கையாக விளங்கும் ஏழாவது அறிவாக நிற்கும். அப்படிப்பட்ட தன்னம்பிக்கை விதைக்கும் விதமாக வடித்த கவிதை. வேறுபட்டு சிந்தித்தால் வெற்றி பெறலாம் என்பதில் சில உவமைகள் மூலம் நன்கு உணர்த்தி உள்ளார் பாராட்டுகள்.
தாவணிக் கனவுகள்
பாவாடை சட்டை பாங்காய்
நான் போட்டுத் திரிந்த காலம் தான்
எனக்கு கிடச்ச பொற்காலம்!!
ரெட்டை சடை போட்டு
ரெண்டு கால் பாய்ச்சலில்
நான் திரிந்த காலம் தான்
எனக்கு இனிமையான காலம்!!
எல்லோருக்கும் குழந்தைப் பருவம் பொற்காலம் தான். படிக்கும் வாசகர் அவரவர் குழந்தைப் பருவத்தை நினைத்துப் பார்க்கும் விதமாக வடித்த கவிதை நன்று. திரும்ப யாருக்கும் கிடைக்காத குழந்தைப்பருவம் உண்மையில் பொற்காலம் தான். மனிதன் வளர வளர அவனோடு சேர்ந்து கவலைகளும் சோகங்களும் வளர்ந்து விடுகின்றன.
கனிந்த இளமையில்
கண்களுக்குள் நடக்கும்
காதல் ஐல்லிக்கட்டு
காதல் மனங்களுக்குள்
காவியமாகும் ஐல்லிக்கட்டு
தமிழ்ர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு பற்றிய தொடக்க வரிகள் நன்று பாராட்டுகள்.
மனம் தளராதே
சோம்பேறியாக
சோர்விழந்தது போதும்
முயன்று எரிமலையாய்
வெடித்தெழு.
சுறுசுறுப்பு தரும் விதமாக, வீரம் விதைக்கும் விதமாக, தன்னம்பிக்கை சிறக்கும் விதமாக பல கவிதைகள் உள்ளன. மனதிற்குள் சாதிக்க வேண்டும் என்ற தீப்பொறி எப்போதும் இருந்து கொண்டே இருக்க வேண்டும். இன்றைய இளைய தலைமுறையினருக்கு முன்னேற்றம் தரும் விதமாக வடித்திட்ட கவிதைகள் நன்று. மெரினா புரட்சி பற்றியும் கவிதை நூலில் உள்ளது பாராட்டுக்கள்.
சுவை
கஞ்சிகுடிக்க
தண்ணியும் சோறும்
தொட்டுக்க கடிச்சிக்க
வெங்காயம்
பச்சை மிளகாய்
அமிர்தமெல்லாம் என்ன
என்பன தோற்றுப் போகுமே
கஞ்சி என்றால் ஏழைகள் குடிப்பது என்று ஒரு காலத்தில் கூறினார்கள். ஆனால் இன்று அமெரிக்காவின் ஆய்வு கஞ்சி என்பது உடல் நலம் தரும் உணவு என்று அறிவித்துள்ளனர். தற்போது நட்சத்திர விடுதிகளிலும் இன்றைய சிறப்பு கஞ்சி என்று வழங்கும் நிலை வந்துவிட்டது. நூலாசிரியர் கஞ்சியை ரசித்து ருசித்து குடித்த காரணத்தினால் அமிர்தத்தை விட உயர்ந்தது என்று எழுதியுள்ளார்.
நூலசிரியர் முனைவர் சு.நாகவள்ளி அவர்கள் தேனி மாவட்டம் ஆண்டிபட்டி வட்டம் கோவில்பட்டி நடுநிலைப் பள்ளியில் பட்டதாரி ஆசிரியராக பணிபுரிந்து கொண்டே தமிழ்ப் பணியும் ஆற்றி வருவது பாராட்டுக்குரியது தொடர்ந்து எழுதுங்கள் வாழ்த்துகள்.
செந்தமிழுக்கு சிறப்பு செய்துவரும் பைந்தமிழ் இலக்கியப் பேரைவையினருக்கும் வாழ்த்துகள்! வளர்க!
வாழ்த்துகளுடன்…
கவிஞர் இரா.இரவி

எழுதியவர் : கவிஞர் இரா. இரவி (19-Mar-22, 10:20 pm)
சேர்த்தது : கவிஞர் இரா இரவி
பார்வை : 42

மேலே