பழமொழி நானூற்றில் கருத்து வெளிப்பாடு” நூல் ஆசிரியர் எழுத்தாளர் ச கிருத்திகா நூல் விமர்சனம் கவிஞர் இராஇரவி
பழமொழி நானூற்றில் கருத்து வெளிப்பாடு”
நூல் ஆசிரியர் : எழுத்தாளர் ச. கிருத்திகா!
நூல் விமர்சனம் : கவிஞர் இரா.இரவி
வெளியீடு : சித்ரா பதிப்பகம், 11/5, ஈஸ்வரா நகர் 2வது தெரு, கோடம்பாக்கம், சென்னை - 600 024.
பக்கங்கள் : 224, விலை : ரூ.210.
******
எழுத்தாளர், நூலாசிரியர் ச. கிருத்திகா அவர்கள், “பழமொழி நானூற்றில் கருத்து வெளிப்பாடு” என்ற தலைப்பில் ஆய்வு செய்ததை நூலாக்கி உள்ளார். பாராட்டுகள். தியாகராசர் கல்லூரியின் மேனாள் முதல்வர் மு. அருணகிரி அவர்கள் வாழ்த்துரை வழங்கி உள்ளார். இணைப் பேராசிரியர் கொ. கோபால்சாமி மதிப்புரை வழங்கி உள்ளார். இணைப் பேராசிரியர்கள் பொன். இராமநாதன், சு. காந்திதுரை வாழ்த்துரை வழங்கி உள்ளனர். நூலிற்கு வரவேற்பு தோரணங்களாக உள்ளன.
நல்ல ஒரு ஆய்வுரை நிகழ்த்தி உள்ளார். நூன்முகம் என்ற ஆய்வு முன்னுரை சிறப்பு. குறுக்க விளக்கம் அருமை. பழமொழி நானூற்றின் அமைப்பும் சிறப்பும் விளக்கி உள்ளார். பழமொழி என்ற சொல்லிற்கு இணையாக உள்ள 34 பெயர்களைக் குறிப்பிட்டுள்ளார். பழகுமொழி, தொன்னெறி மொழி, முதுமொழி, வாய்மொழி, தொன்றுபடுகிளவி, பல்லவையோர் சொல், பண்டைப் பழமொழி, சொலவு, மொழிமை, பழஞ்சொல். மூத்தோர் சொல் வார்த்தை, பழைய நெறியனாய் வரும் சொல்.
இப்படி பல்வேறு வகைகளில் பழமொழி என்ற ஒற்றைச் சொல் தமிழ் இலக்கியங்களில் குறிப்பிடப்பட்டுள்ளன என்பதை அறிந்து வியப்படைந்தேன். தமிழில் நுட்பமான அறிவு நூலாசிரியருக்கு வாய்த்திருப்பதால் தான் பழமொழிக்கான விளக்கங்கள் எளிமையாக எழுதி உள்ளார். பழமொழி என்பதற்கான விளக்கம், அருமை. இதோ நூலிலிருந்து.
“ஒரு நாட்டின் பழக்கவழக்கங்கள், சாதி-சமயம், தொழில், அன்பு, பண்பு, காதல் முதலிய எல்லாவகைப் பாகுபாடுகளையும் கண்டறிதற்கேற்ற கருவி பழமொழி என்றால் மிகையாகாது”.
உண்மை தான். பழமொழியில் சொல்லாத விசயங்களே இல்லை. அனைத்தும் உள்ளன பழமொழியில். பழமொழியைப் படித்து வாழ்க்கையைச் செம்மையாக்கிக் கொண்டவர்கள் பலர் உண்டு. அறநெறி போதிப்பது தான் பழமொழி. பழமொழியில் ஒட்டியும் வெட்டியும் படைக்கும் ஹைக்கூ கவிதையை பழமொன்றியு என்பதுண்டு. நான் பல பழமொன்றியு எழுதி உள்ளேன். அவை இந்த நூல் படிக்கும்போது நினைவிற்கு வந்தன. இந்த நூலில் வரும் பழமொழிகளை வைத்து புதிய பழமொன்றியு சில நான் எழுதி விட்டேன். இதற்கு காரணமாக இருந்த நூலாசிரியருக்கு நன்றி.
பழமொழி இயல்புகள் பற்றி விளக்கமாக விரிவாக நூலில் எடுத்தியம்பி உள்ளார்கள்.
பழமொழி, கற்றவர்-கல்லாதவர் என்ற பாகுபாடு இல்லாமல் அனைவரும் பயன்படுத்திடும் வண்ணம் இருக்கின்றன. எதுகை, மோனை போன்ற ஏதேனும் ஒரு ஓசைநயம் கொண்டிருக்கின்றன கருத்தை நேராகக் குறிப்பிடுகின்றன. அன்றாட வாழ்வில் அனுபவங்களைச் சார்ந்த மொழியாய் அமைந்திருக்கின்றன. சுருங்கச் சொல்லி விளங்க வைக்கும் தன்மை கொண்டு விளங்குகின்றன. மக்கள் புழங்கும் எளிய சொற்களால் அமைந்திருக்கின்றன. நாள்தோறும் மக்களால் பயன்படுத்தப்பட்டு வரும் அத்தியாவசிய மொழியாய் பழமொழி உரு தாங்குகின்றன. பழமையானதாய் இருப்பதோடு இன்றளவும் தோன்றிக் கொண்டே இருக்கின்றன.
பழமொழிகள் அன்று தோன்றியவைகள் தான் பெரும்பாலும் என்றாலும் சில பழமொழிகள் ஆங்கிலேயர் வருகைக்குப் பின்னரும் தோன்றி உள்ளன. எடுத்துக்காட்டு ‘மின்னுவதெல்லாம் பொன்னல்ல’ இப்படி பல தகவல்கள் நூலில் உள்ளன.
பழமொழிகள் குறித்த நூல்களைப் பட்டியலிட்டுள்ளார். 1842 ஆம் ஆண்டு பெர்சிவல் எழுதிய தமிழகப் பழமொழிகள் தொடங்கி 13வது நூலாக 1988ஆம் வருடம் கி.வா. ஜெகந்நாதன் எழுதிய தமிழ்ப்பழமொழிகள் நூல் வரை வரிசையாக எழுதி உள்ளார். இத்தனை நூல்களையும் படித்து ஆராய்ந்து அறிந்து ஆய்வு செய்து இந்நூலை வடித்துள்ளார். இந்நூலின் மூலம் நூலாசிரியரின் கடின உழைப்பு உணர முடிந்தது.
பழமொழிகள் பற்றி தொல்காப்பியத்தில் உள்ளவற்றையும் எழுதி உள்ளார்.
“பழமொழி தொல்காப்பியத்தில் முதுமொழி என்றும், சிலப்பதிகாரத்தில் நெடுமொழி என்றும், திருவெம்பாவையில் பழஞ்சொல் என்றும், குமரேச சதகத்தில் உலகமொழி என்றும், கொன்றை வேந்தனில் மூத்தோர் சொல் என்றும், கம்பர் பழமொழியை மூதுரை என்றும், நச்சினார்க்கினியர் பழம் வார்த்தை என்றும், படிக்காசுப் புலவர் பழமொழி என்றும், முத்தப்பச் செட்டியார் பழமைச் சொல் என்றும் குறிப்பிடுகிறார்”.
இப்படி தமிழ் இலக்கியங்கள் அனைத்தையும் ஆராய்ந்து பழமொழி என்ற சொற்கள் அது தொடர்புடைய சொற்கள் எங்கெல்லாம் பயன்படுத்தப்பட்டுள்ளன என்பதை மிக நுட்பமாக ஆராய்ந்து வடித்திட்ட நூல் இது.
கற்பனை என்று தான் அறிவோம். அதிலும் பலவகை உண்டு என்று நூலில் விளக்கி உள்ளார்.
படைப்புக் கற்பனை, இயைபுக் கற்பனை, கருத்து விளக்கக் கற்பனை, வெறுங்கற்பனை என்று எழுதி உள்ளார். கற்பனையிலும் இத்தனை வகை உண்டா? என்பதைப் படித்து வியந்து போனேன்.
பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் திருக்குறள், நாலடியாருக்கு அடுத்த நிலையில் வைத்துப் போற்றப்படும் பெருநூலாகப் பழமொழி நானூறு உள்ளது. கற்பனையும் அணியும் பழமொழி நானூற்றில் கருத்து வெளிப்பாட்டின் முக்கிய அம்சங்களாகத் திகழ்கின்றன.
பழமொழிகளையும் எழுதி அதற்கு எளிமையான விளக்கம் எழுதி இலக்கணமாக எந்த அணியில் பழமொழி உள்ளது என்பதையும் எழுதி, மொத்தத்தில் இந்த நூல் படித்தால் பழமொழியை பிடிக்காது என்பவர்களுக்கும் பழமொழியை பிடிக்கும் என்பார்கள். அந்த அளவிற்கு பழமொழியின் சிறப்பியல்புகளை மிக நுட்பமாகவும் தெளிவாகவும் எழுதி உள்ளார். பாராட்டுகள். தொடர்ந்து எழுதுங்கள். வாழ்த்துக்கள். இலக்கிய உலகம் உங்களைப் பாராட்டும்.