சாருலதா அத்யாயம் 11
"அப்பப்பா....என்ன குளிர்....என்ன குளிர்....உடம்பெல்லாம் ஒரே வலி. கூடவே மண்டைய பெளக்கற மாதிரி ஒரு தலைவலி. தாங்கமுடியல....ம்...ம்....ம்....தலை முதல் கால் வரை போர்த்திக்கொண்டு முக்கிக்கொண்டும்... மொனகிக்கொண்டும்... நடுங்கிக்கொண்டும்....இருந்தாள் லதா.
"லதா....லதா...இங்கபாரு.சிறந்த மருத்துவ சேவைக்கான இந்திய ஜனாதிபதி விருதுக்கு என்னை பரிந்துரை செஞ்சிருக்காங்க...." என்று சந்தோஷத்தோட வந்த சித்தார்த்தன்...பதறிப்போய் " என்னடா ஆச்சு ...ஏண்டா இப்படி படுத்துகிடக்கற?..." என்று ஓடி வந்து அவளைத்தொட்டுப் பார்த்தான்.
"ஸ்ஸ்ஸ்...அப்பா எப்படி கொதிக்குது...எப்போதிலிருந்து இப்படி இருக்கு? காலையில நான் போகும்போது நீ அசந்து தூங்கிட்டு இருந்த...எனக்கு இருந்த அவசரத்துல உன்ன கவனிக்காம போய்ட்டேன். தொந்தரவு செய்ய வேண்டாம்னுட்டு அப்படியே போயிட்டேன். சாரிடா..சாரிடா...என்னை மன்னிச்சுடறா செல்லம்..." என்று அவளை வாரி மடிமேல் போட்டுகொண்டு...ஓடிக்கிலோனை அவள் நெற்றியில் மெதுவாகத் தேய்த்துவிட்டான்.
"லதா...லதா... ஜனாதிபதி பரிசுக்காக என்னை தேர்ந்தெடுத்திருக்காங்க..." என்று அங்கே வந்த Dr. சாருமதி, துடிதுடித்துப்போய் " என்னாச்சு லதா...என்னம்மா...என்ன பண்றது? Dr. சித்தார்த்தன் கொஞ்சம் எழுந்திரிச்சி அந்தப்பக்கம் போங்க...." பரபரத்தாள்
"ஒண்ணுமில்ல சாரு....கொஞ்சம் ஜுரம்....கொஞ்சம் குளிர் ....அவ்ளோவ்தான். இதுக்குப்போய் இப்படி பதட்ட படுறீங்களே! தானா சரியாயிடும். நீங்க ரெண்டுபேரும் ஒன்னா ஜனாதிபதி பரிசுக்காக தேர்ந்தெடுக்கப்பட்டதிற்கு 'CONGRADULATIONS'.....என் மனப்பூர்வமான வாழ்த்துக்கள்." என்று மெதுவாக புன்னகை பூத்தாள் லதா.
"Dr.சித்தார்த்தன் ஒரு பேரசிட்டமால் மாத்திரை இருந்தா கொடுங்க..."
" இதோ....."
"கொஞ்சம் சுடுதண்ணி கொண்டுவாங்க..."
டமால்......டுமால்.....பாத்திரங்கள் உருளும் சத்தம்.
" ஐயோ....ஐயோ....சுடுதண்ணிகூட வெக்கத் தெரியல...What is this? சித்தார்த்தன்....ம்ம்..."
"அவருக்கு ஒன்னும் தெரியாது....சாரு ...பாவம் அவர் ஒரு கொழந்த..."
"ஆமா...ஆமா....கொழந்த...அவரை இப்படி கெடுத்துவச்சிருக்க.....சரி...சரி...சித்தார்த்தன் நீங்க இங்க வந்து லதா பக்கத்துல உட்காருங்க....இதோ ஒரு நிமிஷம்....."என்று பரபரவென்று சமையலறைக்குள் நுழைந்தாள் Dr.சாருமதி.
ஐந்து நிமிடத்தில் கஞ்சி ரெடி....லதாவை தன் மார்பில் சாய்த்துக்கொண்டு கொஞ்சம்...கொஞ்சமாக கஞ்சியை குடிக்கவைத்து
மாத்திரையை விழுங்க வைத்து....மெதுவாக படுக்க வைத்தாள். அவள் தூங்கிய பிறகு விடை பெற்றாள் சாருமதி.
"ரொம்ப...ரொம்ப...தேங்க்ஸ் சாருலதா... லதாவை அந்த நிலைமையில பாத்ததும் எனக்கு ஒண்ணுமே புரியல.....எதுவும் ஓடல....எவ்வளவு எமர்ஜென்சினாலும், மத்தவங்களுக்கு என்னென்ன செய்யணுமோ...ஒரு பதட்டமும் இல்லாம கரெக்ட்டா...பக்காவா...செஞ்சிடறேன். ஆனா லதாகுன்னா.....ரொம்ப...ரொம்ப தேங்க்ஸ்......"என்று தழுதழுத்தான்.
"சரி...சரி....டென்ஷன் ஆகாம போய் ரெஸ்ட் எடுங்க. நாளைக்கு காலேல வரேன்..." அவள் போய்விட்டாள்.
ஒரு சேரை இழுத்து போட்டுக்கிட்டு லதாவின் அருகிலேயே உட்கார்ந்து அவள் தலையை மெல்ல வருடிக்கொடுத்தான். அப்பா கொஞ்சம் ஜுரம் விட்ட மாதிரி இருந்தது. குளிரும் குறைந்த மாதிரி தோனியது. நடு ஜாமத்தில் கண் விழித்தாள் லதா. சித்தார்த்தன் எதோ டைரியில் எழுதிக்கொண்டிருந்தான். மறுபடியும் கண்ணை மூடிக்கொண்டாள்.
"ஹலோ...குட்மார்னிங் லதா...எப்படி இருக்கமா....?" சாருமதி வந்துதான் எழுப்பிவிட்டாள்.
"எனக்கென்ன சாரு...ஒரு டாக்டருக்கு ... ரெண்டு டாக்டருங்க இருக்கீங்க. பின்ன எனக்கென்ன கொறச்சல்...?"
"என்ன சித்தார்த்தன் நைட் புல்லா தூங்கல போலிருக்கு...?.கொஞ்சம் போய் தூங்கி ரெஸ்ட் எடுங்க. லதாவை நான் பாத்துக்கிறேன். டோன்ட் ஒரி...."
தொடர்ந்து ரெண்டு மூணு நாட்கள்....பம்பரமாய் சுழன்று லதாவை குழந்தைபோல் கவனித்து கொண்டாள். அவள் அன்பினாலும்...அனுசரணையினாலும்...விரைவில் தேறி நடமாட துவங்கிவிட்டாள் லதா. நடமாடிய லதாவின் கண்ணில் சித்தார்த்தனின் டைரி பட்டது. எடுத்தாள்....படித்தாள்....
' Dr.சாருமதிக்கு எப்படி நன்றி சொல்வதென்றே புரியவில்லை. நானே டாக்டராய் இருந்தும் லதாவை அவளைபோல் கவனித்து இருக்க முடியாது? அவளுக்கு எந்தன் கோடான கோடி நன்றிகள்.....'
திருப்பித் திருப்பிப் பார்த்தாள். புரட்டிப் புரட்டிப் பார்த்தாள்.வேறொன்றும் இல்லை.
நாட்கள் கடந்தன. நன்றாகத் தெறிவிட்டாள் லதா.
" சாரு...சாரு...."
"வா....வா...லதா. உடம்பு இப்ப எப்படி இருக்கு? கொஞ்ச நாளா அங்கேயே இருந்துட்டேனில்ல.....அதனால இங்க சுத்தம் செய்ய முடியல.கொஞ்சம் ஒக்காரு.அஞ்சு நிமிஷத்துல முடிச்சிட்டு வந்துடறேன்.சரியா...?"
"நான் வேணா உதவட்டுமா?"
" ஒதப்படுவ நீ....ரொம்ப தெம்பு வந்துடுச்சா என்ன? ம்ம்ம்ம்.....ரெண்டே...ரெண்டு நிமிஷம் ஒரு குளியல் போட்டுட்டு வந்துடறேன். ஓகேவா...சமத்தா ஒக்காந்து இந்த மேகஜீன்களை பாத்திட்டிரு...."
லதா எழுந்து நடந்தாள். சாருமதியின் மேஜை மேலிருந்த டைரி பேன் காற்றில் பட....படத்து....அவளை வா...வா...அழைத்தது. மெல்ல சென்று அதை எடுத்து திறந்தாள்.
தொடரும்.