இழிவாழ்வு இகந்தொரீஇ பேரின்ப வாழ்வைப் பெறவந்த பிறப்பே ஓரின்ப மாகும் - வீடு, தருமதீபிகை 993
நேரிசை வெண்பா
துச்சில் இருந்து துயரமாய் வாழ்கின்ற
எச்சில் இழிவாழ்(வு) இகந்தொரீஇ - நச்சிநின்ற
பேரின்ப வாழ்வைப் பெறவந்த அப்பிறப்பே
ஓரின்ப மாகும் உணர். 993
- வீடு, தருமதீபிகை,
- கவிராஜ பண்டிதர் ஜெகவீர பாண்டியனார்
பொருளுரை:
ஒதுக்குக் குடியாய் உடம்புகள் தோறும் அலைந்து இழிந்து வாழ்ந்து வருகிற அந்த இழிநிலை நீங்கி என்றும் நிலையான பேரின்ப வீட்டை எந்தப் பிறப்பு அடைகிறதோ அதுவே மேலான உயர்ந்த மகிமையுடையதாம்; அதனை விரைந்து அடைக என்கிறார் கவிராஜ பண்டிதர்.
உயிர் வாழ்வு நிலையில்லாத நிலையில் எவ்வழியும் புலையாய் நடந்து வருகிறது. நீர் மேல் குமிழி போல் நிலையற்ற உடல்களில் புகுந்து பார்மேல் உயிர்கள் பரிதாபமாய் உழன்று வருகின்றன. அவல வாழ்வு அழி துயரங்களை உடையன.
துச்சம் என்னும் சொல் கீழ்மை, சிறுமை, வெறுமை இழிவுகளைக் குறித்து வரும். துச்சமான இல் துச்சில் என வந்தது. புல்லிய புலைக்குடிலில் அல்லல்களே உள்ளன.
சிறிய குடிசையில், வறிய குச்சில்களில் ஏழைகள் குடியிருந்து வருகின்றனர்; அந்தக் குடியிருப்பாவது கொஞ்சம் உறுதியானது; உரிமையுடையது; பல வருடங்கள் வாழலாம் என்ற தைரியம் உண்டு; பொள்ளலான உடலில் எள்ளலாய் இருந்துவரும் உயிர் நாளும் அல்லலே அடைந்து வருகிறது. மல சலங்களோடு மருவிப் பல இழிவுகள் படிந்து அழிதுயரங்களில் அழுந்தி அவலமாய் உழலுகிறது. புலையான இப் புன்புலால் நிலையைக் கருதியுணர்ந்து உறுதிநலன்களைத் தெளிந்தவரே தலையான உயர் கதியை அடையவுரிய தத்துவ ஞானிகள் ஆகின்றார்.
நேரிசை வெண்பா
ஈன இளிவான இவ்வுடலின் புன்மையினை
ஞான ஒளியால் நயந்தறிவார் - வானமுயர்
வீட்டை விழைந்து விழுமியராய் மேலான
தேட்டை அடைந்தார் தெளிந்து. - கவிராஜ பண்டிதர்
பொய்யான புலையை அறிபவர் மெய்யான நிலையை அடைகின்றார். துன்பத் தொடர்பொழிய வழிகாணுமளவு இன்ப ஒளிகள் நேரே வெளியாகின்றன. ஓட்டை உடம்பின் நிலைகளையும் உலகப் புலைகளையும் உணர நேர்ந்தவரே வீட்டை அடைய விரும்பித் தான தருமங்களைச் செய்கின்றார்; தவங்கள் புரிகின்றார்: துறவிகளாய்க் காட்டையடைந்து கதிநலம் காணுகின்றார்.
நேரிசை வெண்பா
இடும்பைக்(கு) இடும்பை இயலுடம்பி தன்றே
இடும்பொய்யை மெய்யென் றிராதே - இடுங்கடுக
உண்டாயி னுண்டாகும் ஊழிற் பெருவலிநோய்
விண்டாரைக் கொண்டாடும் வீடு. 3 – நல்வழி
உடம்பின் நிலையை எடுத்துக் காட்டி உயிர்க்குய்தி காணும்படி ஒளவையார் இவ்வாறு போதித்திருக்கிறார். புலையான துன்பங்கள் நிலையாய் நிறைந்திருக்கும் நெடிய மூட்டை என்பார் இடும்பைக்கு இடும்பை என்றார். அல்லலான இந்தப் பையை மெய்யென்று நம்பி அவலமாய் அழிந்து போகாமல் காலம் உள்ள பொழுதே மேலான விட்டுக்கு உரிய தருமசீலங்களை உரிமையாயடைந்து கொள்ளுங்கள் என உறுதியாய் அறிவுறுத்தியுள்ளார்.
விண்டாரைக் கொண்டாடும் வீடு என்றது பற்று விட்டவர்க்கும் வீட்டுக்கும் உள்ள ஒற்றுமையான உறவுரிமையை உணர்த்தி நின்றது. பித்த மயக்காய்ப் பற்றியுள்ள பாச பந்தங்களை விட்டு ஒழியுங்கள்; பேரின்ப வீடு உங்களுக்கு வாசமாய் வரும் என வரவு நிலையை உறவாய்த் தெளிய விளக்கினார்.
நேரிசை வெண்பா
எல்லாப் படியாலும் எண்ணினால் இவ்வுடம்பு
பொல்லாப் புழுமலிநோய்ப் புன்குரம்பை - நல்லார்
அறிந்திருப்பார் ஆதலினால் ஆங்கமல நீர்போற்
பிறிந்திருப்பார் பேசார் பிறர்க்கு. 7 நல்வழி
உயிர்க்கு நிலையமாய் நேர்ந்துள்ள உடலின் புலையை ஓர்ந்தவர் உலக பந்தங்களை ஒருவி உயர்கதி காணுவரென இது உணர்த்தியுள்ளது. பொய்யான மாய மையல்களை நீங்கினவரே மெய்யான தூய முத்தியை நேயமாய்த் தோய நேர்கின்றார்,
எடுத்த உடல்கள் அழிவதையும் அடுத்த உறவினங்கள் ஒழிவதையும் எல்லாரும் எதிரே கண்டு வரினும் உள்ளம் தூய நல்லோரே உண்மையை ஊன்றியுணர்ந்து உயிர்க்குறுதி நலங்களைக் காண்கின்றார். தெளிவான அந்தக் காட்சியாளரே விழுமிய ஞானிகளாய் மாட்சியடைந்து மிளிர்கின்றார், வாழ்வை மாயக் கனவாய்க் காணவே வைய மையல்கன் ஒழிந்து மெய்யான முக்தியை மேவி நித்திய முத்தராய் நிலவி நிற்கின்றார். மெய்யுணர்வு தெய்வ ஒளியாகிறது.
உறங்கும் போது கனவு கண்டவன் விழித்தவுடனே தன்னைத் தவிர வேறு ஒன்றையும் காணுவதில்லை; அது போல் மாய வாழ்வில் மனைவி, மக்கள், செல்வம், சீர் எனப் பல வகையான இனிய தொடர்புகளைக் கண்டு களித்து வந்தவன் தூய ஞானம் தோன்றிய போது எல்லாம் மாயக் கூத்துகள் என்று தெளிந்து கொள்ளுகிறான்- எனவே ஆன்ம நாட்டமாய் உள்ளே நோக்கி உரிமையான பரமான்மாவைத் தோய்ந்து உலவாத பேரின்பத்தை அடைகிறான். அந்த இன்பப் பேறே மோட்சம், வீடு என மாட்சியுறுகிறது. உள்ளம் உருக உயர்கதி வருகிறது.
நெஞ்சகங் குழைந்து நெக்குநுக் குருகநின்
குஞ்சித சரண மஞ்சலித் திறைஞ்சுதும்
மும்மலம் பொதிந்த முழுமலக் குரம்பையில்
செம்மாந் திருப்பது தீர்ந்து
மெய்ம்மையிற் பொலிந்த வீடுபெறற் பொருட்டே. 68
- சுரிதகம், மயங்கிசைச் கொச்சகம், சிதம்பரச் செய்யுள் கோவை
பிறவி தீர்ந்து பேரின்ப வீடு பெறும் பொருட்டு இறைவனைக் குமரகுருபரர் இவ்வாறு இறைஞ்சி இருக்கிறார். மும்மலம் பொதிந்த முழு மலக்குரம்பை என உடம்பைக் குறித்திருப்பது கூர்ந்து சிந்திக்கத்தக்கது. பொல்லாத புலையுடலை மறுபடியும் அடையாதபடி மேலான நல்ல வீட்டை அடைந்து கொள்ளுக என்கிறார் கவிராஜ பண்டிதர்.