ஈனத் தொடர்பு நீக்கி ஞானத் தொடர்பை நயந்து மோனத்தைப் பேண் - இனிமை, தருமதீபிகை 983
நேரிசை வெண்பா
ஈனத் தொடர்புகள் ஏறா(து) அயல்நீக்கி
ஞானத் தொடர்பை நயந்துமே - மோனத்தைப்
பேணி வருக பெரிய மகிமைகள்
காண வருமே கனிந்து. 983
- இனிமை, தருமதீபிகை,
- கவிராஜ பண்டிதர் ஜெகவீர பாண்டியனார்
பொருளுரை:
இழிவான ஈனத்தொடர்புகள் படியாமல் ஒதுங்கி உயர்வான ஞானச் சார்புகளை நயந்து மோனத்தைப் பேணி வருக; அவ்வாறு வரின் அரிய மகிமைகள் இனிது பெருகி வரும் என்கிறார் கவிராஜ பண்டிதர்.
இழிந்த இயல்புகளும், இழிவான இனங்களும் ஈனம் என வந்தன. நல்ல மனத்தாலும், நல்ல இனத்தாலும் மனிதன் உயர்ந்து நலம் பல பெறுகின்றான் இனமும் மனமும் தீயனவாயின் தீமைகளே நேர்கின்றன. சுற்றிச் சூழ்ந்துள்ள சூழல்களின்படியே மனிதனுடைய வாழ்வு வாய்ந்து வருகின்றது.
உயர்ந்த நிலைகளை அடைய நேர்ந்தவன் தாழ்ந்த இனங்களைச் சாரலாகாது. தூய மனமுடையவர் தீய இனங்களை வெறுத்து விலகி விடுகின்றனர். சித்த சுக்தி தெய்வீக நிலையை நோக்கியெழுதலால் அசுத்தங்களை அருவருத்து ஒதுங்குகிறது.
புனித நீர்மை எவ்வழியும் செவ்விய தனிமையையே நாடுகிறது; அந்தத் தனிமையில் அரிய பல இனிமைகள் விளைகின்றன.
துறவிகள் ஆன்ம சிந்தனையாளராய் இறைவனோடு உறவு கொள்ளும் இயல்பினராதலால் உலகப் புலைகளை ஒருவி ஒதுங்கித் தனியே வாழ நேர்கின்றனர். தனிமையில் இனிமை காண்பது புனித போகமாய்ப் பொங்கி வருகிறது. மெய்யுணர்வு மேலான நிலைகளையே எவ்வழியும் செவ்வையாய் மேவி மிளிர்கிறது.
உரிய பரம்பொருளைப் பிரிந்து கொடிய பிறவித் துயரங்களில் அழுந்தி நெடிது உழந்து வருகிற அந்த அவல நிலையை உணர்ந்து உள்ளம் வருந்துவராதலால் பரமனை நினைந்து நெஞ்சம் கரைந்து அழுகின்றனர். எதையும் விரும்பாமல் எல்லாம் துறந்தவர் இறைவனை எண்ணிக் கண்ணீர் சொரிந்து அழுவது அந்தப் புண்ணியரது உண்ணீர்மையை உணர்த்தியுளது.
கட்டளைக் கலித்துறை
நீறார்த்த மேனி உரோமம் சிலிர்த்துளம் நெக்குநெக்குச்
சேறாய்க் கசிந்து கசிந்தே உருகிநின் சீரடிக்கே
மாறாத் தியானமுற் றானந்த மேற்கொண்டு, மார்பி(ல்)கண்ணீர்
ஆறாய்ப் பெருகக் கிடப்பதென் றோ?கயி லாய(த்)தனே!!
சினந்தனை யற்றுப் பிரியமும் தானற்றுச் செய்கையற்று
நினைந்தது மற்று, நினையா மையுமற்று, நிர்ச்சி(ந்)தனாய்த்
தனந்தனி யேயிருந் தானந்த நித்திரை தங்குகின்ற
அனந்தலில் என்றிருப் பேனத்த னே!கயி லாய(த்)தனே!
- பட்டினத்தார்
முற்றத் துறந்த பட்டினத்தார் முழுமுதல் பரமனைக் கருதியுருகி அழுது புலம்பியிருப்பதை இவை விழிதெரிய விளக்கியுள்ளன. தன்னந்தனியே இருந்து ஆனந்தம் அனுபவிக்கும் அமைதியை ஆண்டவனிடம் இவர் வேண்டியிருப்பது ஈண்டு ஊன்றியுணர்ந்து தெளிந்து கொள்ளவுரியது.
உலக வாழ்வு யாதும் நிலையில்லாதது, தீதான புலைகளையுடையது; யாண்டும் துயரங்களே நீண்டு நிறைந்தது என்று ஞானிகள் நன்கு தெளிந்து கொண்டு நிலையான பரம்பொருளை. நினைந்து உள்ளம் உருகி மறுகுகின்றார்: அந்த உருக்கத்தில் கண்ணீர் வெள்ளம் பெருக்கெடுத்து வருகிறது. சிந்தை உருகி மொழிகிற அந்த உரைகளில் அரிய பல உண்மைகள் உரிமையாய் வெளியே தெரிய வருகின்றன
பன்னிருசீர்க் கழிநெடிலடி யாசிரிய விருத்தம்
ஐந்துவகை யாகின்ற பூதபே தத்தினால்
ஆகின்ற ஆக்கைநீர்மேல்
அமர்கின்ற குமிழியென நிற்கின்ற தென்னநான்
அறியாத காலமெல்லாம்
புந்திமகி ழுறவுண் டுடுத்தின்ப மாவதே
போந்தநெறி என்றிருந்தேன்
பூராய மாகநின தருள்வந் துணர்த்தஇவை
போனவழி தெரியவில்லை
எந்தநிலை பேசினும் இணங்கவிலை யல்லால்
இறப்பொடு பிறப்பையுள்ளே
எண்ணினால் நெஞ்சது பகீரெனுந் துயிலுறா
திருவிழியும் இரவுபகலாய்ச்
செந்தழலின் மெழுகான தங்கமிவை என்கொலோ
சித்தாந்த முத்திமுதலே
சிரகிரி விளங்கவரு தக்ஷிணா மூர்த்தியே
சின்மயா னந்தகுருவே. 5
- சின்மயானந்த குருவே, தாயுமானவர்
தாயுமானவருடைய அனுபவ நிலைகளை இது இனிது காட்டியுள்ளது. மெய்யுணர்வு தோன்றுமுன் பொய்யான புலைகளைப் போற்றியிருந்ததும், ஞானம் உதயமான பின் அந்த ஈனங்களெல்லாம் போனவழி தெரியவில்லை என்று வியந்து விளம்பியுள்ளதும் நினைந்து சிந்திக்கத்தக்கன. உயிர் பரங்களின் உறவும், பிறவித் துயரும், பிறவா நிலையில் விளையும் பேரின்ப விளைவும் இங்கே தெரிய வந்தன. நீர் மேல் குமிழிபோல் நிலையில்லாத மாய வாழ்வை நம்பி மயங்கி இழியலாகாதென்று உணர்த்தியிருக்கிறார்.
All that we see or seem Is but a dream within a dream. (Edgar)
நாம் காணுகிற எல்லாம் ஒரு கனவுள் கனவே என இது குறித்துளது. மாய வாழ்வு மனம் தெளிய வந்தது.
நிலையில்லாத பொய் வாழ்வுள் நிலையான மெய்யை உணர்ந்து கொள்வோரே மேலோராய் உய்தி பெறுகின்றார். புலையான புல்லரோடு கூடாதே; உள்ளம் தூயவரோடு உறவுகொள்; தனியே இருந்து சிந்தனை செய்து பார்; எதையும் தெளிவாய்த் தெரிக; அது புனிதமான ஞானமாய் இனிமையை விளைக்கும் என்கிறார் கவிராஜ பண்டிதர்.