விட்டாங் ககலா முழுமெய்யும் கொள்பவே நட்டாரை ஒட்டி யுழி - பழமொழி நானூறு 85

இன்னிசை வெண்பா

ஒட்டிய காதல் உமையாள் ஒருபாலாய்க்
கட்டங்கம் வெல்கொடி கொண்டானும் கொண்டானே
விட்டாங் ககலா முழுமெய்யும் கொள்பவே
நட்டாரை ஒட்டி யுழி. 85

- பழமொழி நானூறு

பொருளுரை:

பொருந்திய அன்பினை உடைய உமையை ஒரு கூறாக தண்டினையும் வெல்லுகின்ற ஏற்றுக் கொடியினையும் உடைய சிவபிரான் ஏற்றுக்கொண்டான்;

தம்மொடு நட்புச் செய்தாரைத் தாம் அடைந்த பொழுது அங்கே விட்டு நீங்காத தம் உடம்பு முழுதும் கொள்வார்கள்.

கருத்து:

நல்லோர் தம் நட்பினரிடத்துத் தாம் வேறு ,அவர் வேறு என்னும் வேறுபாடின்றி ஒழுகுவர்.

விளக்கம்:

சிவன் ஒரு பாகத்தில் கொண்டான்; நட்டார் தம் மெய் முழுதுங் கொண்டார் என நல்லோரது நட்பின் திறம் உயர்த்திக் கூறப்பட்டது. நல்லோர் நட்பினர் அடைந்த இன்ப துன்பங்கள் தாம் அடைந்ததாகவே நினைப்பர்.

'ஒட்டிய காதல் உமையாள் ஒருபாலாக் கட்டங்கம் வெல்கொடி கொண்டானும் கொண்டான்' என்பது பழமொழி.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (21-Mar-22, 4:54 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 28

மேலே