கொடைக்கடனும் சாஅயக் கண்ணும் பெரியார்போல் – நாலடியார் 184

நேரிசை வெண்பா

உறைப்பருங் காலத்தும் ஊற்றுநீர்க் கேணி
இறைத்துணினும் ஊராற்றும் என்பர்; - கொடைக்கடனும்
சாஅயக் கண்ணும் பெரியார்போல் மற்றையார்
ஆஅயக் கண்ணும் அரிது 184

- பெருமை, நாலடியார்

பொருளுரை:

மழை துளித்தலில்லாத காலத்திலும் ஊற்றுநீரை உடைய சிறிய நீர்நிலை இறைத்து உண்ணுவதாயினும் ஊரிலுள்ளார் அனைவர்க்கும் உதவும் என்று பெரியோர் கூறுவர்;

அதுபோல வறியோர்க்கு ஒன்று கொடுத்தலாகிய கடமையும் தமது நிலைமை குறைவான காலத்தும் பெரியோர் மேற்கொள்ளுதல் போலப்,

பெரியரல்லாதார் தமது நிலைமை நிறைவடைந்த காலத்தும் மேற்கொள்ளுதல் அரிதாகும்.

கருத்து:

நிலைமை குறைந்த காலத்தும் பிறர்க்கு இயன்றது உதவ முற்படுதலே பெருந்தன்மையாகும்.

விளக்கம்:

அருமை இரண்டிடத்தும் இன்மைமேற்று, கேணி என்பது மணற்பரப்பில் இயல்பாக அமையும் ஊற்றுடைய சிறிய நீர்நிலை.

தொல்காப்பிய வுரையிற் "சிறுகுளம்"1 எனப்பட்டது. கொடைக்கடனும் அரிது என்க. பெரியாரியல்பை உவமையுடன் உரைக்குங்கால் மற்றையாரியல்பும் உடனுரைக்கப்பட்டது.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (22-Mar-22, 10:19 am)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 11

சிறந்த கட்டுரைகள்

மேலே