கெட்டுலந்தக் கண்ணும் சிலர்க்காற்றிச் செய்வர் செயற்பா லவை – நாலடியார் 185
இன்னிசை வெண்பா
உறுபுனல் தந்துல(கு) ஊட்டி அறுமிடத்தும்
கல்லூற் றுழியூறும் ஆறேபோல்; - செல்வம்
பலர்க்காற்றிக் கெட்டுலந்தக் கண்ணும் சிலர்க்காற்றிச்
1செய்வர் செயற்பா லவை 185
- பெருமை, நாலடியார்
பொருளுரை:
நீருள்ள காலத்தில் மிக்க நீர் தந்து உலகுயிர்களை உண்பித்து நீர் வறளுங் காலத்தும் தோன்றுகின்ற ஊற்றினிடத்தில் ஊறியுதவும் ஆறே போல்,
உள்ள காலத்திற் பொருளைப் பலர்க்கும் உதவி செய்து அப் பொருள் கெட்டு நிலையழிந்த காலத்தும் மேன்மக்கள், சிலர்க்கேனும் உதவிகள் செய்து தாம் செய்தற்குரிய கடமைகளைச் செய்துகொண்டிருப்பர்.
கருத்து:
எந் நிலையிலுந் தங்கடமைகளைச் செய்தலே பெரியோர் தன்மையாகும்.
விளக்கம்:
பலர்க்குமெனவும், சிலர்க்கேனுமெனவுந் தந்துரைக்க. யாண்டுஞ் செயற்பாலவை செய்தலே பெரியோர் இயல்பாதலின், பலர்க்காற்றி, சிலர்க்காற்றி என்ற பின்னும் ‘செய்வர் செயற்பாலவை' என ஆசிரியர் முடித்துக் காட்டினார்.
இதனால், உதவுதலென்பது எந்நிலையிலுஞ் செயற்பாலதாங் கடமையாதலும் பெறப்பட்டது!.