வெறுப்பறுத்தான் விண்ணகத்து மில் – ஏலாதி 20
நேரிசை வெண்பா
மின்னே ரிடையார்சொற் றேறான் விழைவோரான்
கொன்னே வெகுளான் கொலைபுரியான் - பொன்னே
உறுப்பறுத் தன்ன கொடையுவப்பான் றன்னின்
வெறுப்பறுத்தான் விண்ணகத்தும் இல் 20
- ஏலாதி
பொருளுரை:
திருமகளை யொத்த பெண்ணே! மின்னலுக்கு ஒப்பான இடையையுடைய மகளிரின் மொழியை நம்பான், அவர்கள்பாற் கலவி விருப்பத்தைக் கருதான், பயனில்லாமல் ஒருவரையுஞ் சினவான், ஓருயிரையுங் கொலைசெய்யான்,
தன் உடம்பின் உறுப்புக்களை அறுத்துக் கொடுத்தாற் போன்ற ஈகையை விரும்பிச் செய்வான், தனதுளத்தில் பிறர்மேல் வெறுப்புக் கொள்ளுதலை நீக்கினானான ஒருவன் விண்ணுலகத்திலும் இல்லை.
பொழிப்புரை:
பொன்னேயனையாய்! மின்போலு நேரிடையார் சொல்லைத் தேறாது, காமநுகர்ச்சியை நினையாது, பயனின்றியே மிக வெகுளாது, ஓருயிரைக் கொலைமேவாது, தன்னுறுப்பறுத்துக் கொடுப்பது போலுங் கொடையுவந்து, தனதுளத்தில் பிறர்மேல் வெறுப்புக் கொள்ளுதலை நீக்கினானான ஒருவன் விண்ணுலகத்திலும் இல்லை!
கருத்து:
மகளிரின் மழலையை நம்பாமை முதலியன உடையவன் தேவரினுஞ் சிறந்தா னென்க.
தெரிந்துந் தெரியாமலும் வளைந்து வளைந்து காண்டலுணர்த்திற்று; ‘உறுப்பறுத்தன்ன கொடை' - சிபிச்சோழன் செய்தமை போன்றது; அவன்றன் கொடைமையைக் கூறியது!
"புறவு நிறைபுக்குப் பொன்னுலக மேத்தக்
குறைவி லுடம்பரிந்த கொற்றவன்" என்று சிலப்பதிகாரங் கூறும்!