உளநாளால் பாடே புரியாது வீடே புரிதல் விதி – ஏலாதி 21
நேரிசை வெண்பா
இளமை கழியும் பிணிமூப்(பு) இயையும்
வளமை வலியிவை வாடும் - உளநாளால்
பாடே புரியாது பால்போலுஞ் சொல்லினாய்!
வீடே புரிதல் விதி 21
- ஏலாதி
பொருளுரை:
பாலைப் போன்ற மொழியினையுடைய பெண்ணே!
இளம் பருவம் நிலைபெறா தொழியும்;
நோயும் முதுமையும் வந்து சேரும்;
செல்வமும், உடம்பின் வலிமையும் குன்றும்;
கழிந்தது போக எஞ்சியிருக்கும் வாழ்நாளில் துன்பந்தரும் செயல்களையே செய்து கொண்டிருக்க விரும்பாமல் வீடுபேற்றிற்கான நல்ல ஒழுக்கமான செயல்களை விரும்பிச் செய்வதே முறைமையாகும்.
கருத்து:
இளமை கழிந்து பிணி மூப்புகள் உண்டாதலின், மக்கள் வீடுபேற்றை விரும்பி நிற்றலே கடமையாகும் எனப்படுகிறது.
மூப்புக் காலத்திற் றோன்றும் பிணியே தீராது மிகுதலின், அதனை மூப்பொடு வைத்துச் சொல்கிறார். பாடென்றது ஈண்டு வயிற்றுப் பிழைப்பொன்றையே கருதிச் செய்யும் முயற்சித் துன்பத்தைக் குறித்தது