அறிவென்னு நீரால் அவித்தொழுக லாற்றின் - அறநெறிச்சாரம் 81
நேரிசை வெண்பா
எள்ளிப் பிறருரைக்கும் இன்னாச்சொல் தன்னெஞ்சில்
கொள்ளிவைத் தாற்போற் கொடிதெனினும் - மெள்ள
அறிவென்னு நீரால் அவித்தொழுக லாற்றின்
பிறிதொன்று* வேண்டா தவம். 81
- அறநெறிச்சாரம்
பொருளுரை:
தன்னைப் பிறர் இகழ்ந்து கூறும் கடுஞ்சொல் நெருப்பினாற் சுட்டாற்போல் தன் மனத்தில் துன்பத்தை மிகுவிப்பதாயினும், அறிவாகிய நீரால் அமைதியாக அத்துன்பத்தைக் கெடுத்து ஒழுகுவானானால் வேறு தவம் ஒன்றும் செய்ய வேண்டுவதில்லை.
குறிப்பு:
கொள்ளி - எரிகின்ற கொள்ளிக்கட்டை, இன்னாச் சொல் - வசை மொழி; துன்பம் விளைத்தலின்
அங்ஙனம் கூறப்பட்டுள்ளது.