ஊசி கதை

ஒரு ஊருல ஒரு ஏழைக்குடும்பம் இருந்ததாம், அம்மா அப்பா மகன் என்ற சிறிய குடும்பம்தான். இருந்தாலும் ஏழ்மை அக்குடும்பத்தை வாட்டிவதக்கியது. அந்த விட்டின் சிறுவன் ஒரு நாள் சாலையில் நடந்து செல்லும் போது, கீழேயிருந்து ஒரு ஊசியைக் கண்டெடுத்தான். அதை ஆசையோடு எடுத்துக்கொண்டுபோய் அவன் தாயிடம் கொடுத்தான். அதை வாங்கி பார்த்த தாய், பூரிப்பால் தன் மகனை ஆசையோடு பாராட்டி என் செல்வமே, எவ்வளவு அற்புதமான காரியம் செய்திருக்கிறாய், இது போல் இன்னும் கிடைத்தால் அம்மாவிடம் கொண்டுவந்து கொடு என்று மகனை ஊக்கப்படுத்தினாள். அந்த சிறுவனோ இந்தச் சின்ன பொருளுக்கே அம்மா இவ்வளவு பாராட்டுறாங்களே, சந்தோசபடுறாங்களே என்று, வேறொரு பொருளைக் கீழ கிடந்ததாக சொல்லி அம்மாவிடம் கொடுக்கிறான். அதையும் பார்த்து மகிழ்ந்த தாய் உன்னைப் பெற்றதற்காக மிகவும் மகிழ்கிறேன் மகனே என்று அவனைப் பாராட்டுகிறாள். இப்படியே பையன் பெரிய ஆளாக ஆளாக ஒவ்வொரு பொருளையா திருடி கொண்டுபோய் தன் தாயிடம் கொடுக்கிறான், மகனின் அரிய செயலை பாராட்டுகிறாள் தாய். ஒருநாள் மகனை காவலர்கள் பிடித்துவிடுகிறார்கள், அவன் பெரிய திருட்டில் அகப்பட்டான். அவனுக்குத் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டது. தூக்குத் தண்டனை நாளில், அவனிடம் காவலர்கள் கேட்டார்கள் உனது கடைசி ஆசை என்னவென்று? அதற்கு என் அம்மாவை ஒருமுறைப் பார்க்க வேண்டும் என்றான், அப்படியே அதற்கு ஏற்பாடு செய்தார்கள். அவனது தாயும் வந்தாள். மகன் தாயின் அருகே சென்று எனதருமை தாயே உன்னை ஒருமுறை முத்தமிட வேண்டும் என்றான், தாயும் கம்பிகளின் இடுக்கில் தன் கன்னத்தைக் காண்பித்தாள், கன்னத்தில் ஆசையோடு முத்தமிடுவது போல் தாயின் கன்னத்தை கடித்து எடுத்தான் மகன். அவன் கூறினான், நான் முதல் நாள் ஊசியைக் கண்டெடுத்த அன்றே 'இதை எங்கிருந்து எடுத்தாய்? இனி எடுத்துவரக்கூடாது என்று என்னைக் கண்டித்திருந்தால், இன்று இவ்வளவு பெரிய திருடனாய், தூக்குத் தண்டனைக் கைதியாய் உன் முன் நின்றிருக்க மாட்டேன் என்றான் அந்தச் சிறுவனாய் இருந்த குற்றவாளி.

எழுதியவர் : தணல் (22-Mar-22, 10:04 pm)
சேர்த்தது : தணல் தமிழ்
Tanglish : oosi kathai
பார்வை : 224

மேலே