சாருலதா அத்யாயம் 13

' THE HINDU ' முதல் பக்கத்தில் வெளிவந்திருந்த அந்த புகைப்படத்தை கண் கொட்டாமல் பார்த்துக் கொண்டிருந்தாள் லதா. Dr.சித்தார்த்தனும்,Dr.சாருமதியும் ஜனாதிபதியின் மெடல்களை பெற்றுக்கொண்டு ஜனாதிபதியுடன் ஒன்றாக நின்று கொண்டிருக்கும் புகைப்படம். மறுபடியும் அந்த எண்ணம் துளிர்விடத் தொடங்கியது. ஏன் சாருவை அவருக்கு கட்டி வைக்க கூடாது? இரண்டு பேருக்கும் அப்படி ஒன்னும் வயசாகிவிடவில்லையே! ஜோடி பொருத்தம் இப்பவும் நல்லாத்தான் இருக்கு. எப்படி இவர்களை சம்மதிக்க வைப்பது? மனசு இதையும்....அதையும் கணக்கு போட்டுகொண்டு தவியாய்த் தவித்தது.
" லதா .....நீ ஏன் கர்பரட்ஷகாம்பிகைக்கு வேண்டி கொள்ளக்கூடாது? வா...வா... ஒரு தடவை தஞ்சாவூர் போயிட்டு வந்திடலாம்...."
" அதெலாம் ஒன்னும் வேணாம் சாரு.....நான் செய்யாத பூஜையா?.....இருக்காத விரதமா?...அந்த நம்பிக்கையெல்லாம் போய் ரொம்ப நாளாச்சு..."என்றாள் விரக்தியோடு.
"அப்படியில்ல லதா. விஞ்ஞானத்துக்கு அப்பாற்பட்ட சக்தி ஒன்னு இருக்குதுன்னு நம்பற இல்ல. அந்த நம்பிக்கையை மட்டும் கைவிட்டுடாத.... ஏன் அதையுந்தான் ட்ரை செய்து பாத்துரலாமே? மடியேந்தி பிச்சை கேட்டா தராமலா போய்விடுவா.அவளும் ஒரு தாய்தானே. மறுப்பு சொல்லாம வா லதா...."
சொன்னதோடல்லாமல் மறுவாரமே அவர்களை திருக்கருகாவூர் கற்பரக்ஷகாம்பிகை கோயிலுக்கு கூட்டிகிட்டு வந்து விட்டாள் சாருமதி. அங்கு அம்பாளின் பூர்ண அருள்பெற பூஜை..புனஸ்காரங்களை.... சடங்கு... சம்பிரதாயங்களை....முறைப்படி செய்ய வைத்தாள். அங்கிருந்து ஸ்ரீமுஷ்ணம் கோயிலுக்கும் அழைத்துப்போய்....அங்கு குழந்தை கிருஷ்ணனை லதாவின் மடியிலிட்டு ....அதற்குண்டான பூஜைகளையும் செய்ய வைத்தாள்.
ஸ்ரீமுஷ்ணம்... இந்த கோயிலின் ஸ்தல புராணம் நம்மை ஆச்சரிய படவைக்கிறது. சுமார் ரெண்டாயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த திருத்தலம். பெருமாளின் பத்து அவதாரங்களில் மூன்றாவது அவதாரமான வராக அவதார ஸ்தலம். ஹிரண்ய கசிபு என்கிற ராட்சஷன் பூமியை சிறைபிடித்து கீழ்லோகத்தில் அடைத்து வைத்திருந்தான். பூமித்தாய் பெருமாளை வேண்டிக்கொள்ள....பெருமாள் வராக அவதாரம் எடுத்து பூமியை மீட்டு வந்து சுயம்புவாய் தோன்றிய ஸ்தலம். அதனால் மூலவர் சாலிக்ராம ரூபத்தில் மனித உடலும்...பன்றி முகத்துடன் காட்சி அளிக்கிறார். உடல் மேற்கு நோக்கியும்,முகம் தெற்கு நோக்கியும் இருக்கும்.மேலும் அதிசயமாய்....இது இந்து முஸ்லீம் ஒருமைப்பாட்டுக்கு எடுத்துக்காட்டாய் விளங்கும் ஒரு ஸ்தலம். சோழர்களால் கட்டப்பட்டு பின்னாளில் அச்சுதப்ப நாயக்கரால் விரிவுபடுத்தப்பட்ட சரித்திர சான்றுகள் உள்ள புராதான கோயில்.
லதாவோடு சேர்ந்து சாருமதியும் மனம் உருக வேண்டிக்கொண்டாள். ஒரு மாதம் ஓடி விட்டது.
"சாரு...சாரு... இந்த மாதம் பீரியட்ஸ் தள்ளி போயிருக்குது..."
" கடவுளே....நல்ல செய்திதான். கொஞ்சம் யூரின் பிடிச்சு கொடு லதா..."
'கார்ட் டெஸ்ட்' செய்த சாருமதி .....மனம் நிறைந்த சந்தோஷத்தோட ' வாழ்த்துக்கள் லதா' என்று ஓடி வந்து லதாவை கட்டி...இறுக அணைத்து முத்தம் கொடுத்து..... ' Congrads ....சித்தார்த்தன்......' என்று அவன் கையை பிடித்து குலுக்கினாள். அவள் முதுகில் எதோ குறு...குறு...என்று கூச சட்டென்று அவன் கையை விட்டுவிட்டு விலகினாள். லதாவோ அதை கண்டும்காணாதது போல் ரசித்தாள்.ஒரு மந்தகாச சிரிப்பு அவள் இதழோரத்தில் அரும்பியது.
அடுத்து வந்த ஒன்பது மாதங்கள்....என்னவோ தானே ' ப்ரெக்னென்ட்' ஆனா மாதிரி, பாத்து...பாத்து... லதாவை கவனித்துக்கொண்டாள். எல்லோரும் வியக்கும்படி வளைகாப்பும் செய்து வைத்தாள். அது மட்டும் அல்லாது ரெகுலர் செக்கப்.....பிபி செக்கப்....எடை செக்கப்....அயர்ன் போலிக் ஆசிட் மாத்திரைகள்......என்று விழுந்து....விழுந்து....கவனித்துக்கொண்டாள். ஸ்கேன் செய்து பார்த்த பொது...'பிரீச்' என்று தெரிய வந்தது. பிபியும் கூடி இருந்தது. 'லேட் ப்ரெக்னென்சி காம்ப்லிகேசன்'....கடவுள் மேல் பாரத்தை போட்டுவிட்டு....இரவும் பகலும்....ஒரு தாயைப்போல பார்த்துக்கொண்டாள்.
லதாவுக்கு வலி எடுக்க ஆரம்பித்தது. துடிக்க ஆரம்பித்துவிட்டாள். அந்த வலியிலும் சாருமதியிடம் எதோ சொல்ல முயன்றாள். அவளை சிசேரியனுக்காக ஆபரேஷன் தியேட்டருக்குள் கொண்டு செல்வதற்கு முன்....
"சாரு......எனக்கு ஒரு உதவி செய்வாயா....?'
" சொல்லு லதா....நான் என்ன செய்யணும்?"
" கண்டிப்பா செய்வாயா...?"
" இத பார் இப்ப பேசற பேச்சா இது....மனச போட்டு ரொம்ப அலட்டிக்காத..இப்பதான் நீ ரொம்ப கூலாவும்....நம்பிக்கையோடும் இருக்க வேண்டிய நேரம்....பிள்ளை பொறக்கட்டும். எதுவா இருந்தாலும் அப்புறமா பேசிக்கலாம்...."
"இல்ல சாரு.....இப்பவே நான் சொல்லியாகணும்...."
" சரி....சொல்லு...."
" எனக்கு ரெண்டேரெண்டு ஆசைதான்....எனக்கு பொறக்கும் குழந்தைக்கு லதான்னே பேர் வைக்கணும்."
"அப்புறம்......."
"அப்புறம்......அப்புறம்.....ஓன் பேரையும் மாத்திக்கணும்......"

தொடரும்

எழுதியவர் : ஜீவன் (மகேந்திரன்) (23-Mar-22, 10:05 pm)
சேர்த்தது : ஜீவன்
பார்வை : 45

மேலே